ஜூன் 30 கெடு.. அதுக்குள்ள செய்யலனா Gas கனெக்ஷன் கட்? இடியாய் இறங்கிய புது LPG PNG ரூல்ஸ்!
டபுள் கனெக்ஷன் (Dual connections) கொண்ட வாடிக்கையாளர்களுக்கான விதிகளை இந்திய அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது. நாடு முழுவதும் 'ஒரு வீட்டிற்கு ஒரு எரிவாயு இணைப்பு' என்ற விதியை அமல்படுத்துவதும், பிஎன்ஜி (PNG) இணைப்புகளின் விரிவாக்கத்தை நோக்கிய ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் மேற்கு ஆசிய போரானது எல்பிஜி பற்றாக்குறை நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது, இருப்பினும் எல்பிஜி விநியோகத்தில் வறட்சி எதுவும் இல்லை என்று எண்ணெய் அமைச்சகம் (Oil Ministry) உறுதியளித்துள்ளது. ஆனாலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி அவ்வப்போது தலைவிரித்து ஆடுகிறது.

மேலும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றானவற்றுக்கு (alternatives) மாறுவதம் இன்றியமையாததாகி விட்டது. எல்பிஜி ஒதுக்கீடு அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாக உள்ளது, ஆனால் எல்பிஜி-பிஎன்ஜி (LPG-PNG) வைத்திருப்பவர்களுக்காக பல்வேறு புதிய விதிகளையும், நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. புதிய எல்பிஜி-பிஎன்ஜி (LPG-PNG) விதிகளின்படி, நீங்கள் பிஎன்ஜி (PNG) இணைப்புகளுக்கு மாறியிருந்தால், உங்கள் எல்பிஜி இணைப்புகளை கைவிட வேண்டும்.
உங்கள் பகுதியில் பிஎன்ஜி (PNG) உள்கட்டமைப்பு இருந்தால், நீங்கள் பிஎன்ஜி (PNG) இணைப்புக்கு விண்ணப்பித்து, பின்னர் உங்கள் எல்பிஜி (LPG) இணைப்பை துண்டிக்க வேண்டும். உங்களிடம் எல்பிஜி மற்றும் பிஎன்ஜி (PNG) ஆகிய இரண்டு இணைப்புகளும் இருந்தால், உங்கள் இன்டேன் கேஸ் (Indane Gas), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் ஹெச்பி கேஸ் (HP Gas) இணைப்புகளை கைவிட வேண்டும்.
அதாவது டபுள் கனெக்ஷன் முறை இனி இல்லை. எல்பிஜி மற்றும் பிஎன்ஜி ஆகிய இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பது தடைசெய்யப்பட்ட செயலாகும். சமீபத்தில் தான் (மே 25) இந்திய அரசாங்கம் தனது திரவ பெட்ரோலிய எரிவாயு (வழங்கல் மற்றும் விநியோக ஒழுங்குமுறை) திருத்த ஆணை, 2026 ஐ திருத்தியமைத்தது.
இந்தத் திருத்தம், பின்னர் குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளை பெறும் வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோருக்கு கூடுதல் தளர்வுகளையும் வசதிகளையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. திருத்தப்பட்ட விதிகளின்படி, பிஎன்ஜி இணைப்புகளை பெற்ற எல்பிஜி நுகர்வோர், பிஎன்ஜி இணைப்பை பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் எல்பிஜி இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.
இதன்கீழ் அரசாங்கம் ஒரு பெரிய நிவாரண முயற்சியையும் அறிவித்துள்ளது. உங்கள் எல்பிஜி இணைப்பை துண்டித்த பிறகு, நீங்கள் பிஎன்ஜி அல்லாத பகுதிக்கு குடிபெயர்ந்தால், எதிர்காலத்தில் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதற்கான (future restoration) மாற்று சீட்டை (LPG Transfer Voucher) பெறலாம்.
இந்த திருத்தம், பிஎன்ஜி உள்கட்டமைப்பு சாத்தியமில்லாத பகுதிகளுக்கு பின்னர் குடிபெயரக்கூடிய நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. இந்த ஏற்பாடு - இடமாற்றம் செய்யக்கூடிய ஊழியர்கள், புலம்பெயர்ந்த குடும்பங்கள், வாடகைதாரர்கள், மாணவர்கள் மற்றும் பிஎன்ஜி அல்லாத பகுதிகளுக்கு குடிபெயரும் குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று எண்ணெய் அமைச்சகம் நம்புகிறது.
