இனி தபால் அலுவலகங்களில் பான் கார்டு ரெடியா வச்சுக்கோங்க.. வெளியானது முக்கிய அறிவிப்பு..
நாட்டில் ஆதார் போன்று பான் கார்டும் (PAN Card) மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும். அதுவும் மக்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்கு தற்போது ஆதார் மற்றும் பான் கார்டு முக்கியமான ஆவணங்களான இருக்கின்றன. இந்த நிலையில் தபால் அலுவலகங்களில் மேற்கொள்ளும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணைக் குறிப்பிடுவது இனி கட்டாயம் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது அதிக மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகளைச் சரியான முறையில் கண்காணிப்பதன் வாயிலாக, வரி ஏய்ப்பை தடுக்கவும், கருப்பு பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நிதி பரிவர்த்தனைகளை முறைப்படுத்தவும் இது அவசியமாகிறது.

குறிப்பாக வருமான வரி சட்டம் 2026-ன் கீழ், ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி, தபால் அலுவலக பரிவர்த்தனைகளுக்கு பான் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். அதேபோல் கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பெரிய பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு பான் எண் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை டெபாசிட் தாரரிடம் பான் எண் இல்லை என்றால், அவர் வருமான வரி விதிகளில் 2026 அடிப்படையில், படிவம் 97ஐ சமர்ப்பிக்க வேண்டும். அதில் டெபாசிட் தாரரின் பெயர், முகவரி, தொகை உள்ளிட்ட விபரங்களைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் சேர்த்துத் தாக்கல் செய்ய வேண்டும்.
படிவத்தையும் ஆவணங்களையும் தபால் அலுவலகங்கள் முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். பான் எண் இல்லதாவார்களுக்கு வழங்கப்பட்டு வந்த படிவம் 60 நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் படிவம் 97, படிவம் 98 ஆகிய இரண்டு படிவங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டு விண்ணப்ப செயல்முறையில் மாற்றம்
மேலும் கடந்த மாதம் அரசு திருத்தப்பட்ட பான் விண்ணப்ப விதிகளை அறிமுகப்படுத்தியது. அதுவும் இதில் புதிய படிவங்கள், கடுமையான ஆவணத் தேவைகள் மற்றும் அடையாள சரிபார்ப்பு செயல்முறையில் மாற்றங்கள் ஆகியவை அடங்கும். இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பான் விண்ணப்பச் செயல்முறையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட படிவம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்தியத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முந்தைய படிவம் 49A-க்கு பதிலாகப் படிவம் 93-ஐ நிரப்ப வேண்டும். அதேசமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் படிவம் 49AA-க்கு பதிலாகப் படிவம் 95-ஐ பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி பான் கார்டு விண்ணப்பத்திற்கு ஆதார் மட்டுமே போதாது. புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, ஆதார் அட்டையை (aadhaar card) மட்டும் கொண்டு விண்ணப்பிக்க முடியாது. அதாவது விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டையுடன் கூடுதலாகத் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி பான் கார்டு விண்ணப்பங்களுக்குப் பிறந்த தேதி சான்று இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏப்ரல் 1, 2026 முதல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் செல்லுபடியாகும் பிறந்த தேதி சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். புதிய விதிமுறைகளின்படி பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது ஒரு நீதிபதியால் வழங்கப்பட்ட பிரமாண பத்திரம் போன்ற துணை ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications