யுபிஐ, எல்பிஜி, பான் கார்டு: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இன்று முதல் எல்பிஜி, யுபிஐ , பான்கார்டு, வங்கி சேவை கட்டணம் தொடர்பான புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் பொதுமக்களின் அன்றாட நிதி பரிவர்த்தனைகள் மற்றும் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலிண்டர் விலை: வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கடந்த மாத தொடக்கத்திலேயே வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

குறிப்பாக சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 46 ரூபாய் உயர்ந்து ரூ.3283-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சிலிண்டர் விலை 4 முறை உயர்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்திருக்கிறது. அதேபோல, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 928.50 ரூபாயக தொடர்கிறது.
யுபிஐ செயலிகளில் புதிய விதிமுறை: ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களின் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்படுவதைத் தடுக்க, தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) இன்று முதல் புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ (UPI) செயிலிகள் மூலம் பணம் அனுப்பும் முன், பெறுநரின் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான பெயர் பயனர்களுக்குத் தெளிவாகக் காட்டப்படும். இந்த நடவடிக்கை, போலி OR குறியீடுகள் மற்றும் தவறான கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்படும் சம்பவங்களைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பான் கார்டு அவசியம்: தற்போது வாடிக்கையாளர்களுக்கு பான் கார்டு சமர்ப்பிக்கும் தேவையில் தளர்வு வழங்கப்பட உள்ளது. உதாரணமாக, ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் செய்யப்படும் டெபாசிட் பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு கட்டாயமாக இருக்காது. ஆனால் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உயர் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான சொத்துப் பதிவுகளுக்கு பான் கார்டு எண் சமர்ப்பிப்பது தொடர்ந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வங்கி சேவைக் கட்டணங்கள்: வங்கிகள் வழங்கும் மாதாந்திர இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகள் (3 முதல் 5 முறை) இனி மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்படும். குறிப்பாக இந்த வரம்பை தாண்டிய பிறகு மேற்கொள்ளப்படும் பணம் எடுத்தல், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பேலன்ஸ் சரிபார்ப்பு போன்ற சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.
எல்பிஜி மற்றும் பிஎன்ஜி விதிகள்: வீடுகளில் எல்பிஜி (LPG) சிலிண்டருக்கு பிறகு தற்போது குழாய்வழி எரிவாயு (PNG) இணைப்பைப் பெறும் நுகர்வோருக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய விதிகளின் கீழ், ஒரு வீட்டு உபயோக நுகர்வோர் பிஎன்ஜி எரிவாயு இணைப்பைப் பெற்றால், அவருக்கு இப்போது பின்வரும் இரண்டு தேர்வுகள் உள்ளன.
1. அதாவது பிஎன்ஜி இணைப்பு செயல்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய எல்ஜிபி இணைப்பை முழுமையாக மூடுவதற்கு எரிவாயு முகமையிடம் விண்ணப்பிக்கலாம்.
2.வாடிக்கையாளர் எல்பிஜி இணைப்பை துண்டிக்க விரும்பவில்லை என்றால், அவர் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு சிறப்பு மாற்றுச் சீட்டை (transfer voucher) பெறலாம். இந்தச் சீட்டு எதிர்காலத்தில் அவர்களின் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதை எளிதாக்கும்.

குறிப்பாக மாற்றுச் சீட்டு (transfer voucher) பயன்கள்: நகரங்களில் இருக்கும் மக்கள் பிஎன்ஜி இணைப்பைப் பெறும்போது அவர்கள் தங்களது பழைய எல்பிஜி சிலிண்டரை ஒப்படைப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஒரு சிறிய நகரம், ஊர் அல்லது பிஎன்ஜி குழாய்கள் இல்லாத பகுதிக்கு மாறும்போது ஒரு புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு நீண்ட ஆவணப் பணிகளையும் கணிசமான செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.
அரசின் புதிய மாற்றுச் சீட்டு விதி இந்த சிரமத்தை நிரந்தரமாக நீக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சீட்டை காண்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இல்லாத பகுதிகளில் தங்களது எல்பிஜி இணைப்பை அதிக சிரமம் இல்லாமல் உடனே மீண்டும் செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications