BSNL SIM-ல் புதிய மாற்றம்.. ரூ.57 அல்லது ரூ.167.. இனி இந்த 2 ஸ்பெஷல் பிளான்களில் 1-ஐ ரீசார்ஜ் செய்தால் போதும்!
பிஎஸ்என்எல் (BSNL) சேவையின் கீழ், நீண்ட காலமாக இருக்கும் ஒரு முக்கிய சிக்கலை சரி செய்யும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனம் 2 புதிய ஸ்பெஷல் பிளான்களை அறிமுகம் செய்து உள்ளது. அதென்ன சிக்கல்? இந்த ஸ்பெஷல் பிளான்களை ரீசார்ஜ் செய்தால் என்னவாகும்? இதை யாருக்கானது? இதோ விவரங்கள்:
முன்னதாக, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு (யுஏஇ) பயணம் செய்வதற்கு முன் சர்வதேச சிம் கார்டுக்கு மாற வேண்டிய கட்டாயம் இருந்தது. இனிமேல் அதற்கு அவசியம் இல்லாமல் ஆக்கும்படியாக.. ரூ.57 மற்றும் ரூ.167 க்கு 2 ஸ்பெஷல் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.167 அல்லது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.57 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், வழக்கமான பிஎஸ்என்எல் சிம் கார்டு ஆனது சர்வதேச அளவில் செயல்படும். இருப்பினும், காலிங் மற்றும் டேட்டா சேவைகளை பெற பயனர்கள் கூடுதல் டாப்-அப்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்தியாவிலேயே முதல் முறையாக இப்படி ஒரு சிம் கார்டு வசதியை அறிமுகம் செய்வது பிஎஸ்என்எல் தான்.
தற்போது வரையிலாக கேரளா வட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி, எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கும், மற்ற வட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்ளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட தொலைத்தொடர்பு ஆபரேட்டரான எடிசலாட் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இப்போதைக்கு கேரளாவை தவிர மற்ற உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளில் (LSAs) உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இது வேலை செய்யாமல் போகலாம் என்பதால் தேவை இல்லாமல் ரூ.57 அல்லது ரூ.167-ஐ ரீசார்ஜ் செய்து பார்க்க வேண்டாம்.
இது குறித்து கேரளாவில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சர்வதேச ரோமிங் ஹெல்ப் டெஸ்க்கை, கீழவரும் அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் - 9495024365. மேலும், பயனர்கள் [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராண்ட் இமேஜை மீட்டெடுக்கவும், நிறுவனத்தை லாபகரமான பாதைக்க மாறுவதற்கும் - பல வகையான வணிக உத்திகளை கையாண்டு வருகிறது. பிஎஸ்என்எல்-க்கு அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணப் பொதிகளுடன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனமானது அடுத்த சில மாதங்களில் நல்ல நிலையை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய 2 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே தத்தம் 5ஜி நெட்வொர்க் வெளியீட்டை நிறைவு செய்யும் கட்டத்தில் இருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 4ஜி நெட்வொர்க்கை பான் இந்தியா அடிப்படையில் அறிமுகம் செய்ய போராடி வருகிறது. இருப்பினும் மலிவான திட்டங்களின் வழியாக இந்நிறுவனம் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்தியாவின் மூன்று தனியார் நிறுவனங்களுமே கடந்த 2024 ஜூலை முதல் வாரத்தில் தத்தம் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை 10-27% வரை அதிகரித்தன. ஆனால் பிஎஸ்என்எல் எந்தவிதமான விலை உயர்வையும் அறிவிக்கவில்லை. இதன் விளைவாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா சேவையில் இருந்த வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்குள் நுழைய தொடங்கினர்.
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024 செப்டம்பரில் மட்டும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய மூன்றும் ஒட்டுமொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதே செப்டம்பரில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் புதிய மொபைல் பயனர்களை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








