மே 1 முதல் எல்லாமே மாறுது.. பான் கார்டு முதல் EPFO வரை.. வருகிறது புதிய விதிகள்.. இதோ முழு விவரம்..
மே 1 முதல் இந்தியாவில் பணம் சார்ந்த நிறைய விதிமுறைகளில் சில மாற்றங்கள் வருகின்றன. அதுவும் இந்த புதிய மாற்றங்கள் சாமானிய மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும். குறிப்பாக இந்த மாற்றங்களில் LPG சிலிண்டர் விலை உயர்வு முதல் பான் கார்டு வரை அனைத்தும் அடங்கும். இப்போது இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பான் கார்டு புதிய விதிகள்: வருமான வரித் துறை மே 1-ம் தேதி முதல் பான் கார்டுகளின் (pan card) பயன்பாடு சரிபார்ப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்துகிறது. அதுவும் இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால் உங்கள் பான் கார்டு செயலிழந்து, உங்கள் வங்கி மற்றும் வரி தொடர்பான பணிகள் பாதிக்கப்படலாம்.

அதேபோல் மே 1 முதல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டை பயன்படுத்தினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், டிடிஎஸ் (TDS) பிடித்தமும் இரு மடங்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ: எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டை (SBI Credit Card) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மே 1-தேதி முதல் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி இதற்கு முன்புவரை தனது வாடிக்கையாளர்களிடம் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைக்கு தாமதக்கட்டணம் (LPC) வசூலிக்கப்படவில்லை. ஆனால் இனி ரூ.100க்கு மேல் மற்றும் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு ரூ.100 தாமத கட்டணம் விதிக்கப்படும்.
அதேபோல் ரூ.500க்கு மேல் மற்றும் ரூ.1000 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு, தாமத கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உங்களது நிலுவைத் தொகை ரூ.1000-ஐ தாண்டினால், தாமதக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அதுவும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்த தவறினால், தாமத கட்டணம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக இரண்டு பில்லிங் சுழற்சிகளுக்கு இந்த குறைந்தபட்ச கட்டணத்தை நீங்கள் செலுத்தத் தவறினால், கூடுதலாக ரூ.100 அபராதம் சேர்க்கப்படும். நீங்கள் நிலுவை தொகையைச் செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த கூடுதல் கட்டணம் தொடரும், இதனால் தாமதங்கள் அதிக செலவை ஏற்படுத்தும்.
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அதன் உபபொருளான எல்பிஜியின் விலையும் உயர்கிறது. குறிப்பாக தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பதற்றம் காரணமாக Saudi Aramco நிர்ணயிக்கும் விலையில் மாற்றம் ஏறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் சிலிண்டர் விலை உயர வாய்ப்பு உள்ளது.
அதுவும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் வரும் மே 1-ம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலை உயர வாய்ப்பு உள்ளதாகத் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதவிர எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், புக்கிங் விதிகளிலும் அரசு மாற்றம் செய்துள்ளது. அதாவது நகரங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் ஒருமுறைதான் ரீஃபில் செய்ய முடியும். இந்த விதியால், இனிமேல் வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது.
இதுதவிர சப்ளையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர ஓடிபி அடிப்படையிலான டெலிவரி முறையை நிரந்தரமாகவும், முழுமையாகவும் கட்டாயமாக்குகிறார்கள். மேலும் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தால், அவற்றை இணைக்க அல்லது ஒன்றை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தி வருகிறது. பற்றாக்குறையைச் சமாளிக்க, போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) இன்ஸ்டா அலர்ட் எஸ்எம்எஸ் சேவைக்கான (Insta Alert SMS service) கட்டணங்களில் திருத்தத்தை அறிவித்துள்ளது. இந்த எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளுக்கான புதிய கட்டணங்கள் வருகிற மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது வழக்கமாக வங்கி பரிவர்த்தனைகள் நடக்கும்போது, பாதுகாப்பு கருதி நமது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும்.

தற்போது ஒரு குறுஞ்செய்திக்கு 20 காசுகள் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் விரைவில் வரும் புதிய மாற்றத்தின்படி இது 15 காசுகள் மற்றும் ஜிஎஸ்டி ஆகக் குறைக்கப்படும். உதாரணமாக நீங்கள் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் அலர்ட்களைப் பெறுகிறீர்கள் என்றால், இதுவரை நீங்கள் 20 ரூபாய் (கூடுதல் ஜிஎஸ்டி) செலுத்தி வந்திருப்பீர்கள். ஆனால் இனி வரும் காலங்களில் அது 15 ரூபாயாகக் குறையும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் உங்களால் ஒரு சிறிய அளவிலான தொகையைச் சேமிக்க முடியும்.
குறிப்பாக மின்னஞ்சல் (Email) வழியாகப் பெறப்படும் அலர்ட்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் இலவசமாகவே இருக்கும் என்று எச்டிஎப்சி வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு: சமீபத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த விதிகள் வரும் மே 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. இதில் சூதாட்டம் இல்லாத சாதாரண விளையாட்டுகளுக்குப் பதிவு அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும்'இ-ஸ்போர்ட்ஸ்' விளையாட்டுகளுக்குக் கட்டாயப் பதிவு அவசியம் ஆகும். குறிப்பாக அரசு தன்னிச்சையாகவோ அல்லது தேவைப்படும்போதோ சில விளையாட்டுகளைக் கண்காணிக்க இந்த புதிய விதிகள் உதவும். மேலும் இதில் பயனர்களின் பாதுகாப்பு அம்சங்களும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த புதிய விதிகள் ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்யும் எனத் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இபிஎப்ஓ ஏடிஎம் மற்றும் யுபிஐ வசதி: வரும் மே மாதம் EPFO-வில் (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) பெரிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. PF கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் அவர்களது PF பணத்தை எடுக்க வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. அதாவது மே மாதம் பிஎஃப் தொகையை யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது. இந்த புதிய வசதி மூலம் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications