நாசா அனுப்பிய இந்திய மாணவர்களின் ராமன்சாட் 2 மினியேச்சர் செயற்கைகோள்! வெற்றி.!
இந்திய மாணவர்களின் ராமன்சாட் 2 என்ற மிகச் சிறிய மினியேச்சர் செயற்கைகோள், நாசாவின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ் (Cubes in Space)' என்ற போட்டியில் தேர்வு செய்யப்பட்டு, இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டு இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

4 செ.மீ அளவு கொண்ட செயற்கைகோள்
ஆபாஸ் சிக்கா என்ற 17 வயது மாணவன் இந்த ராமன்சாட் 2 மினியேச்சர் செயற்கைகோளை, ஸ்பேஸ் இந்தியா (SPACE-India) உதவியுடன் உருவாக்கியிருக்கிறார். ராமன்சாட் 2 மினியேச்சர் செயற்கைகோள் 4 செ.மீ x 4 செ.மீ x 4 செ.மீ என்ற அளவில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் இந்தியா அமைப்பு
ஸ்பேஸ் இந்தியா அமைப்பு, செயற்கைக்கோள், வானியல், விண்வெளி கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றத்திற்கு தேவையான பயிற்சியையும் வழிகாட்டலையும் இந்திய இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது. ஸ்பேஸ்-இந்தியாவுடனான இன்டர்ன்ஷிப்பின் போது சிக்காவால் இந்த ராமன்சாட் 2 உருவாக்கப்பட்டது.

கியூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டி
நாசா அறிவித்த கியூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டியில் மாணவர்கள் தங்களின் விண்வெளி படைப்புகளை உருவாக்கிச் சமர்ப்பிக்க ஒரு வாய்பு வழங்கப்பட்டது, இதில் சுமார் 350 பங்கேற்பாளர்களின் விண்வெளி படைப்புகளைச் சமர்ப்பித்தனர்.

350 போட்டியாளர்களின் சிறந்த படைப்பு
கியூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட 350 பங்கேற்பாளரின் படைப்புகளிலிருந்து சிறந்த படைப்புகளாக சுமார் 160 விண்வெளி படைப்புகளை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. இதில் ஸ்பேஸ்-இந்தியா சார்பில் சமர்ப்பித்த இரண்டு விண்வெளி படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமன்சாட் 2 மினியேச்சர் செயற்கைக்கோள்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவர்களின் ராமன்சாட் 2 மினியேச்சர் செயற்கைக்கோள், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள நாசாவின் கொலம்பியா அறிவியல் பலூன் வசதி தளத்திலிருந்து திங்கள்கிழமை இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு 38 கி.மீ உயரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

எதற்காக இந்த செயற்கைகோள்?
மாணவர்கள் உருவாக்கியுள்ள ராமன்சாட் 2 மினியேச்சர் செயற்கைக்கோள், சூரியன் மற்றும் விண்வெளியில் உள்ள கதிர்வீச்சை அளவிடும் அதிநவீன கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஆய்வு, மனிதர்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் விண்வெளி பயணத்தைபாதுகாப்பானதாக மாற்ற வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்திற்கு உதவும் ராமன்சாட் 2
ராமன்சாட் 2 வின் ஆய்வு, நிச்சயம் ககன்யான் திட்டத்திற்கு உதவும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியா 2022 ஆம் ஆண்டில் தனது முதல் மனித விண்வெளி பயணத்தை ககன்யான் திட்டத்தின்படி செயல்படுத்தத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications