புது ரூல்ஸ்.. அனைத்து வங்கிகளின் இண்டர்நெட் பேங்கிங் சேவையிலும் முக்கிய மாற்றம்.. ஏப்ரல் 2025 முதல் அமல்!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் புதிய மற்றும் பிரத்யேகமான இண்டர்நெட் டொமைனை (New Internet Domain) வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அது பேங்க்.இன் (bank.in) என்கிற டொமைன் ஆகும்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், அனைத்து இந்திய கடன் வழங்குநர்களும் இந்த புதிய டொமைனுக்கு மாற வேண்டும் என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 2025 முதல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இந்திய வங்கிகளும் ஏற்கனவே உள்ள டொமைன்களுக்கு பதிலாக "பேங்க்.இன்" என முடிவடையும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் வழியிலான நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கத்தின் கீழ் அமல்படுத்தப்பட உள்ள இந்த புதிய டொமைன் ஆனது முறையான வங்கி இணையதளங்களையும், போலியான வங்கி இணையதளங்களையும் வேறுபடுத்திக் காட்ட உதவும் என்றும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு முறையான வங்கி தளங்களை எளிதாக கண்டறிய முடியும் என்றும், இதன் விளைவாக சைபர் கிரிமினல்களால் உருவாக்கப்பட்ட போலி இணையதளங்களுக்கு வாடிக்கையாளர்கள் சிக்கும் அபாயம் குறையும் என்றும் ஆர்பிஐ நம்புகிறேது.
இதேபோல என்பிஎப்சி (NBFC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non-banking financial companies) மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கும் புதிய டொமைன்அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஃபின்.இன் (fin.in) என்கிற டொமைன் ஆகும். இதுவும் டிஜிட்டல் நிதிச் சூழல் அமைப்பு முழுவதும் மோசடிகளை தடுக்கும் நோக்கத்தின் கீழ் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பேசிய போது ஆர்பிஐ ஆளுநர் மல்ஹோத்ரா, வங்கிகளும் என்பிஎப்சி-களும் தொடர்ந்து தங்கள் மோசடி கண்டறிதல் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும், சம்பவ பதிலளிப்பு வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் நிதி மோசடிகளை தடுக்க வழக்கமான பாதுகாப்பு மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த செப்டம்பர் வரை (2024 ஆம் ஆண்டின் இறுதியில் நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி) நடந்த 632,000 சம்பவங்களில், யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மோசடிகளால் மட்டும் இந்தியர்கள் ரூ.485 கோடி இழந்துள்ளனர். 2022 - 23 முதல், யுபிஐ மோசடிகளால் 2,145 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடிகளை எதிர்த்து, இந்திய அரசாங்கம் ஆனது 6,69,000 சிம் கார்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐகளையும் தடை செய்துள்ளது. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஆனது 1,700 ஸ்கைப் ஐடிகள் மற்றும் 59,000 வாட்ஸ்அப் அக்கவுண்ட்களையும் முடக்கியுள்ளது. மேலும் 9,94,000 புகார்களில் இருந்து ரூ.3,431 கோடி காப்பாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் யுபிஐ பரிவர்த்தனை ஐடி (UPI transaction ID) தொடர்பான புதிய விதியும் கூட அமலுக்கு வந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதற்காக, என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளில் "எண்ணெழுத்து" எழுத்துக்களை (Alphanumeric characters) மட்டுமே பயன்படுத்தும் படியும், சிறப்பு எழுத்துக்களை (Special characters) பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
பிப்ரவரி 1, 2025 முதல் அமலுக்கு வந்த இந்த புதிய விதியின் கீழ், எந்த யுபிஐ பேமெண்ட் ஆப்களாலும் சிறப்பு எழுத்துகளை பயன்படுத்தி பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்க முடியாது. ஒருவேளை பரிவர்த்தனை ஐடியில் சிறப்பு எழுத்துகள் உள்ள யுபிஐ ஆப்பை நீங்கள் பயன்படுத்தினால், அந்த ஆப் வழியிலான பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனை ஐடி ஆனது உங்களுடைய யுபிஐ ஐடி-யில் இருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும் இரண்டையும் ஒன்றென எண்ணி குழப்பிக்கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications








