புது ரூல்ஸ்.. அக்டோபர் 1 முதல் அமல்.. ரூ.125 கொடுக்காம இருக்க முதல்ல இதை செஞ்சிருங்க.. Aadhaar கார்டுல வருது!
ஆதார் கார்டு (Aadhaar Card) என்பது தற்போது பள்ளி சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை, போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. குறிப்பாக குழந்தைகளின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் பயோமெட்ரிக் (Biometric) விவரங்களை புதுப்பிப்பது மிகவும் முக்கியமாகிறது. இந்த நிலையில், குழந்தைகளின் ஆதார் கார்டு தொடர்பாக பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான காலக்கெடு நெருங்கி வருகிறது.
ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யும்போது பொதுவாக புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வயதில் குழந்தைகளின் கைரேகை (Fingerprint) மற்றும் கருவிழி (Iris) போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படுவதில்லை. குழந்தைக்கு 5 வயது நிறைவடைந்த பிறகு முதல் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் (Mandatory Biometric Update - MBU) செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது.

அதேபோல், குழந்தைக்கு 15 வயது நிறைவடைந்த பிறகு மீண்டும் இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் (MBU) செய்ய வேண்டும். இதன் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் போன்ற முக்கியமான அடையாள விவரங்கள் ஆதார் பதிவில் புதுப்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில், 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு தற்போது இலவசமாக செய்யப்படுகிறது. இந்த இலவச சேவை செப்டம்பர் 30, 2026 வரை மட்டுமே கிடைக்கும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. எனவே, உங்கள் குழந்தைக்கு தேவையான பயோமெட்ரிக் அப்டேட் இன்னும் செய்யப்படாமல் இருந்தால், செப்டம்பர் 30-க்குள் அதை முடித்துக்கொள்வது முக்கியம்.
குறிப்பாக 7 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட் கட்டணத்தை யுஐடிஏஐ ஒரு வருடத்திற்கு தள்ளுபடி செய்திருந்தது. இந்த தள்ளுபடி அக்டோபர் 1, 2025 முதல் செப்டம்பர் 30, 2026 வரை அமலில் உள்ளது. இந்த காலத்திற்குப் பிறகு வழக்கமான கட்டணம் அமலுக்கு வரும். தற்போதைய கட்டண அட்டவணையின்படி, கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டுக்கான கட்டணம் ரூ.125 ஆக உள்ளது.
இதனால், அக்டோபர் 1, 2026 முதல் குழந்தையின் வயது மற்றும் அப்டேட் செய்ய வேண்டிய நிலையைப் பொறுத்து ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் தொடர்பான விதிகள் தனியாக உள்ளன. எனவே, குழந்தையின் வயது மற்றும் இதற்கு முன்பு MBU செய்யப்பட்டுள்ளதா என்பதை பெற்றோர்கள் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
இந்த பயோமெட்ரிக் அப்டேட்டை வீட்டில் இருந்தபடியே முழுமையாக செய்ய முடியாது. குழந்தையை நேரடியாக ஆதார் பதிவு அல்லது அப்டேட் மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு குழந்தையின் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் உள்ளிட்ட தேவையான பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படும். யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, அருகிலுள்ள ஆதார் மையத்தில் இந்த சேவையைப் பெறலாம்.
குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் சரியான நேரத்தில் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், எதிர்காலத்தில் ஆதார் அடிப்படையிலான அங்கீகார சேவைகளைப் பயன்படுத்தும்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. குறிப்பாக அரசு நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் நீட் (NEET), ஜேஇஇ JEE, சியூஇடி (CUET) போன்ற போட்டித் தேர்வுகள் தொடர்பான செயல்முறைகளில் ஆதார் அங்கீகாரம் தேவைப்படும் சூழல்கள் உள்ளன.
மேலும், பயோமெட்ரிக் விவரங்களை மட்டும் புதுப்பிப்பதற்கான கட்டணமும், பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற பிற ஆதார் விவரங்களை மாற்றுவதற்கான கட்டணமும் ஒன்றல்ல. எனவே, குழந்தையின் ஆதாரில் என்னென்ன விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே சரிபார்த்து, தேவையான சேவையை மட்டும் பெறுவது நல்லது.
முக்கியமாக, செப்டம்பர் 30, 2026 என்ற காலக்கெடுவை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டை இலவசமாக செய்து முடிக்க தற்போது வாய்ப்பு உள்ளது. கடைசி நேரத்தில் கூட்டம் மற்றும் காத்திருப்பு ஏற்படுவதை தவிர்க்க, தேவையான குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை முன்கூட்டியே புதுப்பித்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
