ஏப்.1 முதல் புதிய சம்பள விதிகள்.. CTC மாறாது, ஆனா டேக்-ஹோம் Salary மாறலாம்.. புது Income Tax ரூல்ஸ் பகீர்!
2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள் (New Income Tax Rules) ஆனது, நிறுவனத்திற்கான உங்களுடைய சிடிசி-ஐ (CTC) மாற்றாது; ஆனால் உங்கள் சம்பளம் கட்டமைக்கப்படும் விதத்தை மாற்ற உள்ளது. இந்த புதிய விதிகள், வரி விகிதங்களை அதிகரிக்காது, ஆனால் சம்பளச் சலுகைகள் மற்றும் அலோவன்ஸ்கள் எவ்வாறு மதிப்பிடப்பட வேண்டும் என்பதை வரையறுக்கும்.
இதன் பொருள், உங்கள் சம்பள தொகுப்பின் (Salary package) ஒரு பெரிய பகுதி இப்போது வரி விதிக்கக்கூடிய வருமானமாக கருதப்படலாம். சலுகைகள், திருப்பி செலுத்துதல்கள் மற்றும் எம்பிளாயர் வழங்கும் நன்மைகள் தொடர்பான விதிகளை அரசாங்கம் கடுமையாக்குவதால், நிறுவனங்கள் புதிய கட்டமைப்புடன் ஊதிய கட்டமைப்புகளை சீரமைக்க தொடங்கும் - இதனால் ஊழியர்கள் தங்கள் கையில் கிடைக்கும் சம்பளம் (Take-home salary), வரிப்பொறுப்பு அல்லது சம்பள பிரிவுகளில் மாற்றங்களை சந்திக்கலாம்.

உங்கள் சம்பள கட்டமைப்பு (Salary Structure) ஏன் கவனத்தில் கொள்ளப்படுகிறது? 2026 புதிய வருமான வரி விதிகளின் கீழ், எம்பிளாயர்களால் வழங்கப்படும் பெரும்பாலான சலுகைகளுக்கு இப்போது தெளிவாக வரையறுக்கப்பட்ட வரிவிதிப்பு மதிப்பு (Taxable value) உள்ளது. முன்னதாக, சில சலுகைகள் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டிருந்தன. இது சேலரி பேக்கேஜ்களை வடிவமைப்பதில் நிறுவனங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அளித்தது.
ஆனால் புதிய விதிகள் அந்த நெகிழ்வுத்தன்மையை குறைக்கின்றன. இதன் பொருள், புதிய மதிப்பீட்டு விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, எம்பிளாயர்கள் அலோவன்ஸ்கள், ரீஎம்பெர்ஸ்மென்ட்ஸ் மற்றும் சலுகைகள் போன்ற சம்பள கூறுகளை (Salary components) மறுசீரமைக்கலாம். இதன் விளைவாக சிடிசி என்கிற உங்கள் மொத்த சம்பளத் தொகை மாறாவிட்டாலும், அடிப்படை சம்பளம், அலோவன்ஸ் மற்றும் வரிவிதிப்புக்குட்பட்ட சலுகைகளின் விகிதம் ஏப்ரல் 2026 முதல் வேறுபடலாம்.
உங்கள் சேலரி ஸ்ட்ரக்சரை பாதிக்கும் மற்றொரு காரணி - தொழிலாளர் சட்டங்களின் கீழ் அடிப்படை சம்பளம் மொத்த சம்பள தொகையில் (CTC) குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும் என்கிற தேவையாகும். இது வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை பங்களிப்புகளை அதிகரிக்கக்கூடும், அதே நேரத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்ட அலோவன்ஸ்களுக்கு கிடைக்கும் தொகையை குறைக்கும்.
