ஜூலை 1 முதல் என்னென்ன மாறியது? பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்கள்!
இன்று (ஜூலை 1) முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிதி நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. கிரெடிட் கார்டு விதிமுறைகள், பாஸ்போர்ட் சேவைக் கட்டணங்கள், ரயில்வே அபராதங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சிலிண்டர் விலை
ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று ( July 1), வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையில் அதிரடி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை ரூ.183.50 வரை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் அளித்துள்ளன. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், குடும்பப் பயன்பாட்டு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு இந்த விலைக் குறைப்பு பொருந்தாது.

ஆதார் இலவச அப்டேட்
ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை (Email ID) புதுப்பிப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 கட்டணத்தை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க விரும்பும் பயனாளர்கள் கூடுதல் செலவின்றி இந்த சேவையைப் பெற முடியும்.
இந்த கட்டணச் சலுகை 2026 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என UIDAI தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், ஆதார் மொபைல் செயலி மூலம் மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு
எஸ்பிஐ கார்டு நிறுவனம், தனது PhonePe SBI Credit Card (PURPLE மற்றும் SELECT BLACK) வகை கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்டு புள்ளிகள் வழங்கும் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட செலவினங்களுக்கு வழங்கப்படும் ரிவார்டு புள்ளிகளுக்கான வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சில குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளுக்கு இனி ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், சம்பந்தப்பட்ட கார்டுதாரர்கள் புதிய விதிமுறைகளை அறிந்துகொண்டு கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது அவசியம்.

பாஸ்போர்ட் கட்டணம்
அதாவது மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், வரும் ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. புதிய கட்டண விவரங்களின்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், தட்கல் முறையில் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500-இல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.2,000-இல் இருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் முறையில் பெறுவதற்கான கட்டணம் ரூ.4,000-இல் இருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதனை தட்கல் முறையில் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500-இல் இருந்து ரூ.4,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொலைந்து போனது அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தட்கல் முறையில் இந்த சேவையைப் பெற ரூ.7,500 செலுத்த வேண்டும். 'போலீஸ் கிளியரன்ஸ்' சான்றிதழ் (Police Clearance Certificate) மற்றும் பிற இதர பாஸ்போர்ட் சேவைகளுக்கான கட்டணம் ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்பட்டு வரும் 10 சதவீத கட்டணச் சலுகை தொடரும் என்றும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடுமையான ரயில்வே அபராதங்கள் அமல்
ஜூலை 1 முதல் ரயில் பயணிகளுக்கான சில புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்வது, நடைபாதை வியாபாரம் மேற்கொள்வது மற்றும் பிச்சை எடுப்பது போன்ற செயல்களுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
EPFO 3.0 விரைவில் அறிமுகம்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது புதிய EPFO 3.0 சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய அமைப்பின் மூலம், தனியார் துறை ஊழியர்கள் தங்களின் பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் வசதிகள் மூலம் எளிதாகவும் விரைவாகவும் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications