PF கணக்கில் இருந்து இனி முழு பணத்தையும் எடுக்கலாம்.. புதிய விதிகள் முழு விவரம்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் பிஎப் பணத்தை எடுப்பது என்பது பலருக்கும் சவாலான காரியமாக இருந்தது. காரணம் என்னவென்றால், விதவிதமான விதிமுறைகள், அடிக்கடி நிராகரிக்கப்படும் கோரிக்கைகள் என பல இருந்தன. ஆனால் இந்த சிரமங்கள் அனைத்தையும் போக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) விதிமுறைகளை மொத்தமாக எளிமைப்படுத்தியுள்ளது.
அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தான் இப்போது உறுப்பினர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளன. பழைய விதிமுறைகளின்படி, பிஎப் (PF) பணத்தை எடுக்க 13 விதமான பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு தேவைக்கும் 2 முதல் 7 ஆண்டுகள் வரை வேலை பார்த்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதுவும் ஊழியரின் பங்களிப்பை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் இருந்தது.

புதிய விதிமுறை
ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, எல்லா வகையான தேவைகளுக்கும் வெறும் 12 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு வேலை பார்த்திருந்தாலே போதுமானது. குறிப்பாக ஊழியரின் பங்களிப்பு மட்டுமின்றி நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் வட்டி என மொத்த தொகையில் 75 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்.
100 சதவீதம் பணம்
ஒருவர் 12 மாதங்கள் வேலையை முடித்த பிறகு கீழே உள்ள 5 முக்கிய காரணங்களுக்காகத் தகுதியான தொகையில் 100 சதவீதம் வரை எடுக்க அனுமதி உண்டு.
மருத்துவம்: ஊழியர்கள் அல்லது ஊழியர்களின் குடும்பத்தினருக்கோ சிகிச்சை பெற ஆண்டுக்கு 3 முறை வரை எடுக்கலாம்.
கல்வி: சொந்த மேற்படிப்பு அல்லது குழந்தைகளின் படிப்பிற்கு மொத்த பணிக்காலத்தில் 10 முறை எடுக்கலாம்
திருமணம்: ஊழியர்கள் அல்லது ஊழியர்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்ய 5 முறை வரை எடுக்கலாம்.
வீடு: வீடு வாங்குதல், கட்டுதல் அல்லது லோன் அடைக்க 5 முறை அனுமதி கொடுக்கப்படும்.
காரணம் வேண்டாம்: எந்த காரணமும் சொல்லாமல் அவசரத் தேவைக்கு ஆண்டுக்கு 2 முறை பணம் எடுக்கலாம்.
25 சதவீதம் எடுக்க முடியாது
ஊழியர்கள் முழுப்பணத்தையும் எடுத்துவிட்டால், ஓய்வுக்காலத்தில் கையில் பணம் இருக்காது என்பதால் பாதுகாப்பிற்காக 25 சதவீதம் தொகையை EPFO அமைப்பு கணக்கிலேயே வைத்திருக்கும். குறிப்பாக பிஎப் கணக்கிற்கு வழங்கப்படும் 8.25 சதவீதம் வட்டி மூலம் உங்கள் பணம் வளர வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
அதேபோல் வேலை இழந்தவுடன் மொத்த இருப்பில் 75 சதவீதம் உடனே எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 25 சதவீதம் தொகையை ஒருவருடம் கழித்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 55 வயதிற்குப் பின்பு ஓய்வு பெறுபவர்கள் உடல் ஊனம் அல்லது நிரந்தரமாக வெளிநாடு செல்பவர்கள் 100 சதவீதம் பணத்தையும் முழுமையாக எடுக்க எந்த தடையுமில்லை.

பிஎப் எடுக்கும் புதிய விதிகள் உங்கள் பென்ஷன் (EPS) திட்டத்தைப் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 10 ஆண்டுகள் பணி முடித்தால்தான் மாதாந்திர பென்ஷன் கிடைக்கும். அவசரப்பட்டு பென்ஷன் பணத்தை முன்கூட்டியே எடுத்தால், பிற்காலத்தில் கிடைக்க வேண்டி பலன்கள் இழக்க நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, வரும் மார்ச் மாதத்திற்கு முன்பு பிஎப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி அறிமுகமாகும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதி பிஎப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








