புதிய LPG விதிகள்.. கேஸ் சிலிண்டர் பயன்படுத்த வந்தது கட்டுப்பாடு.. கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு இணைப்பு என்ற கொள்கையின் கீழ் புதிய எல்பிஜி (LPG) விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது இந்திய அரசாங்கம். அதன்படி எல்பிஜி சிலிண்டர் மற்றும் பிஎன்ஜி (குழாய் வழி இயற்கை எரிவாயு) இணைப்புகள் இரண்டையும் வைத்திருக்கும் வீடுகளில், இனி அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
புதிய விதிமுறைகள்
புதிய விதிமுறைகளின்படி, இனி உங்களது வீட்டில் சமையலுக்காக குழாய் வழி எரிவாயு (PNG) மற்றும் எல்பிஜி சிலிண்டர் (LPG) இணைப்பையும் ஒரு முகவரியில் ஒன்றாக வைத்திருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வைத்திருப்பவர்களை தங்கள் LPG சிலிண்டர்களைத் திருப்பியளிக்கக் கட்டாயப்படுத்துவது மற்றும் எரிவாயு சிலிண்டர்களை பதுக்குவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு சிலிண்டர் முன்பதிவிற்கும் இடையே கட்டாயமாக நகரப்புறங்களில் 25 நாட்கள் மற்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் காத்திருப்பு காலத்தை நிர்ணயிப்பது ஆகியவை இந்த புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
அதுவும் இப்போது பயனர்கள் தகுதியைத் தக்கவைத்துக் கொள்ள பயோமெட்ரிக் e-KYC-ஐ முடிக்க வேண்டும். குறிப்பாக ஆதார் இணைப்பைப் புதுப்பிக்கத் தவறினால் முன்பதிவுகள் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் பாதுகாப்பு மற்றும் தடமறிதலுக்காக QR/RFID குறியீடுகள் வழியாக டிஜிட்டல் கண்காணிப்பு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதனால் சுமார் 95 சதவீத எல்பிஜி சிலிண்டர் விநியோகங்கள், விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC) அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறை எரிவாயுவின் கள்ளச் சந்தையை தடுக்கும் எனவும், சிலிண்டர்கள் யாருக்கு தேவையோ அவர்களை மட்டுமே சென்றடையும் என அரசு கூறுகிறது. அதேபோல் உலகம் முழுவதும் நிலவும் எரிசக்தி நெருக்கடியும், வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றமும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.
ஆகவே புதிய விதிமுறைகளின்படி, பிஎன்ஜி இணைப்பு உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டு சிலிண்டர் இணைப்புகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அதேபோல் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் அத்தகைய குடும்பங்களுக்கு புதிய சிலிண்டர்களை வழங்கவோ அல்லது பழைய சிலிண்டர்களை நிரப்பவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது இரு சேவைகளையும் வைத்திருக்கும் தனிநபர்களைத் தரவுகள் மூலம் அரசு கண்காணித்து வருகிறது.
இப்போது இந்தியா தனது கச்சா எண்ணெய்யில் சுமார் 88 சதவீதம் மற்றும் இயற்கை எரிவாயுவில் 50 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதேசமயம் எல்பிஜி எரிவாயுவில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்கள்
தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் விநியோகப் பாதைகளில் இடையூறு ஏற்படும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அதுவும் உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் கணிசமான பகுதி பெறப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கின்றன. இதன் விளைவாக வீட்டு உபயோக எரிவாயு சேமிப்பு மற்றும் சரியான அமலாக்கத்திற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் 43,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று அரசு கூறுகிறது.


Click it and Unblock the Notifications