மீண்டும் மீண்டுமா.. சிக்கிய Microsoft 365 சேவைகள்.. இன்னும் 15 நாட்கள் கூட ஆகல.. தவித்துப்போன யூசர்கள்!
மைக்ரோசாப்ட் விண்டோஸ் யூசர்கள் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் (Blue Screen of Death - BSOD) பாதிப்பில் சிக்கி 15 நாட்கள் கூட முடியாத நிலையில் மீண்டும் ஒரு சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். உலகளவில் மைக்ரோசாப்ட் 365 சேவை (Microsoft 365 Service) மற்றும் பீச்சர்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவோடு இரவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மீட்பு பணியில் ஈடுபட்டது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் என்ன சொல்கிறது? மைக்ரோசாப்ட் 365 சேவைகளில் என்ன நடக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை பார்ப்போம்.
ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் சம்பவத்துக்கு பிறகு கண்ணில் விளக்கெண்ணெய் விட்டது போல மைக்ரோசாப்ட் நிறுவனம் சேவைகளை கண்காணித்து வருகிறது. ஏனென்றால், உலகளவில் விமான டிக்கெட் சேவைகள், ஐடி நிறுவனங்களின் சேவைகள், பங்கு சந்தை சேவைகள், வங்கி சேவைகள் போன்ற பல்வேறு சேவைகள் பாதிப்பை சந்திந்தன. இப்படி இருந்தும், இப்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் மைக்ரோசாப்டின் 365 சேவைகள் மற்றும் அதன் பீச்சர்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அதன் யூசர்கள் சோஷியல் மீடியாக்களில் கடுமையாக விமர்சனத்தை வைத்து வருகின்றன. இவற்றில் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் சிக்கலை எதிர்கொண்ட பிறகும், இப்படி நடப்பது அவர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்துவதை பார்க்க முடிகிறது.
இந்த சேவைகளில் ஏற்பட்ட சிக்கல்களை தவிர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம், இரவோடு இரவாக களத்தில் இறங்கி இருக்கிறது. "இப்போது, பல்வேறு மைக்ரோசாப்ட் 365 சேவைகள் மற்றும் பீச்சர்கள் அணுகலில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தரமிழந்த செயல்திறனை ஆராய்ந்து வருகிறோம்" என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு யூசர்களுக்கு நம்பிக்கை அளித்தது.
இதற்கு பிறகு உடனடியாக புதிய அப்டேட்டை கொடுத்தது. இந்த அப்டேட் மூலம் படிப்படியாக பாதிக்கப்பட்ட சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. குறிப்பாக சேவைகள் முடங்கிய உடனேயே பிரச்சனை எழுந்த அமெக்காவிலும் சேவைகள் திரும்பப் பெறப்பட்டு இருக்கிறது. பிரபலமான ஸ்டார்பக்ஸ் ஆப் சேவைகள் முடங்கிய நிலையில், இப்போது சரியாகி இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பாதிக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு ஈமெயின் மூலம் இதை தெரிவித்துள்ளார். இதனால், மைக்ரோசாப்டின் 365 சேவைகள் மற்றும் அதன் பீச்சர்களை அணுக முடியாத சூழலானது, கிட்டத்தட்ட சரி செய்யப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், இடைப்பட்ட நேரத்தில் பல்வேறு சிக்கல்களை யூசர்கள் எதிர் கொண்டிருக்கலாம்.
இந்தியாவில் நள்ளிரவில் சேவைகள் முடங்கியதால், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரிகிறது. முன்னதாக, ஜூலை 19ஆம் தேதி ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் பாதிப்பு ஏற்பட்டது. விண்டோஸ் அப்டேட் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிலைமை விரைவில் சரி செய்யப்பட்டாலும், இடைப்பட்ட பல மணி நேரங்களில் உலகளவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்தியாவிலும் இண்டிகோ, ஆகாசா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் டிக்கெட் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மும்பை, டெல்லி போன்ற விமான நிலையங்களில் பல பயணிகளுக்கு கைப்பட எழுதப்பட்ட டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. இது சோஷியல் மீடியாக்களில் மீம் கன்டென்ட்களாகவும், பேசுபொருளாகும் மாறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








