அக்.1 முதல் அமலுக்கு வரும் 7 புதிய விதிகள்.. ஆதார் முதல் எல்பிஜி சிலிண்டர் வரை.. என்னென்ன மாறுது? இதோ விவரம்..
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பல முக்கிய விதிகள் (new rules) அமலுக்கு வருகின்றன. அதுவும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர், வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்கள், ஆதார் அப்டேட், யுபிஐ போன்றவற்றில் பல முக்கிய மாற்றங்கள் வர உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
FD புதிய விதிகள்: பெரிய தொகைக்கான ஃபிக்சட் டெபாசிட் (Bulk FD) வட்டி விகிதங்களை வங்கிகள் தினமும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று RBI புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இனி ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணிக்குள், அதிகபட்சமாக 10:10 மணிக்குள், அந்த நாளுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

இந்த விதிகள் பெரிய தொகை டெபாசிட்களுக்கு மட்டுமே பொருந்தும். வழக்கமான சில்லறை ஃபிக்சட் டெபாசிட் (Retail FD) வாடிக்கையாளர்களின் தற்போதைய வட்டி விகிதங்களில் இதனால் நேரடி மாற்றம் இருக்காது.
எல்பிஜி சிலிண்டர் விலை: எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாற்றுவது வழக்கம். கடந்த செப்டம்பர் 1-ம் தேதி 19 கிலோ வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து ரூ.2,916 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ம் தேதி பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, பிஎன்ஜி, ஏடிஎஃப் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய விலைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும்.
LPG கேஸ் சிலிண்டர் E-KYC அப்டேட்: வரும் அக்டோபர் 1 முதல், வீட்டு உபயோக LPG சிலிண்டர்களுக்கான மானியத்தைப் பெற பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் (BAA) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 27.43 கோடி செயலில் உள்ள வீட்டு LPG வாடிக்கையாளர்களில் சுமார் 89.9% பேர் ஏற்கனவே இந்த KYC நடைமுறையை முடித்துள்ளனர். இதன் மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறைக்கு இணங்கியுள்ளனர்.
ஏற்கனவே KYC செயல்முறையை நிறைவு செய்த LPG வாடிக்கையாளர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இதுவரை KYC செய்யாதவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை முடித்திருக்க வேண்டும். இல்லையெனில், விதிமுறைகளின்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய LPG மானியப் பலன் கிடைக்காது.
ஆதார் அப்டேட்: குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் ஆதார் அப்டேட் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை இலவசமாக செய்யப்படுகிறது. 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையில் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
குழந்தைக்கு 5 வயது நிறைவடைந்ததும், பின்னர் 15 வயது நிறைவடைந்ததும் இந்த அப்டேட்டை மேற்கொள்வது கட்டாயமாகும். அக்டோபர் 1 முதல் இதற்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பதால், இதுவரை பயோமெட்ரிக் ஆதார் அப்டேட் முடிக்காதவர்கள் உடனே முடித்து விடுவது நல்லது.
டிராய் புதிய விதிகள்: TRAI-ன் புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் வழங்க வேண்டும். தற்போது பல நிறுவனங்கள் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வழங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 30 நாள் திட்டங்கள் கிடைப்பதன் மூலம், ஆண்டுக்கு 12 முறை மட்டுமே ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பு ஏற்படும். மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்து கொள்ளவும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும்.
டேட்டா வசதி தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக குறைந்த கட்டணத்தில் குரல் அழைப்பு மற்றும் SMS மட்டும் கொண்ட சிறப்பு திட்டங்களை வழங்கவும் TRAI அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, முதியவர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் சாதாரண மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டங்கள் உதவியாக இருக்கும். இதன் மூலம் தங்களது தேவைக்கு ஏற்ப குறைந்த செலவில் மொபைல் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
யுபிஐ புதிய விதிகள்: வரும் அக்டோபர் 15 முதல் UPI பரிவர்த்தனைகளில் புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளது. ரூ.2,000-க்கு மேல் வாடிக்கையாளர்கள் வணிகர்களுக்கு செய்யும் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதேபோல் ரூ.75,000 அல்லது அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே இருக்கும். முக்கியமாக, சாதாரண வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. UPI மூலம் பணம் பெறும் வணிகர்களே இந்தக் கட்டணத்தை ஏற்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய விதிகள்: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பதிவு செய்வதில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்வதில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் இந்த காலத்திற்குள் எளிதாகப் பதிவு செய்யலாம். ஆனால், தாமதமாகப் பதிவு செய்தால் கூடுதல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1 ஆண்டுக்கு மேல் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியரின் உத்தரவு தேவைப்படும். 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானால், முதல் வகுப்பு நீதித்துறை நடுவரின் உத்தரவு கட்டாயம். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் முழுமையாகச் சரிபார்க்கப்பட்ட பிறகே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications
