புதிய LPG விதிகள் 2026.. 1 வீட்டுக்கு 2 கனெக்சன் வச்சிருக்கீங்களா.. உங்களுக்கு அரசு கொடுத்துள்ள 2 ஆப்ஷன்கள்!
புதிய எல்பிஜி விதிகள் 2026 (New LPG Rules 2026) அடிப்படையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆனது குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் தங்களது பழைய எல்பிஜி (LPG) இணைப்பை கையாள்வதில் புதிய விதிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியான அறிவிப்பின், பிஎன்ஜி இணைப்பு வைத்திருக்கும் குடும்பங்கள் மானிய விலையிலான எல்பிஜி சிலிண்டர்களை வைத்திருக்கவோ அல்லது புதிதாகப் பெறவோ தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த விதிகள் கட்டாயமாக்கப்பட்டன. இந்த நிலையில், நுகர்வோரின் வசதிக்காக தற்போது புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நுகர்வோர் தங்களின் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் எல்பிஜி இணைப்பை ஒப்படைத்துவிட்டு பிஎன்ஜிக்கு மாறுவதற்காக MyPNG-D என்ற புதிய இணையதள போர்ட்டலையும் அமைச்சகம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சகத்தின் விதிகளின்படி, பிஎன்ஜி இணைப்பு பெறும் எல்பிஜி நுகர்வோருக்கு தற்போது இரண்டு முக்கிய ஆப்ஷன்கள் (Options) வழங்கப்பட்டுள்ளன.
30 நாட்களுக்குள் ஒப்படைத்தல்: நுகர்வோர் தங்களுக்கு பிஎன்ஜி இணைப்பு கிடைத்த 30 நாட்களுக்குள், தங்களது எல்பிஜி இணைப்பை முழுமையாக ரத்து செய்ய (Termination) விண்ணப்பிக்கலாம். இது ஒரு வீட்டுக்கு 2 கனெக்சன் இருப்பதை தவிர்க்கும். தட்டுப்பாடு ஏற்படுவதை கட்டுப்படுத்த இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
டிரான்ஸ்பர் வவுச்சர் (Transfer Voucher) பெறுதல்: நுகர்வோர் தங்களின் எல்பிஜி இணைப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, எதிர்காலத்தில் பிஎன்ஜி வசதி இல்லாத பகுதிகளுக்கு மாறும்போது அதனை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் டிரான்ஸ்பர் வவுச்சர் ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திருத்த விதிகளின் மூலம், எதிர்காலத்தில் குழாய் வழி எரிவாயு கட்டமைப்பு இல்லாத பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் நுகர்வோருக்கு மிகப்பெரிய நிம்மதியும் எல்ஜிபி கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அடிக்கடி இடமாற்றமாகும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், புலம்பெயர்ந்த குடும்பங்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், மாணவர்கள் மற்றும் வேறு இடங்களுக்கு செல்லும் குடும்பங்களுக்கு இந்த வவுச்சர் முறை பெரும் பலனாக அமையும்.
கூடுதல் உள்நாட்டு எல்பிஜி ஒழுங்குமுறை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்: இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் மற்றும் பயன்பாட்டை முறைப்படுத்த அரசு பல்வேறு சட்டப்படியான விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. நுகர்வோர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய எல்பிஜி விதிகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு இணைப்பு மட்டுமே: அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் உள்ள எல்பிஜி ஒழுங்குமுறை விதிகளின்படி, ஒரு குடும்பத்திற்கு (ஒரே முகவரியில் வசிக்கும் நபர்கள்) ஒரு உள்நாட்டு எல்பிஜி இணைப்பு மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரே குடும்பப் பெயரில் பல இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை உடனடியாக ரத்து செய்யப்படும்.
வணிக ரீதியான பயன்பாட்டிற்குத் தடை: வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் மானிய அல்லது மானியமில்லாத உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களை, ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள் அல்லது வாகனங்கள் போன்ற வணிக ரீதியான தேவைகளுக்குப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்.
இணைப்பு பரிமாற்றம் (Transfer) மற்றும் பெயர் மாற்றம்: எல்பிஜி இணைப்பை மற்றொரு நபரின் பெயருக்கு மாற்றுவது சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. குடும்ப உறுப்பினரின் மரணம், குடும்பத்திற்குள் உரிமையை மாற்றுவது அல்லது புதிய முகவரிக்கு இடம்பெயருவது போன்ற காரணங்களுக்காக மட்டுமே முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து இணைப்பை மாற்றிக்கொள்ள முடியும்.
முறையான ஆய்வு மற்றும் பாதுகாப்பு விதிகள்: நுகர்வோர் தங்களின் எரிவாயு உபகரணங்கள், குழாய்கள் (Hose) மற்றும் ரெகுலேட்டர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு நிறுவன ஊழியர்கள் மூலம் கட்டாயம் பாதுகாப்பு சோதனைக்கு (Mandatory Inspection) உட்படுத்த வேண்டும். இது விபத்துகளைத் தடுக்கவும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவசியமான விதியாகும்.
தொடர்ந்து பயன்படுத்தாத இணைப்புகள் முடக்கம்: ஒரு நுகர்வோர் தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக எல்பிஜி சிலிண்டர்களை ரீஃபில் (Refill) செய்யாமல் இருந்தால், அந்த இணைப்பு தற்காலிகமாக முடக்கப்படும் (Insolvent/Dormant). அதனை மீண்டும் தொடங்க நுகர்வோர் தங்களின் கேஒய்சி (KYC) ஆவணங்களைச் சமர்ப்பித்து சரிபார்ப்பு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications