நவம்பர் 1 முதல் புது ரூல்ஸ்.. யுபிஐ முதல் ஃபாஸ்டேக் வரை.. என்னென்ன மாற்றங்கள்? இதோ முழு விவரம்..
அக்டோபர் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நவம்பர் 1 முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய விதிமுறைகள் (New Rules) அமலுக்கு வரவுள்ளன. குறிப்பாக, யுபிஐ, எல்பிஜி சிலிண்டர் விலை, ஃபாஸ்டேக் உள்ளிட்ட முக்கிய சேவைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இந்த முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
1. இ-கேஒய்சி அப்டேட்
மானிய விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்படி, இந்த நடைமுறை 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே இ-கேஒய்சி செய்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை.

ஒருவேளை இ-கேஒய்சி அப்டேட் செய்யவில்லை என்றால், இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் ஒன் செயலி மூலமாகவும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் ஹலோ பிபிசிஎல் செயலி மூலமாகவும், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் ஹெச்பி பே செயலி மூலமாகவும் இந்தச் அப்டேட்-ஐ செய்து முடிக்கலாம். மேலும், தங்களது எரிவாயு வினியோகஸ்தரை நேரில் சந்தித்தும் இ-கேஒய்சி செய்யலாம்.
தகுதியுள்ள நுகர்வோர் இ-கேஒய்சி செய்யாமல் இருந்தால், மானிய விலையில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படலாம். எனவே, தகுதியுள்ளவர்கள் விரைவில் இந்தச் சரிபார்ப்பை முடித்துக்கொள்வது அவசியம். ஆதார் சரிபார்ப்பைச் செய்ய விரும்பாதவர்கள், தங்களது எரிவாயு நிறுவனத்திடம் அதுகுறித்து தெரிவிக்கலாம். அத்தகையவர்கள் மானியமின்றி சந்தை விலையில் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
2.சிலிண்டர் விலை
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஆய்வு செய்து மாற்றம் செய்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்து இந்த விலை மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சில மாதங்களில் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.71.50 உயர்த்தப்பட்டது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. விமான எரிபொருள் விலையும் லிட்டருக்கு ரூ.16 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
3.யுபிஐ கட்டணம்?
இந்தியாவில் வணிகம் சார்ந்த யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாக உள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை MDR கட்டணம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது அல்லது கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும்போது எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது, சொந்த வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை மாற்றுவது போன்ற தனிநபர் யுபிஐ பரிவர்த்தனைகள் வழக்கம்போல இலவசமாகவே தொடரும். எனவே, சாதாரண யுபிஐ பயனர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அறிவிப்பு தீபாவளிக்குப் பிறகு, அதாவது நவம்பர் 8-க்குப் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய விதிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வர்த்தகர்கள் கவனித்து வருவது அவசியமாகும்.
4.செல்போனில் காலர் ஐடி
வரும் நவம்பர் 1 முதல், செல்போனுக்கு வரும் அழைப்புகளில் அழைப்பவரின் பெயரைக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. CNAP (Calling Name Presentation) எனப்படும் இந்தச் சேவையின் மூலம், அழைப்பவரின் உண்மையான பெயர் செல்போன் திரையில் தோன்றும். முதற்கட்டமாக 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளில் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு, அழைப்பவரின் பெயருக்குப் பதிலாக "International Call" என்ற வாசகம் திரையில் காட்டப்படும். அதேபோல், வணிக மற்றும் விளம்பர அழைப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ வர்த்தகப் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய வசதி மூலம் போலி அழைப்புகள், ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் தேவையற்ற விளம்பர அழைப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் கண்டு, மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.

5.ஃபாஸ்டேக்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில், 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு புதிய வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் பாஸைப் புதுப்பிப்பதற்குப் பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயன்படுத்தலாம். வணிகப் பயன்பாடற்ற சொந்த கார், ஜீப் மற்றும் வேன் வைத்திருப்பவர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். நகர எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டு கட்டணம் ரூ.1,500 ஆகவும், நகர எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ரூ.3,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாஸைப் பெற, சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பதற்கான முகவரிச் சான்று, வாகனப் பதிவுச் சான்று மற்றும் செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக் ஆகியவை அவசியம். விண்ணப்பதாரரின் பெயரிலேயே வாகனப் பதிவு இருக்க வேண்டும். தேவையான ஆவணங்களைச் சுங்கச்சாவடி அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பித்துப் பாஸ் பெறலாம். டாக்ஸி போன்ற வணிக வாகனங்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. மேலும், இந்தப் பாஸை குறிப்பிட்ட ஒரு சுங்கச்சாவடியில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாற்றுப் பாதை வசதி உள்ள இடங்களுக்கும், சில எக்ஸ்பிரஸ் சாலைகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது.


Click it and Unblock the Notifications
