WhatsApp ஸ்டோரேஜில் மாற்றம்.. ஸ்டோரேஜ் அதிகமானால் Google Drive இல் தான் சேமிக்க வேண்டும்!
2024 வந்தாலும் வந்தது.. தொடர்ச்சியான முறையில் பல புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த வண்ணம் உள்ளன. சிம் கார்டுகளின் மீதான புதிய விதிகளை (New SIM Card Rules) தொடர்ந்து, புதிய யுபிஐ விதிகள் (New UPI Rules) ஜன.1 முதல் அமலுக்கு வந்தன.
இதற்கிடையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளும் (New Information Technology Rules) வரவுள்ளன. இதன்கீழ் ஏஐ (AI) என்று சுருக்கமான அழைக்கப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், டீப்ஃபேக் (Deepfake) மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ லேங்குவேஜ் மாடல்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதெல்லாம் போதாதென்று தற்போது வாட்ஸ்அப்பிலும் புதிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலாக கூகுள் ட்ரைவில் உள்ள ப்ரீ ஸ்டோரேஜை (Google Drive Free Storage) பயன்படுத்தாமலே, வாட்ஸ்அப் பயனர்களால் தங்கள் வாட்ஸ்அப் சாட்களை ஸ்டோர் செய்ய முடிந்தது. ஆனால் இது கூடிய விரைவில் மாற உள்ளது.
நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு யூசராக இருந்தால் (அதாவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவராக இருந்தால்) 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், உங்களுடைய வாட்ஸ்அப் சாட் ஸ்டோரேஜ் ஆனது உங்கள் கூகுள் டிரைவ் ஸ்டோரேஜின் கீழ் தான் சேமிக்கப்படும் / கணக்கிடப்படும்.

நினைவூட்டும் வண்ணம் அனைத்து பயனர்களுக்குமே கூகுள் டிரைவ் வழியாக 15ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் மட்டுமே இலவசமாக கிடைக்கிறது. ஆனால் பலருக்கும் 15ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் நிச்சயம் பற்றாது. ஏனென்றால் இந்த இலவச வாட்ஸ்அப்பிற்கு மட்டுமின்றி ஜிமெயில் உட்பட பலவகையான சேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டி இருக்கும்.
இந்த இடத்தில் உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளது. மாதத்திற்கு ரூ.35 செலுத்தி கூகுள் ட்ரைவில் இருந்து கூடுதல் ஸ்டோரேஜை பெறலாம். இல்லையென்றால், வேறு வழியே இல்லை, வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் அதிகப்படியான மெசேஜ்களையும், புகைப்படங்களையும், வீடியோகளையும் சேர விடாமல் அடிக்கடி டெலிட் செய்துக்கொண்டே இருக்க வேண்டும்!

மாதந்தோறும் ரூ.35 கொடுத்து எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் வாங்க விரும்புவார்கள் கூகுள் ஒன் (Google One) சேவையை சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டியிருக்கும். இதன்கீழ் உங்களுக்கு 100ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும். அறியாதோர்களுக்கு கூகுள் ஒன் என்பது கூகுள் ட்ரைவ் உடன் தொடர்புடைய சந்தா அடிப்படையிலான ஒரு சேவையாகும்.
இதன்கீழ் உங்களுக்கு மூன்று வகையான சந்தா திட்டங்கள் அணுக கிடைக்கும்: பேஸிக் (Basic), ஸ்டாண்டர்ட் (Standard) மற்றும் பிரீமியம் (Premium). இந்த மூன்றுமே மாதாந்திர அடிப்படையில் அல்லது வருடாந்திர அடிப்படையில் அணுக கிடைக்கும். 100ஜிபி ஸ்டோரேஜிற்கான மாதாந்திர சந்தாவின் (பேஸிக்) விலை ரூ.130 ஆகும். இருப்பினும், கூகுள் இப்போது ஒரு சிறப்பு தள்ளுபடியின்கீழ் இதை வெறும் ரூ.35 க்கு வழங்குகிறது.
இதேபோல 200ஜிபி ஸ்டோரேஜிற்கான கூகுள் ஒன் சந்தா திட்டமானது (ஸ்டாண்டர்ட்) ரூ.210 க்கு பதிலாக ரூ.50 க்கும், 2டிபி சந்தா திட்டமானது (பிரீமியம்) ரூ.650 க்கு பதிலாக ரூ.160 க்கும் அணுக கிடைக்கிறது. இருப்பினும், இந்த கட்டணம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, அதன் பிறகு நீங்கள் வழக்கமான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
இது தவிர, வருடாந்திர பேஸிக் மற்றும் ஸ்டாண்டர்ட் திட்டங்களிலும் கூட சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ரூ.390 செலவாகும் பேஸிக் திட்டமானது, தற்போது வெறும் ரூ.100 க்கு கிடைக்கிறது. இதேபோல மூன்று மாதங்களுக்கு ரூ.630 செலவாகும் ஸ்டாண்டர்ட் திட்டமானது, தற்போது வெறும் ரூ.160 க்கு கிடைக்கிறது.
ஒருவேளை உங்களுக்கு கூகுள் ஒன் சந்தாவின் கீழ் செலவு செய்வதில் விருப்பம் இல்லையென்றால், முன்னரே குறிப்பிட்டபடி உங்கள் ஸ்டோரேஜை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் பெரிய அளவிலான ஃபைல்களை வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் வைக்க வேண்டாம். இப்படி செய்வதால் கூடுதல் செலவுகள் இல்லாமல் இலவசமாக கிடைக்கும் 15ஜிபி ஸ்டோரேஜை திறம்பட கையாள முடியும்.


Click it and Unblock the Notifications








