பிறந்து 6 மணி நேரம் கூட ஆகல.. இதான் கார்ப்பரேட் வாழ்க்கை.. கண்ணீரில் மூழ்கிய Meta பெண் ஊழியர்!
"உனக்கென்னப்பா கார்ப்பரேட் கம்பெனில வேலை, மாசம் மாசம் லட்சக்கணக்கில் சம்பளம்" என்று கார்ப்பரேட் ஊழியர்களை பார்த்து நிறைய பேர் உச்சுக்கொட்டி பார்த்திருப்போம். ஆனால், அவர்களின் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாறும் என்பதை அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
இப்படி வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில் மெட்டா (Meta) பெண் ஊழியர் ஒருவருக்கு நடந்த சம்பவம் கார்ப்பரேட் ஊழியர்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது. அண்மை காலமாக, உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஊழியர்களே, ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மைக்ரோசாப்ட் (Microsoft), மெட்டா (Meta), ட்விட்டர் (Twitter), அமேசான் (Amazon), ஃபேஸ்புக் (Facebook) போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களே தங்களது ஊழியர்களை பாரபட்சம் பார்க்காமல் தொடர்ந்து நீக்கி வருகிறது.
இவற்றில் மெட்டா (Meta) நிறுவனம் மொத்த ஊழியர்களில் கிட்டத்தட்ட 18 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 10,000 பேரை நீக்கியது. அதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 11,000 பேரை பணிநீக்கம் செய்தது. இவர்கள் முறையாக பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அதாவது, பணிநீக்கம் செய்யப்பட்ட பலருக்கு அதிகாலை 4 மணிக்கு பணிநீக்க நோட்டீஸ் சென்றுள்ளது. அதேபோல காலையில் வேலைக்கு கிளம்பி அலுவலகம் செல்வதற்குள்ளாகவே பலரும் பணிநீக்க நோட்டீஸை பெற்றுள்ளனர். இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மார்ச் மாதத்தில் மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்தது.
இவர்களில் 4,000 பேர் கடந்த இரண்டு மாதங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இப்போது மீதமுள்ள 6,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி அமெரிக்காவில் உள்ள மெட்டா நிறுவனத்தில் பணிபுரிந்த வந்த பெண் ஊழியர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு குழந்தை பிறந்த 6 மணி நேரத்துக்கு பின்பு அதிகாலையில் பணிநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சொல்லப்போனால், அவர் மருத்துவமனையில் இருந்தே வீட்டிற்கு செல்லவில்லை. இப்போது அவர் என்ன செய்வதென்று தெரியாமல் உடைந்துபோய் இருக்கிறார். வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில், இப்படியொரு சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அவர் தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் தனது துயரத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "நேற்றிரவு 11:44 மணியளவில் எனக்கு மகன் பிறந்தான். அந்த நேரத்தில் இருந்தே எங்களுக்கு பல வாழ்த்து செய்திகள் வந்தன. காலையில் வீட்டிற்கு செல்வதாக திட்டமிட்டுருந்தேன். சரியாக 6 மணி நேரம் கழித்து, எனக்கு வந்த இமெயிலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்னை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.
இதே நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது, 6 மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை எனக்கு வழங்கியது. இப்போது நான் தனித்துவிடப்பட்டுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார். இவரது பணிநீக்கம் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications