"வேலையை விட வாழ்க்கையில் அதிகம் இருக்கிறது" Bill Gates பகிர்ந்த 5 வாழ்க்கை பாடங்கள்!
"உலகை மாற்றும் மிகப்பெரும் வேலைகளுக்கு மத்தியில், தந்தையான பின் வேலையைவிட வாழ்க்கையில் அதிகம் கற்றுக்கொள்ள இருப்பதை, நான் உணர்ந்தேன். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய எனக்கு பட்டப்படிப்பை பற்றி என்ன தெரியும்? இருப்பினும், எனது 5 வாழ்க்கை பாடங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்" என்று பில் கேட்ஸ் (Bill Gates) பட்டதாரிகளுக்கு வழங்கிய அறிவுரைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இளைமையில் ஏதோவொரு குறிக்கோளுடன் படித்து முடித்து, வேலைக்கு சென்று பல வருடங்களை கடந்த பின்பே, வாழ்க்கையை உணர்கிறோம். அப்போது பாதி வயதை நாம் கடந்திருப்போம். அந்த நேரத்தில் வாழ்க்கை நமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கும். இதை வருங்கால சந்ததியினரிடம் கொண்டு சேர்ப்பதில், உங்களுக்கொரு ஒரு நிம்மதி கிடைக்கலாம்.

இதுபோன்ற வாழ்க்கை பாடங்களை சராசரி மனிதர்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் மிகப்பெரும் தொழிலதிபர்களும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில், பில் கேட்ஸ், தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட 5 பாடங்களை பட்டதாரிகளிடையே பகிர்ந்துகொண்டுள்ளார். அண்மையில், நார்த்தென் அரிசோனா யுனிவர்சிட்டியில் (Northern Arizona University) நடந்த விழா ஒன்றில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கலந்துகொண்டார்.
அப்போது பட்டதாரி மாணவர்களிடையே உரையாற்றி பில் கேட்ஸ் கூறுகையில், "கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவனுக்கு, பட்டப்படிப்பை பற்றி என்ன தெரிந்திருக்கும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அதிகம் தெரியாது. இருப்பினும், நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட 5 பாடங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் எடுக்கும் கேரியர் (career) முடிவுகள் நிரந்தரமானவை அல்ல: படித்து முடித்த பின்பு, நீங்கள் தேர்வு செய்யும் கேரியர் முடிவானது, நிரந்தரமானவை போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல, கேரியர் முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கும். வாழ்க்கையின் அழுந்தங்கள் உங்களது முடிவை மாற்றாலாம். ஆகவே, உங்களது இலக்குகளை எப்போதும் மறுமதிப்பீடு செய்ய தயங்காதீர்கள். அதுவொரு நல்ல விஷயம். நீங்கள் திட்டமிட்டதைவிட வித்தியாசமானதாக வேறு ஏதாவது செய்வது அவ்வளவு மோசமாது கிடையாது.
புதிதாக ஏதாவது கற்றுக்கொள்வதில் பயம் இருக்கக்கூடாது: நீங்கள் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், உங்களது கேரியர் சார்ந்த விஷயங்களில் புதிதாக கற்றுக்கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்ததை திறமையாக செய்யும், அதேவேளையில் தெரியாததையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவுங்கள்: பட்டதாரிகளாகிய நீங்கள் உங்களது கல்வியையும், திறமையையும் வைத்து மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ வேண்டும். ஏனென்றால், உங்களது உதவிகள் ஒருவரது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்து, புதிய பாதையில் பயணிக்க வைக்கும். ஒருவருக்கு நீங்கள் உதவி செய்யும்போது, அந்த உதவி உங்களுடையை மற்றொரு வேலையை சிறப்பாக செய்ய வழிவகுக்கும்.
நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு வாய்ப்புகளை பெற்றுத்தரும்: நீங்கள் படித்த முடித்த பின்பு சக நண்பர்கள், பணியாளர்கள், மேலாளர்கள் என அனைவருடனும் நட்பாக இருங்கள். இது உங்களுக்கு தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாமல், தொழில்சார்ந்த ஆதரவை அளிக்கும். நீங்கள் தனியாக நடப்பதைவிட தெரிந்தவர் ஒருவருடன் நடக்கும்போது, தைரியம் கிடைக்கும் என்பதே உண்மை.
வேலையைவிட வாழ்க்கையில் அதிகம் கற்றுக்கொள்ள இருக்கிறது: எனது ஆரம்பகால வாழ்க்கையில், பணியில் முழு கவனம் செலுத்தினேன். அலுவலகத்திலேயே அதிக நேரத்தை செலவழித்தேன். ஆனால், தந்தையான பின்பு, வேலையைவிட வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
நமது உறவுகளை வளர்ப்பதற்கும், அவர்கள் உடன் வெற்றி, தோல்வியை பகிர்ந்துகொள்வதற்கும் நேரத்தை செலவழிப்பது மிகவும் அவசியமாகும். அதை புரிந்துகொள்ளும் வரை நீங்கள் காத்திருக்க கூடாது. உங்களது உறவுகளுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். ஓய்வு தேவைப்படும்போது அதை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது உறவுகள் உங்களுக்கான நேரத்தை எளிதாக ஒதுக்க தயாராக இருக்கும். நீங்களும் அப்படியே இருங்கள் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








