ஆதித்யா எல்1 விண்கலம்..மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த தமிழ் பெண்.. யார் இவர்?
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-57 ராக்கெட் மூலம் இன்று காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
குறிப்பாக ஏவப்பட்டதில் இருந்து மூன்று படிநிலைகளை வெற்றிகரமாகக் கடந்த நிலையில் அது சரியான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுவது இன்னும் ஒரு மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்படும். இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன்பின்னர் விண்கலன் 125 நாட்கள் பயணம் செய்து தனது இலக்கை அடையும்.

சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா- எல்1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. இதில் சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நிலவை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான் 3 திட்டங்களில் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் 2 திட்ட இயக்குநராக முத்தைய வனிதாவும், சந்திரயான் 3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேலும் செயல்பட்டனர்.
சூரியனை ஆய்வு செய்ய போகும் ஆதித்யா எல்1 (Aditya-L1) திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த நிகர் ஷாஜி (Nigar Shaji) பணியாற்றி உள்ளார். குறிப்பாக சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல்1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருக்கும் வான் இயற்பியல் மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.
குறிப்பாகத் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நிகர் ஷாஜி என்ற பெண் விஞ்ஞானிதான் இந்த ஆதித்யா எல்1 இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. அதேபோல் சேக் மீரான் - சைத்தூன் பீவி தம்பதியினரின் இரண்டாவது மகள் தான் நிகர் ஷாஜி.
1978 - 79 கல்வியாண்டில் செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்தார் நிகர் ஷாஜி. அதன்பின்னர் பிளஸ் 2 தேர்வில் 1980-1981-ம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தை பிடித்தார்.
அதன்பிறகு உயர்கல்விக்காக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படித்த அவர், அதைத் தொடர்ந்து உலக புகழ்பெற்ற பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பு படித்தார். மேலும் படிப்பை நிறைவு செய்த பின் இஸ்ரோவில் அவருக்குப் பணி கிடைத்தது.
அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்குச் சென்று நிகர் ஷாஜி விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான கூடுதல் அனுபவங்களைப் பெற்று இருக்கிறார். குறிப்பாக நிகர் ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நிகர் ஷாஜிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நெதர்லாந்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார் நிகர் ஷாஜியின் மகன் முஹம்மது. அவருடைய மகள் தஸ்னீம் பெங்களூரில் மருத்துவம் படித்து வருகிறார். குறிப்பாக இஸ்ரோவின் சூரிய ஆராய்ச்சி செய்யும் மிக முக்கிய திட்டமான ஆதித்யா L1 திட்டத்தின் இயக்குநராக உயர்ந்து தமிழ்நாட்டுக்கும், தென்காசி மண்ணுக்கும் பெருமை சேர்த்து உள்ளார் நிகர் ஷாஜி.
சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக வீரமுத்துவேல் பணியாற்றி தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமையைச் சேர்த்துள்ளார். அந்த வரிசையில் தற்போது நிகர்ஷாஜியும் தமிழகத்திற்கு மற்றொரு பெருமையைத் தேடித் தந்துள்ளார்.


Click it and Unblock the Notifications








