Chandrayaan-3 திட்டம்: நிலவு பயணத்தில் முக்கிய பங்காற்றிய விழுப்புரத்தை சேர்ந்த தமிழர்.!
சந்திரயான் 2 திட்டம் ஆனது தோல்வியில் முடிந்த நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. குறிப்பாக இந்த விண்கலம் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த சந்திரயான் 3 மூலம் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தைத் தரையிறங்கும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும் உலக நாடுகள் முழுவதும் இந்த சந்திரயான் 3 திட்டம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள சந்திரயான் 3 திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்டவர் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சந்திரயான் 3 திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். அதாவது இஸ்ரோ விஞ்ஞானியான வீரமுத்துவேல் என்பவர் சந்திரயான் 3 திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் சென்னை ஐஐடியில் படித்துள்ளார். பின்பு இவர் சந்திரயான் 2 திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் சந்திரயான் 2 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் வனிதா. தற்போது வனிதாவுக்குப் பதிலாகத் தான் வீரமுத்துவேல் இந்த சந்திரயான் 3 (Chandrayaan-3) திட்டத்திற்குத் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல. இவர் தென்னக ரயில்வேயில் டெக்னீசியானாக பணியாற்றிவர். மேலும் இவர்கள் விழுப்புரத்தில் இருக்கும் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தனர். வீரமுத்துவேல் விழுப்புரத்தில் இருக்கும் ரயில்வே பள்ளியில் படித்தார். அதன்பின்பு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் பொறியியல் படித்துள்ளார். பின்னர் முதுநிலையையும் ஆராய்ச்சி படிப்பையும் சென்னை ஐஐடியில் முடித்த வீரமுத்துவேல், தொழிற்கல்வியிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை வெவ்வேறு வகையான சூழல்களோடு வளர்ந்தார்.
இவருக்கு மத்திய அரசு துறைகளில் நிறைய வேலைகள் கிடைத்தன. இருந்தபோதிலும் வீரமுத்துவேல் அந்த பணிகளில் சேரவில்லை. அதன்பின்பு கடந்த 2014-ம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்தார் வீரமுத்துவேல். குறிப்பாக இவர் இஸ்ரோ தலைமையகத்தில் விண்வெளி உள்கட்டமைப்பு அலுவலகத்தின் துணை இயக்குநராகவும் இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார்.

குறிப்பாக இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு கீழே 29 துணை இயக்குநர்களும் அவர்களுக்குக் கீழே எண்ணற்ற விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் சந்திரயான் 3 திட்டம் என்று கூறப்படுகிறது. பின்பு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான ஆய்வு சோதனை ஆகியவற்றிற்குப் பிறகு தான் சந்திரயான் விண்கலம் முழு வடிவத்தை அடைந்துள்ளது.
மேலும் இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேண்டும் என்பது வீரமுத்துவேலின் சிறுவயது கனவு ஆகும். பின்பு இவரோடு சேர்ந்து நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பு தான் இந்தியாவின் நிலவு கனவை நிறைவேற்றப் போகிறது. குறிப்பாக சந்திரயான் 3 திட்டம் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








