அமலுக்கு வந்தது புதிய EPF திட்டம்.. பாதி பிஎஃப் பணம் எடுக்க, ஆதார்-பேங்க், கட்டாய KYC.. 5 முக்கிய மாற்றங்கள்!
பிஃஎப் சந்தாதாரர்களுக்கான புதிய இபிஎஃப் திட்டம் 2026 (New EPF Scheme 2026) அமலுக்கு வந்துள்ளதாக இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. இது, பகுதித்தொகை எடுப்பதற்கான (partial withdrawals) புதுப்பிக்கப்பட்ட விதிகள் உட்பட, இ பிஎப் சந்தாதாரர்களுக்கான பல மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது
சமூகப் பாதுகாப்பு சட்டம் 2020-ஐ ( Social Security Code 2020) அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், முந்தைய இபிஎப் திட்டம் 1952-க்கு (Employees Provident Funds Scheme 1952.) மாற்றாக வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய இபிஎப் திட்டமானது, தற்போதுள்ள ப்ரொவிடென்ட் ஃபண்ட (Provident fund) கட்டமைப்புடன் இணக்கமாக இருப்பதுடன், அதன் முக்கிய கட்டமைப்பை தக்கவைத்தும் கொள்கிறது. அதே சமயம், இது டிஜிட்டல் இணக்கத்தை மேம்படுத்துகிறது, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது, ஆவணப் பணிகளை குறைக்கிறது, புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது மற்றும் செயல்முறைகளை எளிதாக்குகிறது.
ஒட்டுமொத்தமாக, இது பயனர்களின் நிதிசார் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதையும், வேலையிலிருந்து விலகுவதற்கு முன்பே நிதியை அணுகுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. சரி இந்த புதிய திட்டத்தால், இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
1. பகுதி அளவு பணம் எடுக்க (Partial withdrawal) அனுமதி: புதிய விதிகளின் படி, உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் குறைந்தபட்சம் 25% இருப்பை (25% Balance) வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், பல்வேறு காரணங்களுக்காக பகுதி அளவு பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
நடைமுறையில், சந்தாதாரர்கள் தங்கள் மொத்த சேமிப்பு தொகையில் 50% முதல் 75% வரை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, ஒரு சந்தாதாரரின் கணக்கில் மொத்தம் ரூ.1 லட்சம் (ஊழியர் மற்றும் முதலாளி பங்களிப்புகள் உட்பட) இருந்தால், அவர் ரூ.25,000-ஐ குறைந்தபட்ச இருப்பாக வைத்துக்கொண்டு, ரூ.75,000 வரை பகுதி அளவு பணத்தை எடுத்துக்கொள்ள தகுதி பெறுவார்.
2. பகுதி அளவு பணம் எடுப்பதற்கான நிபந்தனைகள்: மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம், வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக உங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து பகுதி அளவு பணத்தை எடுப்பதற்கான நிபந்தனைகளை இப்புதிய திட்டம் வழங்குகிறது.
3. தன்னார்வ பங்களிப்பு (Voluntary contribution) அதிகரிப்பு: ஊழியர்கள் தங்கள் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) பங்களிப்பை முந்தைய 12% உச்ச வரம்பிற்கு மேல் அதிகரிக்க இத்திட்டம் அனுமதிக்கிறது. மேலும் முதலாளிகளும் அதற்கு இணையான பங்களிப்பை செலுத்தும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பங்களிப்புகள் நிரந்தரமானவை அல்ல என்பதையும், பின்னர் இரு தரப்பினராலும் குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம் என்பதையும் புதிய விதி குறிப்பிடுகிறது.
4. கேஒய்சி கட்டாயம் (Mandatory KYC): கோரிக்கைகள் (claims) மற்றும் பிற சேவைகளை டிஜிட்டல் முறையில் செயல்படுத்த, உறுப்பினர்கள் தங்கள் ஆதார் (Aadhaar), பான் (PAN) மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை வழங்குவதை EPF திட்டம் 2026 கட்டாயமாக்குகிறது. பகுதி அளவு பணம் எடுத்தல் மற்றும் பிற சேவைகளுக்கான ஆன்லைன் கோரிக்கைகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
5. பணியில் இருக்கும்போதே பிஃஎப் பணத்தை எடுத்தல்: மருத்துவ அவசரநிலை / சிகிச்சை, திருமணம் (தங்கள் அல்லது குழந்தைகளின்), வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக, பணியில் இருக்கும்போதே 'படிவம் 31' (முன்பணம் - Advance) மூலம் பிஃஎப் பணத்தை ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், முழுமையாக பணத்தை எடுப்பதற்கு (படிவம் 19) பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும்- அதாவது ராஜினாமா செய்த பிறகு 2 மாதங்கள் வேலையில்லாமல் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications