போச்சு.. பழைய Aadhaar கார்டு கதை முடிஞ்சது.. பெயர் இல்லாத புது ஆதார் அட்டை அறிமுகம்.. எப்போது வாங்கணும்?
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புதிய ஆதார் அட்டைகளை வெளியிட தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எப்போது வெளியாகும்? பழைய ஆதார் அட்டைக்கும், புதிய ஆதார் அட்டைக்கும் என்ன வித்தியாசம்? இதோ விவரங்கள்:
புதிய ஆதார் அட்டை எப்போது அறிமுகமாகும்? யுஐடிஏஐ ஆனது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய ஆதார் அட்டைகளை வெளியிட தயாராகி கூறப்படுகிறது. வரவிருக்கும் புதிய ஆதார் அட்டைகள் ஆனது வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகும் என்றும் ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

புதிய ஆதார் அட்டையின் அறிமுகம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் குடிமக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வளவுபடுத்துவதே ஆதார் அட்டைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய காரணம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
புதிய ஆதார் vs பழைய ஆதார் அட்டைகள்: என்ன இருக்காது? இந்தியாவில் ஆதார் வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ ஆனது, புதிய ஆதார் அட்டைகளில் குறைந்த அளவிலான தகவல்களையே வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஆதார் அட்டைகளில் இருந்தது போல, பெயர், ஆதார் எண், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தனிநபர்களின் விவரங்கள் புதிய ஆதார் அட்டைகளில் காட்டப்படாது.
புதிய ஆதார் vs பழைய ஆதார் அட்டைகள்: என்ன புதுமையாக இருக்கும்? புதிய ஆதார் அட்டையில், குடிமகனின் புகைப்படம் மட்டுமே தெரியும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. தற்போதுள்ள அனைத்து ஆதார் அட்டைகளிலும் இந்த அம்சம் ஒரே மாதிரியாக உள்ளது. புதிய ஆதார் அட்டையில் - உங்களின் அனைத்து முக்கிய தரவுகளையும் மறைக்கும் க்யூஆர் குறியீடுதான் இதில் உள்ள மிகவும் மேம்பட்ட அம்சமாக இருக்கும்.
இந்த க்யூஆர் குறியீட்டில் உங்கள் பெயர், ஆதார் எண், பிறந்த தேதி, முகவரி, பாலினம் போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பு தரவுகள் அனைத்தும் இருக்கும். அதாவது புதிய ஆதார் அட்டையில் ஒவ்வொரு விவரமும் மறைகுறியாக்கப்பட்ட வடிவத்தில் இருக்கும்.
புதிய ஆதார் vs பழைய ஆதார் அட்டைகள்: விவரங்களை யார் பார்க்கலாம்? எளிதில் அச்சிடக்கூடிய இந்த தகவல்கள் புதிய ஆதார் அட்டைகளில் கிடைக்காது என்பதால், ஹோட்டல்கள், அலுவலகங்கள் போன்ற பல நிறுவனங்களால் நகல் எடுத்து உங்கள் தரவுகளை கண்காணிக்க முடியாது. மாறாக அதில் உள்ள க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கேனர்கள், யுஐடிஏஐ அதிகாரப்பூர்வ ஆப்கள் மற்றும் சரிபார்ப்பு கருவிகள் உங்கள் விவரங்களை ஸ்கேன் செய்ய முடியும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆதார் - உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பு: ஆதார் ஆனது உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாகும். ஆதார் தரவுத்தளத்தை பராமரிக்கும் யுஐடிஏஐ ஆனது சுமார் 134 கோடி பேர் ஆதார் அட்டைதாரர்களாக பயன்பாட்டில் இருப்பதாக கூறுகிறது.
யுஐடிஏஐ-ன் ஆதார் அங்கீகார சேவை: யுஐடிஏஐ ஆனது, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஆதார் அங்கீகார சேவையை வழங்குகிறது. இதன்கீழ் ஒரு தனிநபரின் ஆதார் எண் மற்றும் அது தொடர்பான அடையாள தகவல்கள், ஆதார் தரவுத்தளத்துடன் சரிபார்க்கப்படுகின்றன. இந்த சரிபார்ப்பு, அந்த நிறுவனம் வழங்கும் சேவைகளை அளிப்பதற்காக, ஒடிபி, பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி, முகம்) அல்லது மக்கள்தொகை விவரங்களை பயன்படுத்தி தனிநபரின் அடையாளத்தை உறுதி செய்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஆதார் முகச்சரிபார்ப்பு, முக பயோமெட்ரிக்கை துல்லியமாக சரிபார்க்க உதவும் செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. ஆதார் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, ஆதார் சரிபார்ப்பு சேவைகளை பயன்படுத்த விரும்பும் எந்தவொரு நிறுவனமும், யுஐடிஏஐ-ல் அங்கீகார பயனர் முகமைகளாக (AUA) அல்லது கேஒய்சி பயனர் முகமைகளாக (KUA) பதிவு செய்யப்பட வேண்டும் என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications