காலாவதியாகும் ஐஎஸ்எஸ்- பசிபிக் கடலில் மூழகப் போகும் சர்வதேச விண்வெளி மையம்: 2030-ல் நாசாவின் திட்டம்!
பல சர்வதேச விண்வெளி அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 2030 ஆம் ஆண்டு இறுதியில் செயலிழந்து ஓய்வு பெற இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட் காலம் முடிவடைந்த உடன் விண்வெளி மையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டிருக்கிறது என கூறப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் மூழ்கும் ஐஎஸ்எஸ்
2030 ஆம் ஆண்டில் இதற்கான பணி தொடங்கும் என நாசா திட்டமிட்டிருக்கிறது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் பாயிண்ட் நெமோ என்று அழைக்கப்படும் இடத்தில் அது விழும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும் விண்வெளி குப்பைகளில் ஒன்றாக சர்வதேச விண்வெளி மையம் மாறும் என கூறப்படுகிறது. முன்னதாக ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட நாடுகளின் 263-க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைகள் கடலில் புதைக்கப்பட்டுள்ளதாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையம் ஆனது அதன் செயல்பாட்டின் இறுதி தசாப்தத்தை நோக்கி செல்கிறது. நாசா அதை வணிக நடவடிக்கைகளுக்காக திறக்க திட்டமிட்டிருக்கிறது. எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் உட்பட பல தனியார் ஆய்வு நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் விண்வெளி பொருளாதாரத்திற்காக செலவிட்டு போட்டியிடுகின்றன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னதாகவே ஆயிரக்கணக்கான சிறிய செற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி இருக்கிறது. அதேபோல் ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவனம் விண்வெளி சுற்றுலா தளங்களில் போட்டியிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ப்ளூ ஆர்ஜின், நானோராக்ஸ் மற்றும் நார்த்ராப் க்ரம்மன்
தொடர்ந்து மாற்றத்திற்கான நடவடிக்கையை தொடங்க நாசா முன்னதாகவே திட்டமிட்டுவிட்டது. டிசம்பர் 2021 ஆம் ஆண்டு வெளியான செய்திக் குறிப்பில், ப்ளூ ஆர்ஜின், நானோராக்ஸ் மற்றும் நார்த்ராப் க்ரம்மன் ஆகிய மூன்ரு நிறுவனங்களுடன் பூமியின் சுற்றுப்பாதையில் தனியார் விண்வெளி நிலையங்கள் உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக நாசா குறிப்பிட்டது.

பல விதமான கோளாறுகள்
முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையமான ISS இல் தொடர்ந்து பல விதமான கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுது. அதிலும், இவை பெரும்பாலும் காலாவதியான உபகரணங்கள் மற்றும் வன்பொருள் காரணமாக எழுந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நீண்ட காலமாகத் தொடர்ந்து சில கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இது இன்னும் சில காலத்தில் "சரிசெய்ய முடியாத" அளவிற்குத் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிகாரி எச்சரித்தனர்.

80 சதவிகித அமைப்புகள் காலாவதி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய பிரிவு விமானத்தில் உள்ள 80 சதவிகித அமைப்புகள் காலாவதி தேதியைக் கடந்துவிட்டதாக விளாடிமிர் சோலோவியோவ் மாநில ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். இதை விட, விண்வெளி நிலையத்திற்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறிய விரிசல்கள் காணப்படுவதாகத் தெரிவித்தனர். காலப்போக்கில் இந்த சிறிய விரிசல்கள் மோசமடையக்கூடிய பெரிய விரிசல்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

எனர்ஜியாவின் தலைமை பொறியாளர்
சர்வதேச விண்வெளி நிலையத்தின் வன்பொருள் மீது ரஷ்யா நீண்ட காலமாகக் கவலை எழுப்பி வருகிறது. அதேபோல், வரும் 2025 ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நாம் வெளியேறலாம் என்று ரஷ்யா பரிந்துரைத்தது. இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 1998 இல் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது. இந்த நிலையம் முதலில் வெறும் 15 வருட ஆயுட்காலத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ISS இன் ரஷ்யப் பிரிவின் முன்னணி டெவலப்பரான விண்வெளி நிறுவனமான எனர்ஜியாவின் தலைமை பொறியாளர் சோலோவியோவ் கூறுகையில், "விமானத்தில் உள்ள அமைப்புகள் முழுமையாக அதற்காக வழங்கப்படக் காலாவதி நாட்களைத் தாண்டி சென்றுவிட்டது, இது கூடிய விரைவில் சரிசெய்ய முடியாத தோல்விகளைச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உருவாக்கத் தொடங்கலாம்." என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications