புது ரூல்ஸ்.. நவம்பர் 1 முதல் அமல்.. யுபிஐ, காலர் ஐடி, ஃபாஸ்டேக்.. ஒரே நேரத்தில் வரும் 7 முக்கிய மாற்றங்கள்!
அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் 1 முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, யுபிஐ பணப் பரிவர்த்தனை, செல்போன் அழைப்புகளில் பெயர் காட்டும் வசதி மற்றும் ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகள் தொடர்பாகப் புதிய விதிமுறைகள் (New Rules) குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றங்கள் என்னென்ன? பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ!
1.கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்!
நவம்பர் 1 முதல் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பயன்பாட்டுச் சேவைகளுக்கான கட்டணங்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது, குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் 1% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். மேலும், சில சேவைகளுக்கான ரிவார்டு புள்ளிகள் பெறுவதற்கான வரம்புகளும் மாற்றப்படலாம். எனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் புதிய விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு, கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்கத் திட்டமிடுவது அவசியமாகும்.

2. சமையல் எரிவாயு இ-கேஒய்சி கட்டாயம்!
மானிய விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பு அவசியமாகியுள்ளது. இந்த நடைமுறை 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இ-கேஒய்சி செய்தவர்கள் மீண்டும் அதைச் செய்ய வேண்டியதில்லை.
இ-கேஒய்சி அப்டேட் செய்யவில்லை என்றால், இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் ஒன் செயலி மூலமாகவும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் ஹலோ பிபிசிஎல் செயலி மூலமாகவும், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் ஹெச்பி பே செயலி மூலமாகவும் இந்த அப்டேட்-ஐ செய்து முடிக்கலாம். மேலும், தங்களது எரிவாயு வினியோகஸ்தரை நேரில் சந்தித்தும் இ-கேஒய்சி செய்யலாம்.
தகுதியுள்ள நுகர்வோர் இ-கேஒய்சி செய்யாமல் இருந்தால், மானிய விலையில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படலாம். எனவே, தகுதியுள்ளவர்கள் விரைவில் இந்தச் சரிபார்ப்பை முடித்துக்கொள்வது அவசியம். ஆதார் சரிபார்ப்பைச் செய்ய விரும்பாதவர்கள், தங்களது எரிவாயு நிறுவனத்திடம் அதுகுறித்து தெரிவிக்கலாம். மேலும் ஆதார் சரிபார்ப்பைச் செய்ய விரும்பாதவர்கள் மானியமின்றி சந்தை விலையில் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
3.வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு!
வணிகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31-ல் இருந்து நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யாதவர்களுக்கு நிலுவைத் தொகைக்கு வட்டி விதிக்கப்படலாம். மேலும், வணிகத்தில் ஏற்படும் இழப்புகளை அடுத்த நிதியாண்டுகளுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பும் பாதிக்கப்படலாம். எனவே, வரி செலுத்துவோர் காலக்கெடுவுக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்வது அவசியமாகும்.
4. நவம்பர் 1 முதல் சிலிண்டர் விலை மாறுமா?
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மறுஆய்வு செய்வது வழக்கம். சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி, வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.71.50 உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. விமான எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி வீட்டு உபயோக மற்றும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், புதிய விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே உறுதியான விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
5.யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்
வணிகம் சார்ந்த யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாக உள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை MDR கட்டணம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது அல்லது கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும்போது எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது, சொந்த வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை மாற்றுவது போன்ற தனிநபர் யுபிஐ பரிவர்த்தனைகள் வழக்கம்போல இலவசமாகவே தொடரும். எனவே, சாதாரண யுபிஐ பயனர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தக் கட்டணம் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அறிவிப்பு தீபாவளிக்குப் பிறகு, அதாவது நவம்பர் 8-க்குப் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய விதிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வர்த்தகர்கள் கவனித்து வருவது அவசியமாகும்.
6. காலர் ஐடி
நவம்பர் 1 முதல், செல்போனுக்கு வரும் அழைப்புகளில் அழைப்பவரின் பெயரைக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. CNAP (Calling Name Presentation) எனப்படும் இந்தச் சேவையின் மூலம், அழைப்பவரின் உண்மையான பெயர் செல்போன் திரையில் தோன்றும். முதற்கட்டமாக 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளில் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு, அழைப்பவரின் பெயருக்குப் பதிலாக "International Call" என்ற வாசகம் திரையில் காட்டப்படும். அதேபோல், வணிக மற்றும் விளம்பர அழைப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ வர்த்தகப் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி மூலம் போலி அழைப்புகள், ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் தேவையற்ற விளம்பர அழைப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் கண்டு, மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.

7.புதிய வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில், 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு புதிய வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் பாஸைப் புதுப்பிப்பதற்குப் பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயன்படுத்தலாம். வணிகப் பயன்பாடற்ற சொந்த கார், ஜீப் மற்றும் வேன் வைத்திருப்பவர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். நகர எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டு கட்டணம் ரூ.1,500 ஆகவும், நகர எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ரூ.3,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாஸைப் பெற, சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பதற்கான முகவரிச் சான்று, வாகனப் பதிவுச் சான்று மற்றும் செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக் ஆகியவை அவசியம். விண்ணப்பதாரரின் பெயரிலேயே வாகனப் பதிவு இருக்க வேண்டும். தேவையான ஆவணங்களைச் சுங்கச்சாவடி அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பித்துப் பாஸ் பெறலாம். டாக்ஸி போன்ற வணிக வாகனங்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. மேலும், இந்தப் பாஸை குறிப்பிட்ட ஒரு சுங்கச்சாவடியில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாற்றுப் பாதை வசதி உள்ள இடங்களுக்கும், சில எக்ஸ்பிரஸ் சாலைகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது.


Click it and Unblock the Notifications
