அட இது தெரியாம போச்சே.. Dubai இல் iPhone வாங்குவதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் 5 கசப்பான உண்மைகள்!
எப்போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்கிறதோ.. அப்போதெல்லாம் 2 வழக்கமான வசனங்களை ஆங்காங்கே கேட்க முடியும். ஒன்று - "கிட்னியை விற்றால் தான் இந்த ஐபோனை வாங்க முடியும்!". மற்றொன்று - "இதே ஐபோன் மாடலை துபாயில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும்!".
உண்மைதான்! துபாயில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸில்) ஆப்பிள் ஐபோன்களின் விலைகள் ஒப்பீட்டளவில் (குறிப்பாக இந்திய விலைகளுடன் ஒப்பிடும் போது) சற்றே குறைவாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் துபாயில் இருந்து ஒரு ஐபோன் மாடலை வாங்குவதற்கு பின்னால் 5 கசப்பான உலைகள் ஒளிந்துள்ளன.

"விலை குறைவு" என்பதை பற்றி பேசும் எவருமே, அந்த கசப்பான உண்மைகளை பற்றி பேசுவதில்லை; ஒருவேளை அவர்களுக்கும் கூட அது தெரியாமல் இருக்கலாம். சரி வாருங்கள்.. முதலில் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் இந்திய விலை Vs துபாய் விலையை ஒப்பிட்டு பார்த்துவிடுவோம்; பின்னர் துபாயில் இருந்து ஐபோன் வாங்குவதற்கு பின்னால் இருக்கும் சிக்கல்களை பற்றி பார்ப்போம்:
ஐபோன் 16 மாடல் ஆனது இந்தியாவில் ரூ.79,900 க்கும் துபாயில் AED 3399 க்கும் (தோராயமாக ரூ.81,000) வாங்க கிடைக்கிறது. இதேபோல ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது இந்தியாவில் ரூ.89,900 க்கும் துபாயில் AED 3799 க்கும் (தோராயமாக ரூ.91,000) வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது இந்தியாவில் ரூ.1,19,900 க்கும் துபாயில் AED 4299 க்கும் (தோராயமாக ரூ.1,03,000) வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது இந்தியாவில் ரூ.1,44,900 க்கும் துபாயில் AED 5099 க்கும் (தோராயமாக ரூ.1,21,000) வாங்க கிடைக்கிறது
மேற்கண்ட விலை ஒப்பீட்டை பார்த்த உடனேயே உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கும். நான்-ப்ரோ ஐபோன் மாடல்களை வாங்குவதில் எந்த லாபமும் இருக்காது. அதில் உங்களுக்கு எந்த சேமிப்பும் இருக்காது; மாறாக சற்று அதிகம் செலவிட வேண்டி இருக்கும்!

காரணம் - இந்தியாவில், ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் நான்-ப்ரோ மாடல்களில் நல்ல தள்ளுபடிகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் மூலம் தானாகவே நான்-ப்ரோ மாடல்களின் அசல் இந்திய விலைகள் சற்றே குறையும். ஆகையால் அவைகளை வாங்க துபாய் சந்தைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை நீங்கள் ப்ரோ மாடல்களை வாங்க திட்டமிட்டால், நீங்கள் வாங்கும் மாடலை பொறுத்து ரூ.30,000 வரை சேமிக்க முடியும்
இது மட்டுமே அந்த கசப்பான உண்மை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது வெறும் ட்ரெய்லர் தான்; மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கிறது. துபாயில் இருந்து ஒரு ஆப்பிள் ஐபோனை வாங்குவதன் மூலம் அதன் மீது கிடைக்கும் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் பரிமாற்ற தள்ளுபடிகளை இழப்பீர்கள். துபாயில் வாங்கப்படாத எந்த ஸ்மார்ட்போன் மீதும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி கிடைக்காது.
மேலும் இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், மற்ற நாடுகளுக்கும் இந்தியாவிலும் இருக்கும் விலை வேறுபாட்டை ஈடுசெய்யக்கூடிய சில சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதுபோன்ற சலுகைகள் துபாயில் கிடைக்காமல் போகலாம்.
இதுதவிர்த்து ஆன்லைனில் வாங்கப்பட்ட ஐபோன்கள் வெவ்வேறு உத்தரவாத விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கொண்டிருக்கலாம். ஆப்பிள் நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளுக்கும் சர்வதேச உத்தரவாதத்தை வழங்குகிறது. இருந்தாலும் கூட ஒரு ஐபோன், அது வாங்கப்பட்ட நாட்டிற்கு ஏற்ப உத்தரவாத விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கொண்டிருக்கலாம்.

இதோடு சேர்த்து சர்வீஸ் ஆப்ஷன்கள், ஆக்சஸெரீஸ்களின் கிடைக்கும் தன்மை மற்றும் ரெஸ்பான்ஸ் டைம் ஆனது நீங்கள் ஐபோனை வாங்கும் நாட்டை பொறுத்து மாறுபடும். மேலும் துபாயில் இருந்து ஒரு ஐபோனை வாங்கினால் நீங்கள் ஃபேஸ்டைம் கட்டுப்பாடுகளையும் சந்திக்கலாம். வீடியோ கால்களுக்கு எதிரான யுஏஇ கொள்கை ஆனது, துபாயில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் இருந்து வாங்கப்பட்ட ஐபோன்களில் பேஸ்டைம் ஆப்பை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை கொண்டிருக்கலாம்.
கடைசியாக சில சாத்தியமான இறக்குமதி வரிகளையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். துபாயில் வாங்கிய உங்கள் ஐபோனை இந்தியாவிற்கு கொண்டு வரும்போது இறக்குமதி வரிகளை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவேளை பேக்கேஜிங் இல்லாமல் ஒரு ஐபோனை பெற்றால், நீங்கள் இந்த வரிகளை தவிர்க்கலாம். சரி இப்போது சொல்லுங்கள் - ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமானதும் அதை எந்த நாட்டில் வாங்குவீர்கள்?


Click it and Unblock the Notifications








