அம்பானியின் அடுத்த ஸ்கெட்ச்.. 2025 முதல் Jio IPO.. கைநிறைய பணத்தை ரெடி பண்ணி வச்சிக்கோங்க!
உங்களுக்கு தெரிந்த "100% வியாபாரி யார்?" என்று கேட்டால், நிச்சயமாக நம்மில் பலரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆன முகேஷ் அம்பானியைத்தான் (Mukesh Ambani) கை காட்டுவோம் (சிலர் எலான் மஸ்க் என்பார்கள், அது வேற டிப்பார்ட்மென்ட்) இப்படியாக "நாங்க கால் வைக்காத ஏரியாவே இல்ல!" என்கிற அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) ஆனது பல வகையான துறைகளில் வியாபாரம் செய்துவருகிறது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டெலிகாம் பிரிவான ஜியோ (Jio) நிறுவனமானது வருகிற 2025 ஆம் ஆண்டில் ஒரு தரமான வேலையை செய்ய உள்ளது. ஜியோ ஐபிஓ (Jio IPO) ஆனது 2025 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறியாதோர்களுக்கு ஐபிஓ என்றால் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (Initial public offering) என்பதன் சுருக்கமாகும்.

இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் என்றால் ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை (Shares) முதல் முறையாக பங்குச் சந்தையில் (Stock exchange) பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாகும். ஐபிஓ-வின் வழியாக முதலீட்டாளர்கள் (Investors) ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்களிக்கலாம்; அவரும் சேர்ந்து வளர்ச்சி அடையலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓவிற்கான எந்த தேதியையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நினைவூட்டும் வண்ணம் கடந்த 2019 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் (Reliance Retail) ஆனது 5 ஆண்டுகளுக்குள் ஐபிஓ-விற்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்து இருந்தார். ஆனால் அதன் பின்னர் ஐபிஓ டைம்லைன் (IPO Timeline) குறித்து எந்த அப்டேட்டையும் அவர் வெளியிடவில்லை.
2025 ஆம் ஆண்டில் ஜியோ ஐபிஓ-வை தொடங்குவதற்கான திட்டங்களை ரிலையன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளதாக 2 ஆதாரங்கள் தெரிவித்து உள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் அது ஒரு நிலையான வணிகம் மற்றும் வருவாயை அடைந்து, 479 மில்லியன் சந்தாதாரர்களுடன் இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாக (India's No.1 Telecom Operator) மாறியுள்ளதாக ரிலையன்ஸ் நம்புவதாகவும் ராய்ட்டர்ஸ்-ன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது
2024 ஜூலை 3 மாதத்தில் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை (Tariff Hike) செயல்படுத்தியதை தொடர்ந்து, 2024 செப்டம்பர் காலாண்டில் ஒரு பயனருக்கு ஜியோவின் சராசரி வருவாய் (அதாவது ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூசர்; Average Revenue Per User - ARPU) ஆனது ரூ.195.1 ஆக அதிகரித்துள்ளது. ஜியோவின் ரீசார்ஜ் விலை உயர்வின் முழு தாக்கம் அடுத்த இரண்டு முதல் மூன்று காலாண்டுகளில் உணரப்படும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பீடு (Valuation of Reliance Jio) தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இதற்காக வங்கியாளர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஜெஃப்ரிஸ்-ன் (Jefferies) மதிப்பீட்டின்படி, 2024 ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ-வானது 112 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டுள்ளது.
எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில், 2025 ஜியோ ஐபிஓ ஆனது இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும். இது 2024 ஆம் ஆண்டின் ரெக்கார்ட் ஆன - ஹூண்டாய் இந்தியாவின் (Hyundai India) யூஎஸ்டி 3.3 பில்லியன் ஐபிஓவை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms) ஆனது டெலிகாம் துறையில் மட்டுமின்றி டிஜிட்டல் வணிகங்களையும் (Digital businesses) கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜியோ தொடர்புடைய மற்ற முக்கியமான செய்திகளை பொறுத்தவரை, 2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும்படியான 4 வெவ்வேறு வகையான (ஜியோ ஏர்பைபர் சேவை, ப்ரீபெய்ட் சேவை, ஜியோ பாரத் 4ஜி போன்கள் மற்றும் ஜியோ சாவன் தொடர்பான) ஆபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்களை வழங்கியது. தற்போது (2025 இல்) ஜியோ தனது பங்குகளை வழங்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications