ரெடியா இருங்க.. ஏப்.1 முதல் அமல்.. 5 முக்கிய மாற்றங்கள்.. LPG விலை, PAN, ATM லிமிட், ரயில் டிக்கெட் கேன்சல்!
ஏப்ரல் 1, 2026 முதல், இந்தியா முழுவதும் பல முக்கியமான நிதி மற்றும் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான பல விதிகள் மாற உள்ளன. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள் (New Rules) ஆனது - உங்களுடைய வீட்டு செலவுகள், வங்கி பழக்கவழக்கங்கள், வரிகள் மற்றும் பயண செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு (Global uncertainties) மத்தியில், இந்த மாற்றங்கள் வருவதால், இந்த மாற்றங்கள் சிலருக்கு சற்றே கடுமையான பாதிப்புகளை கூட ஏற்படுத்தலாம். எந்தெந்த துறைகளில் / விஷயங்களில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது? இதோ விவரங்கள்:

1. எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் ஏடிஎஃப் விலைகள் மாறக்கூடும்: ஏப்ரல் 1 அன்று எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் மத்திய கிழக்கு நெருக்கடியின் காரணமாக, எல்பிஜி விநியோகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே முன்கூட்டிய விலை உயர்வுக்கு வழிவகுத்தது. இப்போது, எல்பிஜி சிலிண்டர் விலைகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்படலாம். ஏடிஎஃப் (ஏர் பியூயல்), சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி ஆகியவற்றின் விலைகளும் மாறக்கூடும், இது போக்குவரத்து மற்றும் அன்றாட செலவுகளை மேலும் பாதிக்கக்கூடும்.
2. புதிய வருமான வரி விதிகள்: பழைய 1961 சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் 2025 ஆனது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதால் ஒரு பெரிய சீர்திருத்தம் அமலுக்கு வரும். இதன்கீழ் வரி விதிகளை எளிமையாக்கவும், இணக்க சுமையை குறைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
இதன்கீழ் வரும் ஒரு முக்கிய மாற்றம் என்னவென்றால், படிவம் 16 ஒரு புதிய ஆவணத்தை கொண்டு மாற்றப்படலாம். மேலும், சம்பளம் அல்லாத வருமானத்திற்கான டிடிஎஸ்-க்கான படிவம் 16ஏ, படிவம் 131 என பெயர் மாற்றப்பட்டு, காலாண்டு தாக்கல் செய்த 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. வங்கி வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் விதிகள் மாற்றம்: எச்டிஎப்சி (HDFC), பிஎன்பி (PNB) மற்றும் பந்தன் பேங்க் (Bandhan Bank) போன்ற வங்கிகள் ஏடிஎம் விதிகளை புதுப்பித்து வருகின்றன. எச்டிஎப்சி ஆனது இனி யுபிஐ மூலம் பணம் எடுப்பதையும் இலவச ஏடிஎம் வரம்புகளில் சேர்க்கும். இது இலவச பரிவர்த்தனைகளுக்கான மொத்த எண்ணிக்கையை குறைக்கக்கூடும்.
குறிப்பிட்ட வரம்பை தாண்டிய பிறகு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படலாம். மறுபுறம் உள்ள பிஎன்பி வங்கி ஆனது சில கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பை ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை குறைத்துள்ளது. கடைசியாக பந்தன் வங்கி ஆனது பெருநகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகளையும், மற்ற பகுதிகளில் 5 பரிவர்த்தனைகளையும் அனுமதிக்கும், அதற்கு பிறகு அபராதம் விதிக்கப்படும்.
4. பான் கார்டு விதிகள் கடுமையாகலாம்: புதிய பான் விதிகளின்படி, பான் கார்டுக்கு விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க ஆதார் தவிர கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை கொண்ட விண்ணப்பதாரர்கள், புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு அவற்றை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
5. ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான செலவு அதிகரிக்கும்: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான செலவு அதிகரிக்கும். புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்குள் (4 மணி நேரத்திற்கு முன்னதாக) ரத்து செய்தால் பணம் திரும்ப தரப்படாது. 8 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் 50 சதவீதப் பணம் திரும்ப தரப்படும், அதே சமயம் 24 முதல் 72 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் 25 சதவீதப் பணம் பிடித்தம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








