புது ரூல்ஸ்.. நவ.1 முதல் அமல்.. இனிமேல் இதை செய்ய UPI பேமண்ட் கட்டாயம், UPI ID-ஐயும் கொடுக்க வேண்டும்.. எங்கே?
செபி (SEBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேன்ஜ் போர்ட் ஆஃப் இந்தியானது (Securities and Exchange Board of India), கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கு (Public issues of debt securities) விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
2024 நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின் கீழ், ரூ.5 லட்சம் வரையிலான தொகைகளுக்கு, இடைத்தரகர்கள் மூலம் விண்ணப்பிக்கும் தனிப்பட்ட முதலீட்டாளர்கள், ஃபண்ட் பிளாக்கிங் (Fund blocking) செய்வதற்கு யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (Unified Payments Interface - UPI) பயன்படுத்த வேண்டும்.

செபியின் இந்த புதிய விதிகள், பங்கு தரகர்கள் (Stock brokers), சிண்டிகேட் உறுப்பினர்கள் (syndicate members), பதிவாளர்கள் (registrars) அல்லது டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் (depository participants) போன்ற இடைத்தரகர்கள் மூலம், கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கு விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு கட்டாயமாக இருக்கும். இப்படிச்செய்யும் முதலீட்டாளர்கள், இடைத்தரகர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஏலப் படிவத்தில், தங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடியை (UPI ID Linked with Bank Account) வழங்க வேண்டும்.
இதோடு சேர்த்து வழங்குநர்கள் நிதியை அணுக எடுக்கும் நேரத்தை குறைக்கும் நோக்கத்தின் கீழும் சில புதிய விதிகளை செபி அறிமுகப்படுத்தி உள்ளது. திருத்தப்பட்ட விதிகளின் கீழ், கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கான குறைந்தபட்ச சந்தா காலமானது 3 வேலை நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது
கூடுதலாக, விலைப்பட்டியல் அல்லது மகசூல் திருத்தங்களின் விஷயத்தில், ஏலக் காலத்தை இப்போது 3 நாட்களுக்கு பதிலாக 1 வேலை நாளுக்கு நீட்டிக்க முடியும். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட பத்திரங்களை கொண்ட வழங்குநர்களுக்கு, வரைவு சலுகை ஆவணங்களில் பொது கருத்துகளுக்கு அனுமதிக்கப்படும் நேரம் 1 நாளாக குறைக்கப்பட்டுள்ளது. பிற வழங்குநர்களுக்கு, இந்த காலம் 5 நாட்களாக குறைக்கப்படுகிறது.
இதுபற்றி பேசுகையில், கார்ப்பரேட் இணக்க நிறுவனமான எம்எம்ஜேசி அன்ட் அசோசியேட்ஸின் நிறுவனர் ஆன மகரந்த் எம் ஜோஷி கூறுகையில், ரூ.5 லட்சம் வரையிலான ஏலங்களுக்கு யுபிஐ-ஐ கட்டாயமாக்குவது செயல்முறையை எளிதாக்கும், மேலும் அதிக சில்லறை முதலீட்டாளர்களை கடன் பிரிவில் ஈர்க்கும் என்று கூறியுள்ளார்.
இதேபோல ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது வங்கிகள் வழியிலான பணப்பரிவர்த்தனை தொடர்பான புதிய விதிகளை (New bank money transfer rules) வெளியிட்டு, அவைகளும் நவ.1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளது.இவைகள் டிஎம்டி (DMT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உள்நாட்டு பணப் பரிமாற்ற (Domestic Money Transfer) கட்டமைப்பிற்கான புதிய விதிகள் ஆகும்.
இதன்கீழ் வங்கி உள்கட்டமைப்பு (Banking infrastructure), கட்டண முறைகள் (Payment systems) மற்றும் கேஒய்சி (KYC) எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் (Know Your Customer) ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் "இனி அவ்வளவு சுலபமாக வங்கிகள் வழியாக பணம் அனுப்பி விட முடியாது" என்கிற சூழ்நிலை உருவாகும் என்பது போல் தெரிகிறது.
ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய கட்டமைப்பின் கீழ், பணம் அனுப்பும் வங்கிகள், பணம் செலுத்தும் சேவைகளில் பயனாளிகளின் பெயர் மற்றும் முகவரி பற்றிய பதிவுகளை பராமரிக்க வேண்டும். கூடவே ரொக்கப் பணம் செலுத்தும் சேவைகளுக்கு, வங்கிகள் ஆனது கேஒய்சி உடன் சேர்த்து சரிபார்க்கப்பட்ட செல்போன் எண் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் (Officially Valid Document - OVD) ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் அனுப்புபவர்களை பதிவு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








