ஆதாரில் மொபைல் எண் மாற்ற இனி சிரமம் இருக்காது.. வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. வருகிறது புதிய வசதி..
இந்திய தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ (UIDAI) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த அமைப்பு ஆதார் (Aadhaar) அட்டையில் மொபைல் நம்பர் அப்டேட் செய்வதிலும் ஒரு புதிய வசதியைக் கொண்டுவர உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இனி வீட்டில் இருந்தே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்றி கொள்ள முடியும். அதாவது ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே ஆதார் மொபைல் செயலி மூலம் மாற்றிக்கொள்ளும் வசதி விரைவில் கொண்டு வர உள்ளதாக தற்போது ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதுவும் அரசின் திட்டங்கள் முதல் பான் கார்டு வரை என அனைத்திற்குமே ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கியில் கணக்கு துவக்கவும், நலத்திட்டங்களின் பலன்களைப் பெறவும் ஆதார் அவசியமானதாக உள்ளது. இப்படி அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலும் ஆதார் மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் போன்ற இடங்களுக்குத் தான் உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் ஆதார் மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் போன்ற போன்ற இடங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தான் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, ஆதார் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த செயலி மூலம் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே OTP மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம். ஆகவே இனி ஆதார் மையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க அவசியம் இருக்காது.
புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு
மேலும் சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி, ஆதார் அட்டையில் நமது புகைப்படம், பெயர், முகவரி, ஆதார் எண் போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இனிமேல் ஆதாரின் அடையாளமே முற்றிலும் மாற இருக்கிறது. இனி ஆதார் அட்டையில் குறிப்பிட்ட நபரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு மட்டுமே இடம்பெறும் வகையில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டையில் வரும் இந்த மாற்றம் குறித்த தகவலை இந்திய தனித்துவ அடையாள அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாக நாம் சிம் கார்டு வாங்கு போதும், ஹோட்டலில் சென்று தங்கும் போதும், போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் போதும் நமது ஆதார் அட்டையை அங்கே கொடுத்துச் சரிபார்ப்பு செய்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது.

ஆனால் இவ்வாறு நமது ஆதார் அட்டை நகல்களைச் சமர்ப்பிக்கும் போது சில மோசடியாளர்கள் கைகளில் அவை சிக்கி தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் டிசம்பர் மாதத்திலிருந்து ஆதார் அட்டை "புகைப்படம் + QR கோடு" வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருகிறது.
ஆதாரை அச்சிட்டு கொடுப்பது முற்றிலும் தவறு. அட்டையில் படம், QR கோடு மட்டும் இருந்தால் போதும் என புவனேஷ் குமார் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








