ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்.. வந்தது புதிய விதிமுறை.. கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
ரேஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மத்திய அரசு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் உள்ள 2.27 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 18.65 லட்சம் பேர் அந்தியோதயா கார்டுதாரர்களாவும், 1.17 கோடி பேர் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் சிலர் தங்களுக்குக் கிடைக்கும் இலவசப் பொருட்களை வாங்கிக் கொண்ட உடனே, தங்களின் பெயரை பழைய ரேஷன் கார்டிலிருந்து நீக்கிவிட்டு புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து, அதன்மூலம் மீண்டும் பொருட்களைப் பெற்று வருகிறார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ளது. இந்த முறைகேடுகளைத் தடுக்கவும், திட்டத்தின் நன்மைகள் உண்மையான பயனாளிக்கு மட்டுமே சென்று சேரும் வகையில் இருக்கவும் தற்போது மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

தற்போது மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் பெயரை நீக்கும் செயல்முறைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளை சற்று விரவாகப் பார்க்கலாம்.
அதன்படி புதிய ரேஷன் கார்டு (ration card) பெற விரும்பும் எந்த நபரும், ஏற்கனவே வேறு எந்த ரேஷன் கார்டிலும் உறுப்பினராக இருக்க கூடாது என்ற நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாக, புதிய கார்டு பெற வேண்டி இருப்பது, வேலைக்காக அல்லது பிற காரணங்களுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை போன்ற காரணங்களால், சிலர் தங்களின் பெயரை தற்போதைய ரேஷன் கார்டிலிருந்து நீக்க வேண்டியிருக்கிறது.
இவ்வாறு பெயரை நீக்க விரும்பும் நபர்கள், உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்டம் (PDS) இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான சரிபார்ப்புகளை முடித்த பின்பு, உரிய நபரின் பெயரை கார்டில் இருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
அதன்பின்பு பெயர் நீக்கப்பட்டதற்கான தகவல், பயனாளியின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இந்த உறுதிப்படுத்தல் செய்தியைப் பெற்ற பின்பு மட்டுமே அந்த நபர் புதிய ரேஷன் கார்டுக்கு தனியாக விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் உறுப்பினராக இருப்பவர்கள் தங்களின் பெயரை நீக்குவதற்காக எந்த தேதியில் விண்ணப்பத்தாலும், அந்த விண்ணப்பம் உடனடியாக இறுதி செய்யப்படாது. அவர்கள் பெயர்கள் நீக்கம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படுவது என்பது ஒவ்வொரு மாத இறுதியிலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின்பு மட்டுமே நடைமுறைக்கு வரும். குறிப்பாக மாதத்தின் நடுப்பகுதியில் விண்ணப்பித்தாலும், அந்த மாத முடிவில் மத்திய அரசின் ஒப்புதல் வந்த பின் தான் பெயர் நீக்கம் உறுதிப்படுத்தப்படும்.

குறிப்பாக அந்தியோதயா பிரிவில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதுதவிர முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த அளவிலான இலவசப் பொருட்களை சிலர் தவறாக இரட்டிப்பு முறையில் பெற முயலும் நிலையைத் தடுக்கவே பெயர் நீக்கும் செயல்முறையில் இவ்வாறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சிலர் ஒரு ரேஷன் கார்டில் பொருட்களை வாங்கிய உடனே தங்களின் பெயரை அதிலிருந்து நீக்கி உடனே புதிய கார்டு பெற்று அதன் மூலம் மீண்டும் பொருட்களை வாங்கி வந்ததால் திட்டத்தில் தவறான பயன்பாடு அதிகரித்தது. இதை தடுக்க இனி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் இருந்து பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம் எப்போது கொடுத்தாலும், ஒவ்வொரு மாத இறுதியில் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின்பு அந்த பெயர் நீக்கம் இறுதி செய்யப்பட்டதாக கருதப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் ஒரே நபர் ஒரே நேரத்தில் இரண்டு கார்டுகளின் மூலம் பயனடையும் வாய்ப்பு குறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications