செவ்வாய் கிரகத்தில் கிடக்கும் இன்சைட் லேண்டர்.. NASA விஞ்ஞானிகளுக்கு கிடைத்த டேட்டா!
இதுவே நான் அனுப்பக்கூடிய கடைசி படமாக இருக்கலாம். என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்: இங்கு எனது நேரம் பயனுள்ளதாகவும் அமைதியாகவும் இருந்தது. எனது மிஷன் டீமுடன் தொடர்ந்து பேச முடிந்தால், நான் செய்வேன். ஆனால் நான் விரைவில் இங்கே சைன்-ஆப் செய்வேன்.
மேற்கண்ட வார்த்தைகள் ஒரு உண்மையான ரோபோட்டால் பகிரப்பட்ட வரர்த்தைகள் அல்ல. மாறாக விரைவில் "இறந்துபோகும்" நிலையில் உள்ள ஒரு மார்ஸ் ரோபோட்டின் மனநிலையில் இருந்தபடியாக, 2022 ஆம் ஆண்டில் நாசா பகிர்ந்த வார்த்தைகள் ஆகும். அந்த மார்ஸ் ரோபோட்டின் பெயர் - இன்சைட் லேண்டர்!

இப்படியாக கடந்த 2022 ஆண்டிலேய "கதை முடிந்து விட்டது!" என்று அறிவிக்கப்பட்டு ஒரு 'டெட் ரோபோட்' (Dead Robot) என முடிவு செய்யப்பட்ட இன்சைட் லேண்டர் ( InSight lander) ஆனது செவ்வாய் கிரகத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கிறது என்று நீங்கள் நினைத்தால்.. அது முற்றிலும் தவறு!
ஏனென்றால் சில தினங்களுக்கு முன்பாக இன்சைட் லேண்டர் வழியிலான ஒரு முக்கிய கண்டுபிடிப்பை நாசா (NASA) விஞ்ஞானிகள் நிகழ்த்தி உள்ளனர். அதாவது செவ்வாய் கிரகத்தில் கிடக்கும் ஒரு இறந்த ரோபோட் ஆனது இன்னமும் மதிப்புமிக்க தகவல்களை நாசா விஞ்ஞானிகளுக்கு வழங்குகிறது. அதென்ன தகவல்? நாசாவின் இன்சைட் லேண்டருக்கு என்ன ஆனது? இதோ விவரங்கள்:

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய நாசாவின் இன்சைட் லேண்டருக்கு என்ன ஆனது? மே 2018 இல் விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் லேண்டர் ஆனது, பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தை (Mars Planet) சென்றடைய ஆறரை மாதங்களில் சுமார் 300 மில்லியன் மைல்கள் பயணம் செய்தது.
நில அதிர்வு ஆய்வுகள் (Seismic Investigations), புவியியல் (Geodesy) மற்றும் ஹீட் டிரான்ஸ்போர்ட் (Heat Transport) போன்றவைகளை ஆய்வு செய்யும் நோக்கங்களை கொண்ட இன்சைட் லேண்டரில் பில்ட்-இன் கேமரா (Built-in Camera) உடனான ஒரு ரோபோ கையும் (Robot Hand) அடக்கம் இது தரவுகளை சேகரிக்க, வெப்ப ஆய்வு மற்றும் நில அதிர்வு அளவீட்டை பயன்படுத்தியது.
கலிபோர்னியாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின்படி (Jet Propulsion Laboratory), இன்சைட் லேண்டர் ஆனது செவ்வாய் கிரகத்தில் இருந்த போது பல விண்கல் தாக்குதல்கள் (meteorite strikes) மற்றும் 1,300 க்கும் மேற்பட்ட செவ்வாய் கிரக நிலநடுக்ககங்களை (Marsquakes) சந்தித்து உள்ளது மற்றும் அதுகுறித்த தரவுகளை கைப்பற்றி உள்ளது.
சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும்படி வடிவமைக்கப்பட்ட இன்சைட் லேண்டரின் சோலார் பேனல்களில் (Solar Panels) தூசி குவிந்ததன் விளைவாகவே அது செயல் இழக்கும் நிலைமை வந்தது. ஆனாலும் கூட இந்த மார்ஸ் ரோபோ அதன் அசல் பணியை இரண்டு பூமி ஆண்டுகளுக்குள்ளேயே (Two Earth Years) முடிந்துவிட்டது. அதன்பிறகு கிடைத்த எல்லாமே போனஸ் தான்!
அப்படியான ஒரு போனஸ் தான் தற்போது கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் அனுப்பட்ட நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) ஆனது செவ்வாய் மேற்பரப்பில் "இறந்துபோய் கிடைக்கும்" இன்சைட் லேண்டரின் புகைப்படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.
அதாவது செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி, கடந்த 2022 ஆம் ஆண்டு வரையிலாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய இன்சைட் லேண்டரை.. செவ்வாய் கிரகத்திற்கு மேலே "மிதக்கும்" மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் ஆனது புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.

அந்த புகைப்படத்தின் வழியாக, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காலப்போக்கில் எவ்வளவு விரைவாக தூசி குவிகிறது (How quickly dust accumulates) என்பதை புரிந்துகொள்ள முடியுமென்றும், இது செவ்வாய் கிரகத்தில் உள்ள மற்ற மேற்பரப்பு இடையூறுகளின் வயதை (Age of other surface disturbances) மதிப்பிடவும் உதவும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது இன்சைட் லேண்டர் ஆனது ஒரு டெட்-ரோபோட் ஆக மாறிய பின்னரும் கூட, அது பயனுள்ளதாக இருக்கிறது!
இன்னொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது. அது என்னவென்றால்.. 2005-ல் ஏவப்பட்ட மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரின் கதையும் எப்போதோ முடிந்து இருக்க வேண்டியது. ஆனால் இது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக நீடித்து செயல்பட்டு கொண்டிருக்கிறது, மற்றும் இது மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!


Click it and Unblock the Notifications








