புது ரூல்ஸ்.. ரேஷன் கார்டு முதல் பான் கார்டு வரை.. ஜனவரி 1 முதல் அமல்.. ரெடியா இருங்க மக்களே!
2025 முடிந்து 2026 தொடங்கும் வேலையில் வங்கி சேவைகள், பான் கார்டு, ரேஷன் கார்டு, ரீசார்ஜ் கட்டணங்கள் வரை பல புதிய விதிகள் (New rules) நாட்டில் அமலுக்கு வரலாம். குறிப்பாக இந்த புதிய மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முதல் பணப்பரிவர்த்தனை வரை பலவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.பான் கார்டு: ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களது வங்கி மற்றும் அரசு சேவைகளுக்கு பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. குறிப்பாக பான் கார்டு (pan card) மற்றும் ஆதார் கார்டு (aadhaar card) இணைக்கப்படாவிட்டால் சேவைகள் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பான் எண் மட்டும் முடக்கப்பட்டால் உங்களால் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது. டீமேட் கணக்கையும் தொடங்க முடியாது. இதனால் நீங்கள் பங்குச் சந்தையிலோ அல்லது ஈடிஎப்ஃகளிலோ வர்த்தகம் செய்ய முடியாது. அதேபோல் ரூ.50,000-க்கு மேல் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்கவும் பான் தேவைப்படுகிறது.
அரசு முக்கிய திட்டங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கும் பான் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. பான் கார்டு இல்லாமல் எந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் பான் எண் இல்லாமல் வங்கிகளிடமிருந்தோ அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடன் கூட பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.50,000-க்கு மேல் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளைச் செய்ய விரும்பினால், செயல்பாட்டில் உள்ள பான் எண் இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
2. யுபிஐ: இந்தியாவில் டிஜிட்டல் மோசடியை தடுக்க யுபிஐ, மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப்படும். மேலும் சிம் சரிபார்ப்பு மற்றும் டிஜிட்டல் அடையாளத்திற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனேவ இதன் மூலம் மோசடி வழக்குகளைக் குறைக்க முடியும்.
3. சமூக ஊடக பயன்பாடு: சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகளின்படி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக பயன்பாடு தொடர்பாக அரசாங்கம் அடுத்த ஆண்டு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தக்கூடும். அதுவும் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்த வயது சரிபார்ப்பு மற்றும் பெற்றோர் கட்டுப்பாடுகள் போன்ற அம்சங்கள் கட்டாயமாக்கப்படலாம்.
4. ரேஷன் கார்டு: வரும் 2026 முதல் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றம் வருகிறது. குறிப்பாக ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் இனி அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்லாமல், வீட்டில் இருந்த விண்ணப்பிக்க முடியும். இதனால் நேரமும் செலவையும் சேமிக்க முடியும்.

5. ரீசார்ஜ் கட்டணங்கள்: தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதாவது ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 2026-ம் ஆண்டு அமலுக்கு வரும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
6. சிபில் ஸ்கோர்: சிபில் போன்ற கிரெடிட் பீரோக்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக வாரந்தோறும் அப்டேட் செய்ய உள்ளன. அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிய காரணத்தால் உங்களின் கடன் அப்டேட் வங்கிகளுக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் இனிமேல் கடன் தகுதி மற்றும் கடன் வரலாறு குறித்த தகவல்கள் உடனுக்குடன் வங்கிகளுக்குத் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications








