Gas புக்கிங் புது ரூல்ஸ்.. இனிமே 45 நாட்கள் அம்பேல்.. 25 நாட்களில் வருது ரீஃபில்.. முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!
இந்தியாவில் எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் புக்கிங் செய்வதற்கான கால இடைவெளியில் புதிய விதிகளை இந்திய அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று வெவ்வேறாக இருந்த புக்கிங் செய்வதற்கான கால இடைவெளி ஒருகிணைக்கப்பட்டு இருக்கிறது.
இனிமேல் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டரை மீண்டும் புக்கிங் செய்வதற்கு குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி (25 Days Gas Booking Gap) இருந்தால் மட்டுமே போதுமானதாகும். இந்த புதிய விதி உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதால், ஏற்கனவே கேஸ் புக்கிங் செய்து 25 நாட்களுக்கு மேல் ஆகி இருந்தால், இப்போது மீண்டும் புக்கிங் செய்து கொள்ளலாம்.

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்வாக்க இந்திய அரசு இந்த விதிகளை கொண்டுவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு புக்கிங் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கச்சா எண்ணையில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் எல்பிஜி கேஸ் சிலிண்டரை மீண்டும் புக்கிங் செய்வதற்கு நகர்ப்புற கஸ்டமர்களுக்கு (Urban Areas Customer) 25 நாட்களும், கிராமப்புற கஸ்டமர்களுக்கு 45 நாட்களும் இடைவெளி (45 Days Booking Gap) நிர்ணயிக்கப்பட்டது. இந்த விதி தற்காலிகமாக கொண்டு வரப்பட்டிருந்தாலும், கேஸ் புக்கிங் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுவந்தது. ஆனால், புதிய விதிகளின்படி 25 நாட்கள் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் பொருந்துகிறது.
இதன் காரணமாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று தனித்தனியே இருந்த புக்கிங் இடைவெளி காலம் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை பெற விரும்பும் கஸ்டமர்கள் 25 நாள் இடைவெளியில் புதிய கேஸ் புக்கிங் (Gas Booking) செய்யலாம். கிராமப்புற கஸ்டமர்களுக்கு 45 நாள் இடைவெளி 25 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது, எல்பிஜி கேஸ் சிலிண்டர் பெற்ற பிறகு அடுத்த சிலிண்டரை புக் செய்ய 45 நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இது பலருக்கு சிரமத்தை கொடுத்தது. ஆனால், இனிமேல் நகர்ப்புறம் போலவே 25 நாட்கள் முடிந்தவுடன் அடுத்த சிலிண்டரை புக்கிங் செய்து கொள்ள முடியும். இது ஒட்டுமொத்த கேஸ் ஏஜென்ஸிகளுக்கும் பொருந்தக்கூடிய விதிகளாக இருக்கிறது.
ஆகவே, ஐஓசிஎல் (IOCL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation), பிபிசிஎல் (BPCL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharat Petroleum Corporation), எச்பிசிஎல் (HPCL) என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Hindustan Petroleum Corporation) உள்ளிட்டவைக்கு பொருந்தும்.
முன்னதாக இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் எச்பி கேஸ் (HP Gas) ஆகிய நிறுவனங்களின் கேஸ் இணைப்பை பெற்றுள்ள எல்பிஜி (LPG) கஸ்டமர்கள் ஈ-கேஒய்சி (e-KYC) செய்து முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இதை ஆன்லைன் மற்றும் கேஸ் புக்கிங் ஆப் வழியாக செய்யவும் கஸ்டமர்களுக்கு வழிவகை செய்யப்பட்டது. இப்போது, இடைவெளி குறைக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
