4ஜி மற்றும் 5ஜி சேவைக்காக 2ஜி, 3ஜி சேவையில் புதிய கொள்கை வருமா?
இரவோடு இரவாக.. முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின்கீழ் 4ஜி சேவைகள் அறிமுகமான போது.. மக்கள் அதற்கு கொடுத்த வரவேற்புகளும், அதே மக்கள் மத்தியில் நிலவிய குழப்பங்களும்.. 5ஜி அறிமுகத்தின் போதும் கூட இருந்தன!
"5ஜி சேவைக்கு அப்கிரேட் ஆக புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமா?" என்பது தொடங்கி.. "5ஜி சேவைகள் நாடு முழுவதும் அறிமுகமான பின்னர் 4ஜி சேவைகள் காணாமல் போய் விடுமா?" என்பது வரையிலாக.. பல வகையான கேள்விகள் தொடர்ச்சியாக கேட்கப்பட்ட வண்ணம் உள்ளன.

இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி தொடர்பான ஒரு புதிய கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. சமீபத்தில், ட்ராய் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, 5ஜி ஈகோசிஸ்டம் மூலம் டிஜிட்டல் மாற்றம் (Digital Transformation through 5G Ecosystem) என்கிற தலைப்பில் ஒரு ஆலோசனை கட்டுரையை வெளியிட்டது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, "இந்தியாவில் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை (இழுத்து) மூடுவதற்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். இப்படி செய்வதால் தேவையற்ற நெட்வொர்க் செலவுகள் தவிர்க்கப்படும், மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு இடம்பெயர முடியும்" என்று பரிந்துரைள்ளது.

புதிய கொள்கையை உருவாக்க கோரும் ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பரிந்துரையை இந்திய அரசாங்கம் ஏற்கும் பட்சத்தில், இன்னமும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு பெரிய தலைவலியாக.. பெரிய நெருக்கடியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்தியாவில், பலரும் தொடர்ந்து 2ஜி மற்றும் 3ஜி சேவைகளின் கீழ் இருக்க 2 முக்கிய காரணங்கள் மட்டுமே உள்ளது. முதல் காரணம் - இந்தியாவில் 2ஜி / 3ஜி திறன் கொண்ட போன்களே ஏராளமாக பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாவது காரணம் - கிராமப்புற மற்றும் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை கட்டுப்படியாகவில்லை.

இந்நிலைப்பாட்டில் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளின் "கதையை முடித்தால்" (அதாவது மூடினால்), 2ஜி மற்றும் 3ஜி போன்களின் வழியாக 2ஜி/ 3ஜி சேவைகளை பெற்று வரும் வாடிக்கையாளர்கள் 4ஜி அல்லது 5ஜி போன்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வேறு வழியே இல்லாமல் 4ஜி அல்லது 5ஜி சேவைக்குள் நுழைய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
இது எல்லாமே ரிலையன்ஸ் ஜியோ என்கிற ஒரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரால் (Telecom Service Provider) டிராய்-க்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ரிலையன்ஸ் ஜியோ சொன்னதுமே.. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை மூடுவதற்கான தீவிரமான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் எடுத்துவிடாது என்று அர்த்தம்.
ஒருவேளை ரிலையன்ஸ் ஜியோவால் முன்மொழியப்பட்ட ஆலோசனையை இந்திய அரசாங்கம் கையில் எடுக்க விரும்பினால்.. இப்படியான ஒரு பெரிய மாற்றத்தை, இந்திய குடிமக்களுக்கு எவ்வாறு மிகவும் எளிமையாக வழங்குவது என்பதை பற்றி அரசாங்கம் நிச்சயம் சிந்திக்கும். கூடவே அரசாங்கத்திடமிருந்து போதுமான நேரமும், உதவியும் கூட கிடைக்கும்.
புதிய கொள்கை தொடர்பான தனது பரிந்துரையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு வலுவான 5ஜி இணைப்பை சிறப்பாக செயல்படுத்த.. பெரிய அளவிலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளின் கிடைக்கும்தன்மை மற்றும் ஒதுக்கீட்டின் (Availability and Allocation of Massive amount of spectrum bands) அவசியத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இந்த சிக்கலை சரிசெய்ய இ-பேண்ட் மற்றும் வி-பேண்ட் அலைக்கற்றையின் (E-Band and V-Band spectrum) திட்டமிட்ட ஏலத்துடன், 6ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட், ஃபுல் சி-பேண்ட் மற்றும் நெகிழ்வான பயன்பாட்டு அடிப்படையில் (flexible use basis) 28ஜிகாஹெர்ட்ஸ் ஆகியவற்றையும் ஏலம் விட வேண்டும் என்று முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ வலியுறுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