ஜூன் 30-க்குள் இன்டேன் கேஸ், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் இணைப்புகள் துண்டிக்கப்படுமா? இந்த கேள்விக்கான பதிலை புரிந்துகொள்ள - மார்ச் 2026-ல் வெளியான ஒரு சுற்றறிக்கையில் இருந்து நாம் தொடங்க வேண்டும். மார்ச் 2026 இல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas) எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டது.
அவற்றுள் ஒன்று, குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி (LPG) இணைப்பு ஆகிய இரண்டையும் வைத்திருக்கும் எந்தவொரு நபரும், புதிய எல்பிஜி இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது அரசாங்க ஆதரவு பெற்ற எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அல்லது விநியோகஸ்தர்கள் மூலம் எல்பிஜி நிரப்பிக்கொள்ளவோ தடை செய்யப்பட்டுள்ளார்.
எளிமையாக சொன்னால், உங்களிடம் பிஎன்ஜி இணைப்பு இருந்தால், நீங்கள் புதிய எல்பிஜிக்கு விண்ணப்பிக்கவோ அல்லது எல்பிஜி-ஐ நிரப்பிக்கொள்ள விண்ணப்பிக்கவோ முடியாது. வணிக எல்பிஜி கிடைப்பது குறித்த கவலைகளை தீர்க்கும் வகையில், நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள், தங்களின் அனைத்து எரிவாயுப் பகுதிகளிலும் (GAs) உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி இணைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் IGL, MGL, GAIL Gas மற்றும் BPCL ஆகும். மேலும், நகர எரிவாயு விநியோக (CGD) வலையமைப்புகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான ஒப்புதல்களை விரைவுபடுத்துமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிஎன்ஜி வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி-க்கு விண்ணப்பிப்பதற்கோ அல்லது அதை மீண்டும் நிரப்புவதற்கோ தடை விதித்த அதே வேளையில், அரசாங்கம் மார்ச் 24, 2026 அன்று, 'இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் (குழாய்களைப் பதித்தல், உருவாக்குதல், இயக்குதல் மற்றும் விரிவாக்குதல் மற்றும் பிற வசதிகள் மூலம்) ஆணை, 2026' என்ற தலைப்பில் ஒரு புதிய ஆணையையும் வெளியிட்டது.
இந்த புதிய ஆணையின் கீழ், தங்கள் பகுதி அல்லது வசிப்பிடத்தில் பிஎன்ஜி உள்கட்டமைப்பு இருந்தால், இபிஜி வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இணைப்புகளுக்கு மாறுவதற்கு 3 மாத காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. பிஎன்ஜி உள்கட்டமைப்பு இருந்தபோதிலும் ஒரு குடும்பம் அதற்கு மாறவில்லை என்றால், எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆணை மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதுடன், முழுமையாக பிஎன்ஜி-க்கு மாறுவதற்கான காலக்கெடு 90 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த காலக்கெடு இந்த 2026 ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இருப்பினும், தற்போது வரை எல்பிஜி இணைப்புகளை துண்டிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை.
இந்த இடத்தில் தான், மகாராஷ்டிர உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சகன் புஜ்பால் சொன்ன தகவல் முக்கியமாகிறது. சேவை கிடைக்கும் பகுதிகளில் பிஎன்ஜி இணைப்புகளுக்கு விண்ணப்பிக்க தொடங்குமாறும், தங்கள் எல்பிஜி இணைப்பை இழக்கும் அபாயத்தைத் தவிர்க்குமாறும் குடிமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
"இந்த பகுதியில் சேவை இருந்தபோதிலும், இதுவரை குழாய்வழி எரிவாயுவை பயன்படுத்தாதவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்னர் விண்ணப்பிக்க தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இணைப்புகளை எவ்வாறு வழங்குவது என்பது சேவை வழங்குநரை பொறுத்த விஷயம். அதை நிறுவனம் உறுதி செய்யும்," என்று அவர் கூறியுள்ளார். ஆக ஜூன் 30 ஒரு கெடுநாள் ஆகிறது. இது - 2026 ஜூலை 1 ஆம் தேதி முதல் உங்கள் எல்பிஜி இணைப்பு துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை குறிக்கிறது.


Click it and Unblock the Notifications