NASA அறிவித்த 160,000 டாலர் பரிசு.! நிலவுக்கு அனுப்ப சின்ன மூன் ரோவர் செஞ்சுகொடுக்கணும் ரெடியா?
நாசா மினி மூன் ரோவருக்கான பேலோடை வடிவமைக்க உங்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி நாசா சிறிய ரூம்பா அளவிலான ரோபோக்களை சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது, மேலும் அதை நிலவிற்குக் கொண்டு செல்ல உங்கள் கனவிற்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்பி உங்களின் உதவியை நாடியுள்ளது நாசா.

சந்திரனில் உங்களுக்கான ஒரு அடையாளம்
சந்திரனில் உங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க, ஒரு புதிய வாய்ப்பை நாசா இங்கே உருவாகியுள்ளது. நீங்கள் உருவாகும் குட்டி சைஸ் ரோபோட் சோப்பு பெட்டியில் இடம் பிடிப்பது போன்று சிறியதாக இருக்க வேண்டும் என்று நாசா கூறியுள்ளது. இந்த சிறிய பேலோடு கொண்ட ரோவர்களை சந்திர தளத்தில் உருவாகும் இடத்திற்கு நீங்கள் என்ன அனுப்ப விரும்புகிறீர்கள் என்ற கேள்வியுடன் இந்த போட்டியை நாசா அறிவித்துள்ளது.

மினியேட்டரைஸ் பேலோடுகளுக்கான யோசனை
மிக சிறிய அளவிலான ரோவர்களை சந்திரனுக்கு அனுப்ப திட்டமிட்டு வரும் நாசா, மினியேட்டரைஸ் பேலோடுகளுக்கான யோசனைகளைக் பொதுமக்களிடம் கேட்டு, நாசா வியாழனன்று ஒரு அறிவிப்பு அழைப்பை வெளியிட்டுள்ளது. 'Honey, I Shrunk the NASA Payload'என்ற தலைப்பில் HeroX வலைத்தளத்தில் இந்த போட்டிக்கான அறிவிப்பைப் பரிசுத் தொகை மற்றும் போட்டி விபரங்களுடன் வெளியிட்டுள்ளது.

160,000 டாலர் பரிசுத்தொகை
இந்த போட்டியின் கீழ் வெற்றிபெறும் வீரர்களுக்கு சுமார் 160,000 டாலர் பரிசுத்தொகை கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. நாசா அதன் ஆர்ட்டெமிஸ் திட்டத்துடன் இணைக்கும் வடிவமைப்புகளில் ஆர்வமாக உள்ளது, இத்திட்டம் 2024ம் ஆண்டில் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் ஒரு முக்கிய திட்டமாகும். மனிதர்களுக்காக நிலவில் ஒரு நிரந்தர இருப்பை உருவாக்கும் நோக்கத்தை நாசா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரனில் ஆர்ட்டெமிஸ் நுழைவாயில்
நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவு நோக்கி பயணம் செய்ய விரும்பும் விண்வெளி வீரர்களுக்கான தேர்வுக்கு இதுவரை சுமார் 12,000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். சந்திரனில் ஆர்ட்டெமிஸ் நுழைவாயில் சரக்குகளை வழங்க நாசா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.

உடனே விண்ணப்பியுங்கள்
போட்டியின் விதிமுறைப்படி பேலோடுகள் ஒரு சிறிய இடத்திற்குள் பொருந்த வேண்டும், தோராயமாக ஒரு சோப்பு பெட்டியின் அளவு தான் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடம். நாசா இந்த சவாலுக்கான விரிவான வழிகாட்டுதல்களைத் தனது தளத்தில் வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள சவாலைச் சமாளிக்க முடியும் என்று நினைப்பவர்கள் நிலவில் சிறப்பாகச் செயல்படக் கூடிய மூன் ரோவரை உருவாக்கத் தயார் என்றால் உடனே விண்ணப்பியுங்கள்.

இதன் அடிப்படையில் தான் வெற்றியாளரை நாசா தீர்மானிக்கும்
இந்த போட்டியின் வெற்றியாளரை நாசா எந்த அடிப்படையில் தேர்வு செய்யும் என்பதையும் விளக்கமாகப் போட்டி வழிகாட்டுதலில் கூறியுள்ளது. நீங்கள் உருவாக்கும் திட்டத்தின் தரம், பரிந்துரைக்கப்பட்ட பேலோடின் தொழில்நுட்ப திறன்கள், அதன் சாத்தியமான தாக்கம், புதுமைகளின் நிலை மற்றும் ஒன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் அதை உருவாக்கிப் பயன்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளரை நாசா தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளது.

உங்கள் பெயரை நிலவுக்குக் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பு
சவால் தனிநபர் மற்றும் அணிகளுக்கும் திறந்திருக்கிறது. உங்கள் ரோவர் மாடலை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜூன் 8ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெற்றியாளர்களின் அறிவிப்பு ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. நீங்கள் தனிப்பட்ட முறையில் சந்திரனில் கால் பதிக்க முடியாவிட்டாலும், இந்த போட்டியில் வெற்றிபெற்றால் உங்கள் பேலோட் ரோவர் உங்கள் பெயரை நிலவுக்குக் கொண்டு செல்லும்.


Click it and Unblock the Notifications