பாதிவிலையில் ஐபோனாம்: அவுங்கள பிடிச்சு உள்ள போடுங்க சார்- போலி பேஸ்புக் விளம்பரம் மூலம் ரூ.60,000 மோசடி!
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

தொடரும் ஆன்லைன் மோசடி
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

வேலை வாங்கித்தருவதாக மோசடி
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செய்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம்.

பேஸ்புக்கில் காண்பிக்கப்பட்ட விளம்பரம்
அதன்படி அகமதாபாத்தை சேர்ந்த 27 வயதான பொறியியலாளர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும்போது அதில் ஐபோன் 11 சந்தை விலையில் இருந்து பாதி விலைக்கும் குறைவாக கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து அதை அணுகி அதன்மூலம் ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஆசை வார்த்தையின் மூலம் மோசடி
பேஸ்புக் விளம்பரம் மூலமாக 27 வயதான பொறியியலாளர் ஒருவர் தொழில்நுட்ப திருடர்களின் ஆசை வார்த்தையின் மூலம் ஏமாற்றப்பட்டார். மிகவும் குறைவான விலையில் ஐபோன் அதாவது பாதி விலைக்கும் குறைவான விலையில் ஐபோன் 11 சலுகை விலையில் கிடைப்பதாக விளம்பரம் ஒன்றும் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

பாதி விலைக்கு ஐபோன் 11
அகமதாபாத்தை சேர்ந்த 27 வயதானவர் பொறியியலாளர் கந்தர்ப் பட்டேல், தனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவர் வழக்கம் போல் தனது பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது கடந்த ஜனவரி மாதம் தனது பேஸ்புக்கில் விளம்பரமாக ஐபோன் 11 பாதி விலைக்கும் குறைவாக சலுகை விலையில் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.24,000-த்துக்கு ஐபோன்11
இந்த விளம்பரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட கந்தர்பட்டேல், அதன்மூலம் ஐபோன் 11 வாங்கத் திட்டமிட்டுள்ளார். ஐபோன் 11 சாதனத்தின் சந்தை விலை ரூ.70,000 எனவும் விளம்பரத்தில் இந்த ஐபோன் ரூ.24,000-த்துக்கு கிடைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் ஒரு தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு படேல் பேசியுள்ளார். மறுபுறம் பேசிய நபர் தனது பெயர் உத்தம்குமார் சின்ஹா என குறிப்பிட்டுள்ளார். அவர் தான் ராணுவ அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பணம் செலுத்திய பொறியியலாளர்
மேலும் இந்த ஐபோன் சலுகை விலையில் வேண்டும் என்றால் ஆரம்பத்தில் ரூ.1000 யுபிஐ மூலம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். அதன்பின் ரூ.2000 கட்டணமாக கூரியர் மூலம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரூ.4000 கூரியர் மூலம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை அனைத்தையும் படேல் செலுத்தியுள்ளார் மேலும் அன்றே ஐபோன் வீட்டுக்கு வரும் என மறுபுறம் பேசிய நபர் கூறியுள்ளார்.

ரூ.60,000-த்துக்கு மேல் செலுத்தியுள்ளார்
ஐபோன் வீடு வந்து சேராத நிலையில் படேல் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் மறுபுறம் பேசிய நபர் இந்திய ராணுவ விதிகளின்படி ஐபோன் மாடலின் பாதி தொகையை முதலில் செலுத்த வேண்டும் எனவும் சாதனம் கைக்கு வந்தபின் சலுகைவிலையை தவிர மீதத்தொகை அவர்களது கணக்குக்கு வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இப்படியே படேல் மொத்தமாக ரூ.67,300 வரை செலுத்தியிருக்கிறார்.

சைபர் போலீஸாரிடம் புகார்
இதன்பிறகே படேல் ஆன்லைன் மோசடியாளர்கள் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து குற்றவாளிகளை வேகமாக கண்டுபிடிக்கும்படி படேல் போலீஸாருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications