Paytm ஆப்பை டெலிட் பண்ணிடாதீங்க.. பேக் அடிச்ச RBI? அடிச்சு சொல்றோம் இது நடக்கும்.. பேடிஎம் சவால்?
பேடிஎம் சேவைகள் மீதான புதிய கட்டுப்பாடுகள், பிப்.29-க்கு பின்னர் பேடிஎம் ஆப் வேலை செய்யாது என்கிற குழப்பம், அது குறித்த விளக்கங்கள், பேடிஎம் நிறுவனத்தின் திடீர் பெயர் மாற்றம் என.. கடந்த சில நாட்களாகவே Paytm VS RBI பஞ்சாயத்து பற்றி எரிகிறது.
அறியாதோர்களுக்கு பேடிஎம் நிறுவனத்தின் இணை நிறுவனமான பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட்டிற்கு (Paytm Payments Bank Limited - PPBL) எதிராக.. ஆர்பிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியானது (Reserve Bank of India) சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆர்பிஐ-யின் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேடிஎம் பிராண்டிற்கு சொந்தமான ஃபின்டெக் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (One97 Communications) ஆனது பேடிஎம் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு புதிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளது.
இந்நிறுவனம், வணிகர்கள் மற்றும் பேடிஎம் ஆப் பயனர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து சேவைகள் வழங்கப்படும் என்றும், பேடிஎம் நிறுவனத்தின் வணிக கூட்டாளர்கள், முன்பை போலவே பேடிஎம் க்யூஆர் கோட்டுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்கள் போன்றவைகளின் வழியாக தொடர்ந்து பயனடையலாம் என்றும் கூறியுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து நிலுவைகளை திரும்ப பெறுதல் அல்லது பயன்படுத்துதல் போன்ற விஷயங்களை, அவர்கள் அக்கவுண்டில் பேலன்ஸ் வரை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேமிப்பு வங்கி கணக்குகள் (Savings bank accounts), நடப்பு கணக்குகள், (Current accounts), ப்ரீபெய்டு கருவிகள், ஃபாஸ்டாக்குகள் (FASTags) மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகளும் (National Common Mobility Cards) அடங்கும்.
"பேடிஎம் ஆப் மற்றும் சேவைகள் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்படும் என்று எங்கள் பயனர்கள் மற்றும் வணிக கூட்டாளர்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில், பெரிய வங்கிகள் உடனான எங்களுடைய ஒத்துழைப்பு விரிவடைந்தது மட்டுமல்லாமல், நேர்மறையான முன்னேற்றமும் அடைந்துள்ளது. இது பலவிதமான வங்கிகளுடன் செயல்பட அனுமதிக்கிறது."

"எங்கள் அசோசியேட் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் ஆனது பேக்-எண்ட் பேங்க் ஆக செயல்படும் சந்தர்ப்பங்களில், அதன்கீழ் உள்ள சேவைகளை மற்ற கூட்டாளர் வங்கிகளுக்கு நாங்கள் தடையின்றி மாற்றலாம். இது எங்களுடைய வணிக கூட்டாளர்களுக்கு எந்தவிதமான இடையூறுளையும் எதிர்கொள்ள விடாமல் பாத்துக்கொள்ளும்.
"பேடிஎம் க்யூஆர் கோட்டுகள் (Paytm QR codes), சவுண்ட்பாக்ஸ் (Soundbox) மற்றும் கார்டு மெஷின்கள் (Card machines) போன்ற எங்களுடைய சொல்யூஷன்களிலிருந்து அவர்கள் தொடர்ந்து பயனடையலாம், முன்பு போலவே!" என்று ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பிளாக் போஸ்ட் (Blog Post) ஒன்றின் வழியாக தெரிவித்துள்ளது.

மேற்கண்ட வாக்குறுதிகளை வைத்து பேடிஎம் நிறுவனத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டில் இருந்து ஆர்பிஐ பின்வாங்கி விட்டது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். "உண்மையில் பேடிஎம் நிறுவனம் பிழைத்து கொள்வதற்காக போராடி வருகிறது". இதை நாங்கள் சொல்லவில்லை; ப்ரோக்கரேஜ் ஹவுஸ் ஆன மெக்குவாரி ஈக்விட்டி ரிசர்ச் கூறியுள்ளது.
மெக்குவாரி ஈக்விட்டி ரிசர்ச்சின் கூற்றுப்படி பேடிஎம் நிறுவனத்தின் பேரண்ட கம்பெனியான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ஆனது மோசமான நிலைமையில் உள்ளது மற்றும் அதன் டார்கெட் ப்ரைஸ் 58% குறைந்துள்ளது. ஆர்பிஐ-யின் சமீபத்திய கட்டளைகளுக்கு பிறகு, பேடிஎம் நிறுவனமானது "வாடிக்கையாளர் வெளியேற்றம்" என்கிற தீவிரமான ஆபத்தை எதிர்கொள்கிறது.
இது பேடிஎம் நிறுவனத்தின் பணமாக்குதல் மற்றும் வணிக மாதிரியை கணிசமாக பாதிப்பதாக மெக்குவாரி ஈக்விட்டி ரிசர்ச் கூறியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வருவாய் குறைப்பின் காரணமாக, பேடிஎம் நிறுவனத்தின் பங்குக்கான இலக்கு விலையானது, ஒரு பங்கிற்கு ரூ.650 இல் இருந்து ரூ.275 ஆக குறைக்கப்பட்டுள்ளது, என்றும் மெக்குவாரி குறிப்பிட்டுள்ளது.
தற்போது பேடிஎம் நிறுவனமானது, மாதந்தோறும் 11 கோடி பரிவர்த்தனையை செய்யும் பயனர்கள் உட்பட மொத்தம் 33 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மேலும் 1 கோடிக்கும் அதிகமான வணிகர்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது. இதெல்லாம்.. ஒவ்வொரு நாளும், சல்லி சல்லியாக நொறுங்கி கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை!


Click it and Unblock the Notifications