Airtel கேட்கும் ரூ.1500 அட்வான்ஸ்.. ஏர்டெல்லின் Wi-Fi, DTH, IPTV கஸ்டமரா நீங்க.. முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் (Bharti Airtel), அதன் 'ஒன் ஏர்டெல்' (One Airtel) திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளுக்கு, வாடிக்கையாளர்கள் முன்பணம் (Advance) செலுத்த வேண்டும் என்று கோருகிறது. தெரியாதவர்களுக்கு, 'ஒன் ஏர்டெல்' என்பது ஏர்டெல் நிறுவனத்தின் புதிய, மறுபெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த சேவை (bundled service) ஆகும்.
இது அடிப்படையில், முன்னதாக அணுக கிடைத்த ஏர்டெல் பிளாக் (Airtel Black) சேவையை போன்றது தான், ஆனால் ஒரு புதிய பெயருடன் கிடைக்கிறது. அதாவது ஏர்டெல் நிறுவனம் ஆனது மிகவும் அமைதியான முறையில் தனது 'ஏர்டெல் பிளாக்' சேவையை 'ஒன் ஏர்டெல்' என பெயர் மாற்றியுள்ளது.

இந்த சேவை அப்படியேதான் இருக்கிறது, ஆனால் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. விலையிலும் எந்த வித்தியாசமும் இருக்காது. ஏர்டெல் பிளாக் சேவையை போலவே 'ஒன் ஏர்டெல்' சேவையின் கீழ் கிடைக்கும் திட்டங்களும், வாடிக்கையாளர்கள் பல ஏர்டெல் சேவைகளை ஒரே ஒருங்கிணைந்த திட்டத்தில் இணைக்க அனுமதிக்கும்.
அதாவது பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மொபைல் (Airtel Postpaid Mobile), ஏர்டெல் வைஃபை (Airtel Wi-Fi) மற்றும் ஏர்டெல் டிடிஎச் / ஐபிடிவி இணைப்புகள் (Airtel DTH / IPTV connections) ஆகிய அனைத்து சேவைகளையும் ஒன் ஏர்டெல்லின் கீழ் ஒரே திட்டத்தில் இணைக்கலாம்.
இது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேவைகளுக்கு, வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு வகையான கட்டணங்களை செலுத்துவதிலும், அவை அனைத்தையும் கண்காணிப்பதிலும் உள்ள சிரமத்தை கணிசமாக குறைக்கிறது. சரி வாருங்கள் 'ஒன் ஏர்டெல்' திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் சேவைகளுக்கு செலுத்த வேண்டிய முன்பண தொகையை குறித்து பார்க்கலாம்.
வைஃபை (Wi-Fi) மற்றும் டிடிஎச்-க்கான (DTH) ஏர்டெல் முன்பணத் தேவை: ஏர்டெல் ஒரு போஸ்ட்பெய்ட் சிம்மிற்கு (Postpaid SIM) எந்த முன்பணமும் வசூலிப்பதில்லை. இருப்பினும், நீங்கள் ஒரு புதிய வைஃபை அல்லது டிடிஎச் அல்லது ஐபிடிவி இணைப்பிற்கு (IPTV Connection) செல்கிறீர்கள் என்றால், நீங்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
'ஒன் ஏர்டெல்' திட்டத்தின் கீழ், ஏர்டெல் நிறுவனம் எந்த நிறுவல் கட்டணத்தையும் (Installation charge) வசூலிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். வாடிக்கையாளர்கள் புதிய வைஃபை இணைப்புக்கு ரூ.1500, வைஃபை + ஐபிடிவி திட்டத்திற்கு ரூ.1500, புதிய ஐபிடிவி இணைப்புக்கு ரூ.500 மற்றும் புதிய டிடிஎச் இணைப்புக்கு ரூ.1500 முன்பணமாக செலுத்த வேண்டும்.
இந்த முன்பணம் வாடிக்கையாளர்களின் எதிர்கால கட்டணங்களில் சரிசெய்யப்படும் (adjust) என்று ஏர்டெல் கூறுகிறது. ஒருவேளை நுகர்வோர்கள் - வைஃபை + டிவி இணைப்பின் கீழ் ஒரு இரண்டாம் நிலை டிவி இணைப்பை (Secondary TV Connection) வாங்கினால், அவர் ரூ.500 முன்பணம் செலுத்த வேண்டும், இதுவும் எதிர்கால கட்டணங்களில் சரிசெய்யப்படும்.
பயனர்கள் முன்பணம் செலுத்துவதால், அவர் ஏர்டெல்லுக்கு செயல்படுத்தல் கட்டணம் (Activation Charge) எதுவும் செலுத்த தேவையில்லை. மேலும், ஏர்டெல் விதிகளின் படி, வைஃபை மற்றும் டிடிஎச் இணைப்பின் இருப்பிடம் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் புதிய ஒன் ஏர்டெல் திட்டத்துடன் பயனர்களுக்கு ரூ.100 விளம்பர பலனும் ( promotional benefit) வழங்கப்படுகிறது.
இதனால் ஏற்கனவே உள்ள ஏர்டெல் பிளாக் கஸ்டமர்களுக்கு என்ன நடக்கும்? தற்போதுள்ள ஏர்டெல் பிளாக் வாடிக்கையாளர்கள், எதிர்காலத்தில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்கள் தற்போதைய திட்டத்தையே தொடர்வார்கள். இருப்பினும், ஏதேனும் சேவை சேர்க்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ அல்லது மாற்றியமைக்கப்பட்டாலோ, வாடிக்கையாளர் ஒன் ஏர்டெல் திட்டத்திற்கு மாற்றப்படலாம்.


Click it and Unblock the Notifications