Gas முன்பதிவு செய்ய புதிய விதிகள்.. சிலிண்டர்களுக்கு மானியம் முதல் PNG வரை.. எல்லாமே மாறுது.. இதோ முழு விவரம்!
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் தொடர் பதற்றம் மற்றும் போர்ச் சூழல் காரணமாகப் பிரதமர் மோடி, எரிவாயு மற்றும் சமையல் எண்ணெய்யை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திவருகிறார். அதேபோல் சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
புதிய விதிகள்
எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், புக்கிங் விதிகளிலும் அரசு மாற்றம் செய்துள்ளது. அதாவது நகரங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் ஒருமுறைதான் ரீஃபில் செய்ய முடியும். இந்த விதியால், இனிமேல் வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது.

பிஎன்ஜி மற்றும் எல்பிஜி
புதிய விதிமுறைகளின்படி, இனி உங்களது வீட்டில் சமையலுக்காக குழாய் வழி எரிவாயு (PNG) மற்றும் எல்பிஜி சிலிண்டர் (LPG) இணைப்பையும் ஒரு முகவரியில் ஒன்றாக வைத்திருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக குழாய் எரிவாயு (PNG) இணைப்பு உள்ளவர்கள், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர்களை வைத்திருக்கவோ, புதிய ரீஃபில் முன்பதிவு செய்யவோ முடியாது. மேலும் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் பிஎன்ஜி வாடிக்கையாளர்கள், தங்களது இணைப்பை உடனடியாக கியாஸ் விநியோக நிறுவனங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
சிலிண்டர்களுக்கு மானியம்
சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானியத்தை நிறுத்துவது தொடர்பாக முக்கிய வேலைகளும் நடந்துவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படலாம் என்ற தகவல் பரவி வருவதால், பலரும் குழப்பத்தில் உள்ளனர். அதிலும் 7 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் மானியம் நிறுத்தப்படும்" என்ற குறுந்தகவல் பலரது போன்களுக்கு வரத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
அதாவது ஒரு கட்டத்தில் 300 ரூபாயாக இருந்த மானியம் தற்போது மிகவும் குறைந்த அளவாக மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மானியம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு வருமான அடிப்படையிலான கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த குடும்பத்திற்கு எல்பிஜி மானியம் வழங்கப்படாது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தான் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்கள் ஆய்வு செய்வதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தை தாண்டும் குடும்பங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அதுவும் அந்த குறுந்தகவலில், உங்களது குடும்பத்தின் வருமானம் மானியத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க எண்ணெய் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணும் வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக, குறிப்பிட்ட நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் பதில் அளிக்காவிட்டால், மானியம் தானாகவே நிறுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தற்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Indane-HP எச்சரிக்கை
சமீபத்தில் வெளியான தகவலின்படி, மோசடி கும்பல் LPG DAC கோட் மோசடி என்ற புதிய வழியில் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். எனவே Indane மற்றும் HP Gas போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
அதன்படி வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றில் போலி மெசேஜ் ஒன்று அனுப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அதுவும் மோசடிக்காரர்கள் உங்களது சிலிண்டர் ரத்து செய்யப்படும் அல்லது உங்கள் மானியம் நிறுத்தப்படும் எனவும், இந்த இணைப்பில் DAC/OTP-ஐ உள்ளிடவும் என மிரட்டல் செய்திகளை உங்களுக்கு அனுப்பக்கூடும். ஒருவேளை அந்த ஓடிபி-ஐ நீங்கள் தெரிவித்தால் உங்களது போனில் உள்ள முக்கிய விவரங்கள் மற்றும் பணத்தை இழக்க நேரிடும். ஆனால் இதை இதைத் தவிர்ப்பதற்காக, நிறுவனங்கள் சில விஷயங்களை அறிவுறுத்துகின்றன.

உண்மையான செய்திகளை கண்டறிவது எப்படி?
HP Gas வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் அதிகாரப்பூர்வ செய்திகள் எப்போதும் "VM-HPGASc-S" போன்ற அனுப்புநர் பெயருடன் வரும். குறிப்பாக அவற்றில் 4-இலக்க ஓடிபி அடங்கியிருக்கும். அதேபோல் HP ஊழியர்கள் ஒருபோதும் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப்பில் OTP-களைக் கேட்பதில்லை.
இன்டேன் செய்தியானது 'VK-INDANE' அல்லது 'VM-INDANE' போன்ற ஒரு ஐடியுடன் வருகிறது. அதில் 6 இலக்க DAC குறியீடு அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் உங்களுக்கு வரும் 4-இல்ல ஓடிபி-ஆக இருந்தாலும் சரி அல்லது 6-இலக்க DAC குறியீடாக இருந்தாலும் சரி, சிலிண்டருடன் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் விநியோகஸ்தரிடம் மட்டுமே அதைச் சொல்ல வேண்டும். அதற்கு முன்பு இந்த எண்ணை ஒருபோதும் போனில் யாரிடமும் பகிர வேண்டாம்.
நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்யாமலும், டெலிவரி அல்லது குறியீடு குறித்த செய்தி வந்தால் அதை உடனே நீக்கிவிடவும்.


Click it and Unblock the Notifications