எந்தெந்த சலுகைகள் எல்லாம் இனி வரிக்கு உட்பட்டதாக மாறக்கூடும்: புதிய 2026 வருமான வரி விதிகள் ஆனது, பொதுவான சலுகைகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடுகின்றன. இதன் காரணமாக, முன்னர் வரி விலக்கு பெற்றதாக தோன்றிய பல சலுகைகள் இப்போது வரிக்குட்பட்ட வருமானத்தை அதிகரிக்கக்கூடும். எம்பிளாயர் வழங்கும் தங்குமிடத்திற்கு, நகரத்தை பொறுத்து, சம்பளத்தின் ஒரு சதவீதத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
நீண்ட காலத்திற்கு எம்பிளாயரால் செலுத்தப்படும் ஹோட்டல் தங்குதல்களும் வரிக்குட்பட்ட சலுகைகளாக கருதப்படலாம். தனிப்பட்ட தேவைகளுக்காக நிறுவனத்தின் காரை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான வரிக்குட்பட்ட மதிப்பு உண்டு, மேலும் எம்பிளாயர் ஒரு ஓட்டுநருக்கு பணம் செலுத்தினால், வரிக்குட்பட்ட தொகை மேலும் அதிகரிக்கும். வீட்டு வேலைக்கான செலவுகள், நிறுவனத்தால் செலுத்தப்படும் மின்சாரம், எரிவாயு அல்லது தண்ணீர் கட்டணங்கள் போன்ற செலவுகள் தனிப்பட்ட சலுகைகளாக கருதப்பட்டு, வரிக்குட்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் உள்ள குழந்தைகளின் கல்வி உதவித்தொகைக்கு வரி விதிக்கப்படும், மேலும் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் எம்பிளாயர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளும் வருமானத்தில் சேர்க்கப்படும். எம்பிளாயரால் வழங்கப்படும் விடுமுறைகள், கிளப் உறுப்பினர் கட்டணங்கள் அல்லது நிறுவனத்தின் கிரெடிட் கார்டுகளில் செய்யப்படும் தனிப்பட்ட செலவுகள், அவை முற்றிலும் அலுவல் பணிக்காக இருந்தால் தவிர, வரிக்கு உட்பட்டவைகளாக மாறும்
மதிப்பீட்டு விதிகள் இப்போது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள் சில சலுகைகளை குறைக்கலாம் அல்லது அவற்றை வரிக்குட்பட்ட சம்பள கூறுகளாக மாற்றலாம். இதெல்லாம் சேர்ந்து தான் உங்கள் சம்பளத்தின் ஒட்டுமொத்த அமைப்பையே மாற்றக்கூடும். இந்த மாற்றங்கள், பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளுக்கு இடையேயான தேர்வை முன்பை விட மிகவும் முக்கியமானதாக ஆக்குகின்றன.
ஏப்ரல் 2026-க்கு முன் ஊழியர்கள் சரிபார்க்க வேண்டியவைகள் ஏதேனும் உள்ளதா? புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன், ஊழியர்கள் தங்கள் சம்பள கட்டமைப்பை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அலவன்ஸஸ் (Allowances) மற்றும் பெர்க்ஸ் (Perks) உட்பட, முழுமையான சிடிசி விவரத்தை சரிபார்க்கவும். புதிய விதிகளின் கீழ் எந்தெந்த பலன்களுக்கு வரி விதிக்கப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு வரி விதிப்பு முறைகளின் கீழும் உள்ள வரி பொறுப்பை ஒப்பிட்டு பாருங்கள். தேவைப்பட்டால், உங்கள் எம்பிளாயர் உடன் சாத்தியமான மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கவும். புதிய வரி விதிகள் ஆனது வரி விகிதங்களை அதிகரிக்காது, ஆனால் அவை வருமானம் கணக்கிடப்படும் முறையை மாற்றும். ஏப்ரல் 1, 2026 முதல், உங்கள் சேலரி ஸ்லிப் (Salary Slip) சற்று வித்தியாசமாக தோன்றலாம் - அது நீங்கள் செலுத்தும் வரியின் அளவை நேரடியாக பாதிக்கக்கூடும்!


Click it and Unblock the Notifications








