ஒரே நேரத்தில் இறங்கும் 3 இடிகள்.. மே 1 முதல் புது ரூல்ஸ்.. சிலிண்டர் புக்கிங், டெலிவரி, விலையில் மாற்றம்!
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் "வெடித்த" மேற்கு ஆசிய மோதலின் விளைவாக உண்டான - உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை ஆனது இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த மார்ச், இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் நீடித்த இந்த சிக்கல் மே மாதத்திலும் நீடிக்கவுள்ளது.
அதாவது எல்ஜிபி கேஸ் சிலிண்டர் நெருக்கடி தொடங்கியதில் இருந்து, ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மட்டும் இல்லாமல், எல்பிஜி முன்பதிவு மற்றும் விநியோக விதிகளில் மேலும் சில மாற்றங்கள் மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன, மீண்டும் உயரக்கூடும்: அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், இந்தியா முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.60 உயர்த்தி உள்ளன.
19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ஒரே மாதத்தில் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 7 அன்று ஒரு சிலிண்டருக்கு ரூ.114.5 விலை உயர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 2026-க்கான விலை பெருநகரங்களில் ரூ.196 முதல் ரூ.218 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்விற்கு முன்னதாக, மார்ச் 1, 2026 அன்று ரூ.28 முதல் ரூ.31 வரை விலை உயர்த்தப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக மே 1, 2026 முதல் எல்பிஜி விலையில் மேலும் திருத்தம் செய்யப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதைக்கு சரியாக எவ்வளவு விலை உயரும் என்பதை கணிக்க முடியாது. மேலும், இந்தியன் ஆயில், பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனங்கள் புதிய விநியோகம் மற்றும் முன்பதிவு விதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்பதிவு இடைவெளிகள் மற்றும் ஓடிபி விநியோகம்: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்கனவே எல்பிஜி கேஸ் சிலிண்டர் முன்பதிவு கட்டமைப்பை கடுமையாக்கி உள்ளது. முன்பதிவுகளுக்கு இடையிலான இடைவெளி நகர்ப்புறங்களில் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள ஓடிபி அடிப்படையிலான விநியோக அங்கீகார முறை நிரந்தரமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் எல்பிஜி முன்பதிவுகள் ஏறத்தாழ 98% ஆக உயர்ந்துள்ள நிலையில், மானிய விலை சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், விநியோக அங்கீகார குறியீட்டின் அடிப்படையிலான விநியோகங்கள் சுமார் 94%-ஐ எட்டியுள்ளன.
ஆதார் இ-கேஒய்சி: யார் எப்போது செய்ய வேண்டும்? பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கு, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இ-கேஒய்சி-ஐ முடிக்காத எல்பிஜி நுகர்வோருக்கு மட்டுமே இந்த தேவை பொருந்தும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏற்கனவே இதை செய்துள்ள பிஎம்யுஒய் (PMUY) அல்லாத வாடிக்கையாளர்கள் இந்த செயல்முறையை மீண்டும் செய்ய தேவையில்லை. பிஎம்யுஒய் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நிதியாண்டிற்கு ஒரு முறை மட்டுமே இந்த அங்கீகாரம் தேவைப்படுகிறது. அதுவும், ஏழு முறை எரிவாயு நிரப்பப்பட்ட பிறகு, அதாவது எட்டாவது முறை நிரப்புவதிலிருந்து, இலக்கு வைக்கப்பட்ட நேரடி பண பரிமாற்ற (DBT) மானியங்களை பெறுவதற்கு மட்டுமே இது தேவைப்படும்.
பிஎன்ஜி-க்கு மாறுங்கள் அல்லது உங்கள் எல்பிஜி இணைப்பை இழக்கும் அபாயம்: எல்பிஜி பற்றாக்குறையால் ஏற்பட்ட மிக முக்கியமான கொள்கை மாற்றங்களில் ஒன்று, வீடுகளை எல்பிஜி-யிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி ஆகும். பிஎன்ஜி நுகர்வோர் ஏற்கனவே தங்கள் வீட்டு உபயோக எல்பிஜி இணைப்புகளை ஒப்படைக்க தடை செய்யப்பட்டுள்ளனர், மேலும் புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட ஒரு அரசாணை மேலும் ஒரு படி மேலே சென்றுள்ளது: ஒரு வீட்டில் எல்பிஜி வசதி இருந்தபோதிலும், அவர்கள் பிஎன்ஜி-க்கு மாறவில்லை என்றால், மூன்று மாதங்களுக்கு பிறகு எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படும். மார்ச் 2026 முதல், சுமார் 5.45 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 2.62 லட்சம் இணைப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 8.07 லட்சமாக உயர்ந்துள்ளது. சுமார் 6.14 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காக பதிவு செய்துள்ளனர்.
விநியோக நிலவரம் - உள்நாட்டு நுகர்வோருக்கு முன்னுரிமை: தொடர்ந்து நிலவி வரும் புவிசார் அரசியல் சீர்குலைவுகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு எல்பிஜி, உள்நாட்டு பிஎன்ஜி மற்றும் போக்குவரத்திற்கான சிஎன்ஜி ஆகியவற்றின் 100% விநியோகம் உறுதி செய்யப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக துறையில், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருந்து, எஃகு, ஆட்டோமொபைல், விதைகள், விவசாயம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ சிலிண்டர் விநியோகமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications