இதுக்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா: மின்கட்டணம் செலுத்த சொல்லி வந்த மெசேஜ்:ரூ.7 லட்சம் இழந்த பெண்.!
கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திற்கு இணைய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். ஆனாலும் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாகப் பல வழக்குகள் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்தும் தேதி காலாவதியாகி விட்டதாக எஸ்எம்எஸ் வந்ததை நம்பிய பெண் ஒருவர் மின் கட்டணம் செலுத்தும்போது ரூ.7 லட்சத்தை இழந்துள்ளார்.
அதாவது மும்பையைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவருக்கு மின்கட்டணம் தாமதம் தொடர்பாக போலி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு சைபர் மோசடியில் சிக்கி ரூ.7 லட்சத்தை இழந்துள்ளார். மேலும் இப்போது இது தொடர்பான தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கும் 65-வயது பெண் ஒருவருக்கு, அருடைய கணவரின் போனில் மின் கட்டணம் இன்னும் செலுத்தப்படாமல் இருப்பது குறித்து ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. குறிப்பாக அந்த எஸ்எம்எஸ்-இல் மின்கட்டணம் கட்டுவதற்கு இன்னும் குறைவான நேரம் மட்டுமே இருப்பதாகவும், அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உங்கள் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது.
இதுதவிர மின் துண்டிப்பை உடனடியாக தடுப்பதற்குப் பணம் செலுத்த இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என அந்த எஸ்எம்எஸ் இல் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனே இது உண்மையான மின்வாரியத்தின் அறிவிப்பாக இருக்கும் என நினைத்த அந்த பெண், அதில் குறிப்பிட்டுள்ள தொலைப்பேசி எண்ணுக்கு போன் செய்துள்ளார்.
அந்த போன்காலை எடுத்த மர்ம நபர் ஒருவர், தான் அதானி மின்வாரியத்தின் அலுவலக ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். பின்பு அந்த பெண்ணிடம் கனிவாகப் பேசியுள்ளார் அந்த மர்ம நபர். அதாவது நீங்கள் கவலைப்படவேண்டாம் பில் செலுத்துவதில் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று கூறியுள்ளார். பின்பு அந்த பெண்ணிடம் டீம் வியூவர் குயிக் சப்போர்ட் எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார் அந்த நபர்.

அவர் கூறியபடியே அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொடுத்துள்ளார் அந்த பெண். பின்னர் மீண்டும் அவருக்கு அழைத்து தனக்கு வந்த ஓடிபியையும் கூறியுள்ளார். குறிப்பாக ஓடிபி கூறிய சில நிமிடங்களில், அந்த பெண்ணின் மொபைல்போனுக்கு ரூ.4,62,959 மற்றும் ரூ.1,39,900 மற்றும் ரூ.89,000 என மூன்று பரிவர்த்தனைகளில் பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ்கள் வந்துள்ளது.
குறிப்பாக அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து மொத்தமாக ரூ.6,91,859 பணம் பிடிக்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் பெரிய பரிவர்த்தனைகளைப் பார்த்ததும், எஸ்பிஐ மோசடி நிர்வாக குழு உடனே பாதிக்கப்படவரைத் தொடர்பு கொண்டு சமீபத்திய பரிவர்த்தனை உங்களது தரப்பில் இருந்து நடைபெற்றதா என்று கேட்டுள்ளனர். ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
அதன்பின்பு சைபர் மோசடியில் தான் பணத்தை இழந்துள்ளோம் என்பதைத் தெரிந்துகொண்ட அந்த 65 வயது பெண், தனது மகளுடன் அந்தேரி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். மேலும் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் மீது IPC 420, 66(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது அனைத்து இடங்களிலும் இதுபோன்ற ஆன்லைன் மோசடி நடந்துவருகிறது. எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்களது மொபைல் போனுக்கு வரும் செய்திக்குறிப்பு முறையானது தானா என்பதைத் தெளிவாக பார்க்க வேண்டும். பின்பு ஓடிபி நம்பரை முன்பின் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம்.


Click it and Unblock the Notifications








