இதோ அடுத்தது.. ரீசார்ஜ் விலை உயர்வு.. Airtel 30 நாள் திட்டங்கள் நிறுத்தம்.. Vodafone கேரண்டி டேட்டா நீக்கம்!
டெலிகாம் வல்லுநர்கள் கணித்ததை போலவே புதிய 2026 ஆம் ஆண்டு நெருங்க-நெருங்க இந்தியாவில் உள்ள தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை "மறைமுகமான முறையில்" கட்டவிழ்த்து விடத்தொடங்கி உள்ளன. முதலில் ஏர்டெல் நிறுவனம், இப்போது வோடாபோன் ஐடியா நிறுவனம்!
மறைமுகமான விலை உயர்வு என்றால் என்ன? திடீரென ஒரு திட்டத்தின் மீது ரூ.10 அல்லது ரூ.15 விலை உயர்வை அறிவிப்பதற்கு பதிலாக - நேற்று வரை 1 திட்டத்தின் கீழ் கிடைத்த கூடுதல் நன்மையை நீக்குவதும்..மற்றும் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டங்களை நீக்கி, வாடிக்கையாளர்களை விலை அதிகம் உள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்ய தூண்டுவதும் தான் மறைமுகமான விலை உயர்வு ஆகும்.

டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கையின் படி, வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் ஆனது, புதிய ஸ்மார்ட்போன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு இலவச டேட்டா சலுகைகளை வழங்கும் வி கேரண்டி எக்ஸ்டரா டேட்டா புரோகிராமை (Vi Guarantee extra data program) நிறுத்தி உள்ளதாக தெரிகிறது.
நினைவூட்டும் வண்ணம் வி கேரண்டி திட்டத்தின் கீழ், பயனர்கள் ஒரு வருடத்திற்கு 130ஜிபி அளவிலான உத்தரவாதமான கூடுதல் டேட்டாவை பெற்றனர். அதாவது 13 தொடர்ச்சியான சுழற்சிகளுக்கு, ஒவ்வொரு 28 நாட்களுக்கும், 10ஜிபி டேட்டா தானாகவே வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்படியான வி கேரண்டி எக்ஸ்டரா டேட்டா ஆனது வி ஆப் மூலம் பெறக்கூடியதாக இருந்தது
இந்த சலுகை அறிமுகமான தொடக்கத்தில், பயனர்கள் ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் டெய்லி டேட்டா அன்லிமிடெட் திட்டத்தில் இருக்க வேண்டும் என்றும், 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள வி சந்தாதாரர்கள் அல்லது சமீபத்தில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனுக்கு மேம்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
வி கேரண்டி சலுகை தற்போது கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், அசாம் மற்றும் வடகிழக்கு மற்றும் ஒரிசா தவிர இந்தியா முழுவதும் உள்ள அனைத்து 5ஜி மற்றும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கிடைப்பதாக, வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த மே மாதம் தான் அறிவித்து இருந்தது. தற்போது இந்த நன்மை சத்தம் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த சலுகைக்கான தகுதியை பெற உதவும் ரூ.239 ஆனது கடந்த ஜூலை 2025 இல் ரூ.299 ஆக விலை அதிகரிக்கப்பட்டது. இப்போது, நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்களை தொடர்ந்து, புதிய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான எக்ஸ்ட்ரா டேட்டா திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்கள் ஆனது நீங்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து ரூ.349 அல்லது ரூ.365 இல் தொடங்கி அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன.
வி-க்கு முன்னதாக ஏர்டெல்: கடந்த வாரம், இன்னொரு தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன ஏர்டெல், 30 நாள் செல்லுபடியாகும் இரண்டு டேட்டா பேக்குகளை நிறுத்திவிட்டு, அதன் ப்ரீபெய்ட் டேட்டா பேக் திட்டங்களை நெறிப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த திட்டங்கள் - ரூ.121 மற்றும் ரூ.181 ஆகும்.
ஏர்டெல்லின் ரூ.121 டேட்டா பேக் முன்பு மொத்தம் 8 ஜிபி டேட்டாவை (ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் 6 ஜிபி அடிப்படை + கூடுதல் 2 ஜிபி) 30 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கியது. மறுகையில் உள்ள ஏர்டெல்லின் ரூ.181 திட்டமானது ஒரு ஓடிடி டேட்டா பேக் ஆகும். இது 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தின் கீழ் 15 ஜிபி டேட்டாவை வழங்கியது. கூடவே 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவையும் வழங்கியது
இப்போது மேற்கண்ட 2 டேட்டா பேக்களுமே நிறுத்தப்பட்டுள்ளது (அதாவது ரீசார்ஜ் செய்ய கிடைக்கவில்லை), இதன் மூலம் ஏர்டெல் சேவையின் கீழ் 30 நாள் செல்லுபடியாகும் காலத்துடன் கூடிய டேட்டா பேக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏர்டெல் தற்போது ரூ.100, ரூ.161, ரூ.195 மற்றும் ரூ.361 பேக்குகள் உட்பட நான்கு டேட்டா பேக்குகளை மட்டுமே வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








