புது ரூல்ஸ்.. ஆதார்ல திருத்தம்.. இனி தனியாருக்கு அங்கீகாரம்.. டிராவல், டூரிசம், ஹெல்த்.. இப்போ என்னென்ன வருது!
ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் பொருந்தும்படியான விதிகளில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) திருத்தம் செய்துள்ளது. இந்த ஆதார் திருத்த விதிகள் 2025 (Aadhaar Amendment Rules 2025) என்ன சொல்கிறது? இனிமேல் டிராவல், டூரிசம், ஹெல்த், ஈ-காமர்ஸ் போன்ற பல்வேறு சேவைகளில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது? இதனால் ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு என்ன நடக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நிதி சேவைகள், மத்திய, மாநில அரசு மானியங்கள், அடையாளம் சரிபார்ப்பு போன்ற பல்வேறு சேவைகளுக்காக ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த ஆதார் விதிகள் 2016 (Aadhaar Act 2016) கொண்டு வரப்பட்டது. இப்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்த ஆதார் திருத்த விதிகள் 2025 என்ன சொல்கிறது?

இந்த விதிகளின்படி அரசாங்கம் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்தி கொள்ள அதிகாரம் வழங்கப்படுகிறது. ஈ-காமர்ஸ், டிராவல், டூரிசம், ஹெல்த் மற்றும் ஹால்பிடாலிட்டி போன்ற பொது நலன் சார்ந்த பல்வேறு சேவைகள் வழங்குவதில் இனிமேல் தனியார் நிறுவனங்களும் ஆதார் கார்டு வைத்திருப்போரிடம் ஆதார் அங்கீகாரத்தை கேட்க முடியும்.
ஆனால், இந்த ஆதார் அங்கீகாரத்தை தனியார் நிறுவனங்கள் எளிதாக பெற்றுவிட முடியாது. இதை பெற முதலில் மத்திய, மாநில அரசுகளின் தேவைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விண்ணபிக்க வேண்டும். இதை யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது வெரிபிகேஷன் செய்யும்.
அதன்பிறகு யுஐடிஏஐ ஆனது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். இது முடிந்த பிறகு தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த அனுமதி கிடைக்கும். இருப்பினும், இறுதியாக அந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் சேவையை பொறுத்து மத்திய, மாநில அல்லது துறை சார்ந்த ஒப்புதலை பெற வேண்டி இருக்கும்.
இப்படியான கட்டங்களுக்கு பிறகே தனியார் நிறுவனங்கள் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த முடியும். இதுவொரு பொதுவான சேவை மட்டுமல்ல. ஆதார் அங்கீகாரம் என்பதே தனிப்பட்ட நபர்களை உள்ளடக்கியதாகும். அதாவது, ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒருவர் நிதி சேவை, வணிக சேவை, அரசு திட்டங்களை பெறுதல் போன்ற பலவற்றுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த சேவைகளை பெறும் நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்த அவர்களிடம் ஆதார் அங்கீகாரம் கோரப்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆதார் கார்டு விவரங்களை வெரிபிகேஷன் செய்து, உங்களுக்கு சேவைகளை வழங்க முடிகிறது. இது சிம் கார்டு, பேங்க் அக்கவுண்ட் ஓப்பன், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற பல்வேறு சேவைகளுக்கு தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது.
இனிமேல், தனியார் நிறுவனங்களும் இந்த ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த இருக்கின்றன. ஆகவே, ஆன்லைன் டிக்கெட் புக்கிங், ஈ-காமர்ஸ் ஷாப்பிங், ஹோட்டல் புக்கிங், டூரிசம் போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவையில் தனி நபரின் அடையாளத்தை வெரிபிகேஷன் செய்ய அந்த நிறுவனங்களும் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த போகின்றன.
இதனால் ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது. மத்திய மாநில அரசுகள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆகியவற்றின் விதிகள், கட்டுப்பாடுகளுடன் இந்த அங்கீகாரம் தனியாருக்கு கிடைக்கிறது. ஆகவே, இதில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications