ஏப்.1 முதல் அமலுக்கு வரும் 2 முக்கிய மாற்றங்கள்.. இனி ஆதார் மட்டும் போதாது.. வருது புது PAN கார்டு ரூல்ஸ்!
பான் கார்டு (PAN Card) என்கிற பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) அட்டை தொடர்பான 2 முக்கிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்த 2 மாற்றங்களும் நீங்கள் பான் கார்ட்டை விண்ணப்பிக்கும் முறையை முற்றிலுமாக மாற்ற உள்ளது.
பான் கார்டு தொடர்பான இந்த புதிய மாற்றங்கள் அல்லது புதிய செயல்முறை அமலுக்கு வரும் தேதி (மற்றும் பழைய செயல்முறைகக்கான கடைசி தேதி) மிகவும் நெருக்கமாக உள்ளதால், இப்போதே செயல்படுவது பிற்காலத்தில், பான் விண்ணப்பம் தொடர்பான உங்களுடைய நேரத்தையும், முயற்சியையும் மிச்சப்படுத்தும்.

முதல் மாற்றம்: 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் புதிய பான் விண்ணப்ப விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் - ஆவணங்கள், படிவங்கள் மற்றும் ஒட்டுமொத்த விண்ணப்ப செயல்முறையை பாதிக்க உள்ளது.
2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை, நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டையை (Aadhaar Card) மட்டும் பயன்படுத்தி பான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். தற்போதைக்கு உங்கள் விண்ணப்பத்தை நிறைவு செய்வதற்கு இதுவே எளிதான மற்றும் விரைவான வழி ஆகும்.
ஆனால் மார்ச் 31 ஆம் தேதிக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் மட்டுமே போதுமான அடையாள ஆவணமாக இருக்காது. விண்ணப்பதாரர்கள் ஆதார் விவரங்களுடன், சில கூடுதல் ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், பான் விண்ணப்பத்திற்கான முக்கிய மாற்றம் - பிறந்த தேதி சரிபார்ப்பு (Date of birth verification) தொடர்பான விஷயமாக இருக்கும். உங்களுடைய பிறந்த விவரங்களை உறுதிப்படுத்த ஆதார் உடன் கூடுதல் ஆவணங்களும் தேவைப்படும்.
பிறந்த தேதிக்கான சரிபார்ப்புக்கு என்னென்ன ஆவணங்களை வழங்கலாம்? பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு), ஓட்டுநர் உரிமம் மற்றும் மெட்ரிகுலேஷன் சான்றிதழ் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக இருக்கும். தேவைப்பட்டால் பிரமாண பத்திரங்கள் மற்றும் பிற அரசு ஆவணங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
மேலும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு பழைய பான் விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்வதும் இங்கே அவசியம். இதற்கான புதிய பான் கார்டு விண்ணப்ப படிவங்கள் (New PAN Card Application Forms) அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பகிரப்படும்.
இரண்டாவது மாற்றம்: இது பான் அட்டையில் உள்ள உங்கள் பெயர் தொடர்பானது. ஏப்ரல் 2026 முதல், உங்கள் பான் அட்டையில் உள்ள பெயர், உங்கள் ஆதார் விவரங்களுடன் துல்லியமாக பொருந்த வேண்டும். இந்த அறிவிப்பு, இந்திய அரசின் ஒரு முன்னெடுப்பான பொது சேவை மையங்களால் (Common Services Centres) எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஆதார் மற்றும் பான் ஆகிய இரண்டிலும் பொதுவான பெயர் இல்லை என்றால் அதை உடனே அப்டேட் செய்து சரி செய்யவும்.
இதேபோல பான் - ஆதார் இணைப்பும் கடுமையாகிறது: 2026 ஏப்ரல் 1 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத பான் செயல்படாமல் போகலாம். ஆக வரி செலுத்துவோர்கள், பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, பான் கார்ட்டை மீண்டும் செயல்படுத்த, அதை ஆதார் உடன் இணைக்க வேண்டும், இதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம்.
பான் செயல்படாமல் இருக்கும் காலகட்டத்தில், தனிநபர்கள் சில நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிடும்: அதென்ன சிக்கல்கள்? - டேக்ஸ் ரீபண்ட் எதுவும் ரிலீஸ் செய்யப்படாது - நிலுவையில் உள்ள ரீபண்ட்-ஐ பெறுவதில் வட்டி எதுவும் சேராது மற்றும் - பொருந்தக்கூடிய பேமண்ட்களில் அதிக TDS/TCS அப்ளை செய்யப்படலாம். ஆகவே இன்னமும் ஆதார் -பான் இணைப்பது செய்து முடிக்காதவர்கள் அதை உடனே செய்யவும்.


Click it and Unblock the Notifications








