ரேஷனில் இனி இது கட்டாயம்.. குடும்பத்தினர் எங்கு இருந்தாலும் உடனே வரச் சொல்லுங்கள்! ஏன்?
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பை தற்போது கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாகக் கைரேகை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் மின்னணு ரேஷன் கார்டு (Ration Card) நடைமுறைக்கு வந்ததிலிருந்து, குடும்பத் தலைவர்கள் கைரேகை பதிவு மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுவருகின்றனர். இதற்கிடையில், ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று கூட்டுறவுத் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது, அந்த கைரேகை பதிவு நடைமுறை அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைரேகையைப் பதிவு செய்தால், கார்டில் பெயர் உள்ள எந்த உறுப்பினரும் ரேஷன் கடைகளில் இருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம், உரிய பயனாளர்களுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடிவதுடன், பொருட்கள் தவறான நபர்களிடம் செல்வதையும் தடுக்க முடியும்.
இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கட்டாயமாகக் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து, கைரேகை பதிவை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் உயிரிழந்திருந்தால், அவர்களது விவரங்களை உடனடியாக கூட்டுறவுத் துறைக்குத் தெரிவித்து, ரேஷன் அட்டையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படும் பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இதனாலேயே, குடும்பத்தில் உயிரிழந்த உறுப்பினர்களின் விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு கூட்டுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டில் ஆதார் கார்டை இணைத்து விட்டனர். ஆனாலும் சிலர் இன்னும் இணைக்காததால், ஆதார் இணைப்பு மற்றும் கைரேகை பதிவை விரைவாக நிறைவு செய்யுமாறு இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கைரேகை பதிவு செய்வது எப்படி?
ரேஷன் கார்டில் கைரேகையை பதிவு செய்ய, முதலில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். அங்கு பணிபுரியும் ஊழியரிடம் கைரேகை பதிவு செய்ய விரும்புவதாக தெரிவித்தால், அவர் உங்கள் ரேஷன் கார்டு விவரங்களை e-PoS கருவியில் பதிவு செய்து, ஆதார் எண்ணை சரிபார்ப்பார்.

அதன்பிறகு, கைரேகை ஸ்கேனர் கருவியில் உங்கள் விரலை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கைரேகை, ஆதார் தரவுத்தளத்தில் உள்ள கைரேகையுடன் பொருந்தினால், உங்கள் ரேஷன் கார்டில் கைரேகை வெற்றிகரமாக இணைக்கப்படும்.
குறிப்பாக, ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கைரேகை பதிவு செய்ய முடியும். இன்னும் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், தேவையான ஆவணங்களுடன் ரேஷன் கடை ஊழியர்களை அணுகி, ஆதார் இணைப்பு செயல்முறையை முதலில் நிறைவு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications