புது ரூல்ஸ்.. டிச.1 முதல் அமல்.. Jio, Airtel, Vi, BSNL-னு எல்லா சிம் கார்டுக்கும் பொருந்தும்.. TRAI அதிரடி!
ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) என இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய புதிய விதிகள் வருகிற 2024 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
டிராய் (TRAI) என்று அறியப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, இந்த புதிய விதிகளை கடந்த 2024 நவம்பர் 1 ஆம் தேதி முதலே அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்ததும், பின்னர் அது டிசம்பர் 1 ஆம் தேதியாக மாற்றப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக இம்முறை எந்தவிதமான ஒத்திவைப்பும் இருக்காது; கண்டிப்பாக அமலுக்கு வரும் என்பது போல் தெரிகிறது.

அப்படி என்ன விதிகள் அமலுக்கு வரும்? டிசம்பர் 1 ஆம் தேதி முதல், ஒடிபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட்கள் உட்பட, கமர்சியல் மெசேஜ்களை 'ட்ரேஸ்' செய்யும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. அதாவது கமர்ஷியல் மெசேஜ்களை கண்காணிக்க முடியும் என்பதை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (ஜியோ தொடங்கி பிஎஸ்என்எல் வரை அனைத்தும்) உறுதி செய்ய வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான ட்ராயின் இந்த புதிய விதி ஆனது வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்துக்கும் பொருந்தும். இதன் மூலம் ஸ்பேம் மெசேஜ்களை கட்டுப்படுத்தலாம் என்றும், மெசேஜிங் சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம் என்றும் ட்ராய் நம்புகிறது.
இதற்கு இணங்க தவறிய நிறுவனங்கள் 2024 நவம்பர் 30 ஆம் தேதி வரையிலாக தினசரி நினைவூட்டல்களை பெறுவார்கள் என்றும், 2024 டிசம்பர் 1 ஆம் தேதி முதல், வரையறுக்கப்படாத அல்லது பொருந்தாத டெலிமார்கெட்டர் செயின்களை கொண்ட மெசேஜ்கள் நிராகரிக்கப்படும் என்றும் டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மெசேஜ் டிரேசிபிலிட்டியில் உள்ள சாத்தியமான இடையூறுகள் மற்றும் சிக்கல்கள் குறித்து டெலிகாம் ஆபரேட்டர்கள் எழுப்பிய கவலைகளை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதிக்கு அமலுக்கு வரவிருந்த இந்த புதிய விதிகள் டிசம்பர் 1-க்கு ஒத்திவைக்கப்பட்டது. டெலிகாம் ஆப்ரேட்டர்களின் கூற்றுப்படி, வங்கிகள் மற்றும் டெலிமார்க்கெட்டர்கள் உட்பட பல வணிகங்கள் ஆனது மெசேஜ் டிரேசிபிலிட்டிக்கான தொழில்நுட்ப ஆதரவை கொண்டிருக்கவில்லை.
அதற்கு முன்பாகவே மெசேஜ் டிரேசபிலிட்டி விதியை அமல்படுத்துவது பெரிய அளவிலான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று டெலிகாம் நிறுவனங்கள் எச்சரித்தன. ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது முதல் பார்சல்களை டெலிவரி செய்வது வரையிலாக பல்வேறு சேவைகளுக்கு ஒடிபி மெசேஜ்கள் முக்கிய தேவையாக உள்ளது. அதில் "தொழில்நுட்ப ரீதியாக 100% முழுமை அடையாத" மெசேஜ் டிரேசிபிலிட்டியை கொண்டு வந்தால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்திக்கலாம் என்று டெலிகாம் நிறுவனங்கள் முறையிடுகின்றன.
தொழில்துறை மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 1.5 முதல் 1.7 பில்லியன் கமர்ஷியல் மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. 1.8 மில்லியனுக்கும் அதிகமான தொலைத்தொடர்பு ஆதாரங்களை துண்டித்தல் மற்றும் தவறான செய்திகள் பரப்பப்படுவதை எதிர்த்து 800 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பல வகையான பாதுகாப்பு நடைமுறைகளையும் டிராய் செய்து வருகிறது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் "140xx" சீரிஸில் தொடங்கும் அனைத்து டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளும் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பிற்காக டிஎல்டி இயங்குதளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து அமலுக்கு வரும் மெசேஜ் டிரேசபிலிட்டி விதியும் கூட, வடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








