மொத்தமாக மாறும் ரிசர்வேஷன் சிஸ்டம்.. 40 ஆண்டு பழைய பிளாட்பார்முக்கு குட்பை.. எப்போது முதல் அமல்?
இந்திய ரயில்வே (Indian Railways) ஆனது ரயில் முன்பதிவு அமைப்பு (railway reservation system) தொடர்பான ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு அல்லது மேம்பாட்டு பணிக்கு தயாராகி வருகிறது. அது என்ன மாற்றம் / மேம்பாடு? எப்போது முதல் அமலுக்கு வருகிறது? இதோ விவரங்கள்:
இந்திய ரயில்வே ஆனது புதிய பேஸஞ்சர் ரிசர்வேஷன் சிஸ்டமை (New Passenger Reservation System - PRS) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்கீழ், கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள பழைய தளத்திற்கு பதிலாக, புதிய பயணிகள் முன்பதிவு அமைப்புக்கு (PRS) ரயில் முன்பதிவுகள் படிப்படியாக மாற்றப்படவும் உள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவை மேம்படுத்துதல், அமைப்பின் திறனை அதிகரித்தல் மற்றும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குதல் ஆகியவைகளை முக்கிய நோக்கங்களாக கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த மாற்றத்தின் போது பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உலர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்னரே குறிப்பிட்டபடி, தற்போதைய பயணிகள் முன்பதிவு அமைப்பு 1986 இல் அறிமுகப்படுத்தப்பட்டது; காலப்போக்கில் இதில் மிக குறைந்த அளவிலான மேம்பாடுகளே செய்யப்பட்டன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ரிசர்வேஷன் அமைப்பானது - இணையவழி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான வளர்ந்து வரும் தேவையை சமாளிக்கும் வகையில் அதிகத் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.
இந்திய ரயில்வே ஆனது கடந்த 2002 இ ல்தான் இணையம் சார்ந்த டிக்கெட் முன்பதிவு முறையை தொடங்கியது; இன்று பெரும்பாலான பயணிகள் முன்பதிவு மையங்களுக்கு நேரில் செல்வதற்கு பதிலாக இணையம் மூலமாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்புகின்றனர். தற்போது சுமார் 88 சதவீத டிக்கெட் முன்பதிவுகள் டிஜிட்டல் தளங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன.
இந்த மாற்றம் இந்திய ரயில்வேயின் பரந்த அளவிலான டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஜூலை 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'ரயில்ஒன்' (RailOne) ஆப், ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் 3.5 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கடந்துள்ளது. இந்த ஆப் மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் ரத்து செய்யவும், ரயிலின் தற்போதைய நிலையை அறியவும், நடைமேடை மற்றும் ரயில் பெட்டி (coach) குறித்த தகவல்களை பெறவும், புகார்களை பதிவு செய்யவும் மற்றும் பிற ரயில்வே சேவைகளை பயன்படுத்தவும் அனுமதிக்கிறது
இந்த ஆப் மூலம் தினமும் சுமார் 9.29 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. இதில் சுமார் 7.2 லட்சம் முன்பதிவு செய்யப்படாத (unreserved) டிக்கெட்டுகளும், 2.09 லட்சம் முன்பதிவு செய்யப்பட்ட (reserved) டிக்கெட்டுகளும் அடங்கும்.
அதிகம் பேசப்படும் அம்சங்களில் ஒன்று, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சார்ந்த காத்திருப்பு பட்டியல் (waitlist) கணிப்பு வசதியாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை கணிக்கிறது.
இந்திய ரயில்வே அளித்துள்ள தகவல்படி, கணிப்பின் துல்லியம் 53 சதவீதத்திலிருந்து 94 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுவதை எளிதாக்குகிறது. இதோடு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் மேம்படுத்தப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு செயல்பாட்டுக்கு வந்ததும்,, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயணிகளுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை வேகமானதாகவும், நவீனமானதாகவும் மற்றும் நம்பகமானதாகவும் மாற்றப்படும் என்று இந்திய ரயில்வே நம்புகிறது.


Click it and Unblock the Notifications