இது முடிவல்ல.. பரிதாப நிலையில் Tech ஊழியர்கள்.. வெறும் 5 மாதங்களில் 2 லட்சம் பேர் பணிநீக்கம்!
இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர வேண்டும் என்று அதற்கான படிப்புகளுக்கு பல லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே லட்சக்கணக்கான டெக் ஊழியர்கள் (Tech Workers) பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, அவர்களிடையே மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் வரலாறு காணாத அளவிற்கு பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த வந்த ஊழியர்களே, ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். எந்த அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்றால், காலையில் பணிக்கு புறப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அலுவலகம் செல்லும் முன்பே பணிநீக்க நோட்டீஸ் சென்று சேருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பணிக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில், கூகுள் (Google), மெட்டா (Meta), அமேசான் (Amazon), ட்விட்டர் (Twitter) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் முதல் டான்சோ (Dunzo), ஷேர்சாட் (Sharechat), ரெபெல் ஃபுட் (Rebel Foods) போன்ற இந்திய நிறுவனங்கள் வரை பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு, பல நிறுவனங்களின் ஆண்டு வருமானம் அதிகரித்துள்ளது. இதனால், அதை வைத்து மற்ற நிறுவனங்களும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை ஆதரிக்க எண்ணுக்கின்றன. இதனால், தொழில்நுட்ப ஊழியர்கள் ஒருபுறம் வேலையை இழந்து தவிப்பது மட்டுமல்லாமல், அதுசார்ந்த படிப்புகளில் பயின்றுவரும் இளைஞர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் 2023ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 1,97,985 தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, layoff.fyi நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்பட்டியலில் தெரியவந்துள்ளது. சுமார் 696 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரையில் மட்டும் இவ்வளவு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது 2022ஆம் ஆண்டை விட 30 சதவீதம் அதிமாகும்.
வரும் காலங்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் கூகுள், மெட்டா, அமேசான் நிறுவனங்கள் அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்து முன்னணியில் இருக்கின்றன. இதற்கு நிர்வாக ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், ஏஐ (AI) வருகை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. கஸ்டமர் கேர் (Customer Care) வேலை முதல் டேட்டா என்ட்ரி கிளர்க் (Data Entry) வேலை வரையில் ஏஐ செய்து முடிக்கும் என்பதால், அதுசார்ந்த வேலைகளும், வேலைவாய்ப்புகளும் இனி மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சான்றாக இந்தியாவின் பேடிஎம் நிறுவனம், அதன் கஸ்டமர் கேர் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்ததை சொல்லாம். இப்படி வெளிப்படையாக பல நிறுவனங்கள் அறிவிக்கின்றன. பல நிறுவனங்கள் அறிவிக்காமல், பணிநீக்கத்தை செய்துவருகின்றன. இதனால் தொழில்நுட்பத்துறையில் ஊழியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நேரத்தில் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் என்னவாகும் என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications