ஜூன் 1 முதல் செலவு எகிறுமா? LPG கேஸ், ATM கட்டணம், வருமான வரி விதியில் அதிரடி மாற்றம்.. என்னென்ன மாறப் போகுது?
ஜூன் 1 (June 1), 2026 முதல் இந்தியாவில் வரி, வங்கி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, கேஸ் சிலிண்டர், ஏடிஎம் மற்றும் சோலார் துறைகளில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் பொதுமக்கள், சம்பளதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் அன்றாட நிதி நடவடிக்கைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில், 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் அட்வான்ஸ் டேக்ஸ் (Advance Tax) தவணையை செலுத்துவதற்கான கடைசி நாள் ஜூன் 15ஆம் 2026 ஆகும். ஆண்டிற்கான நிகர வரி பொறுப்பு ரூய10,000-ஐ தாண்டும் வரி செலுத்துவோர், மொத்த வரியின் 15 சதவீதத்தை இந்த தேதிக்குள் கட்டாயம் செலுத்த வேண்டும். புதிய வருமான வரி சட்டம் 2025 மற்றும் வருமான வரி விதிகள் 2026 கீழ் நடைபெறும் முதல் அட்வான்ஸ் டேக்ஸ் சுற்று இதுவாகும். காலக்கெடுவை தவறவிட்டால் மாதத்திற்கு 1 சதவீத வட்டி அபராதம் விதிக்கப்படும்.

சம்பளதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, பழைய வரி முறையில் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வரிவிலக்கு மாதம் ரூ.100 இலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதி (Hostel) செலவுக்கான வரிவிலக்கும் மாதம் ரூ.9,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, புனே, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்கள் 50 சதவீத வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) வரிவிலக்கு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கான விதிகளில் இனிமேல் யுபிஐ (UPI) மூலம் கியூஆர் கோட் ஸ்கேன் செய்யும்போதோ அல்லது மொபைல் எண்ணுக்கு பணம் அனுப்பும்போதோ, பெறுநரின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட உண்மையான பெயர் திரையில் காட்டப்படும். இதன் மூலம் அனுப்பப்படும் பணமானது உண்மையான நபருக்கு சென்று சேரும்.
அதே நேரத்தில், ஈபிஎப்ஓ தனது உறுப்பினர்களுக்கு யுபிஐ வழியாக பிஎப் தொகையை நேரடியாக பெறும் வசதியை அறிமுகப்படுத்தும். இது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. இது பிஎப் பணம் பெறும் செயல்முறையை மேலும் வேகமாக்கும். வங்கி சேவைகளில் சில கட்டண உயர்வுகளும் வர உள்ளன. பல வங்கிகள் ஏடிஎம்களில் பணம் எடுப்பது, மினி ஸ்டேட்மென்ட் பெறுவது மற்றும் இருப்பு விசாரணை செய்வது போன்ற சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
எரிசக்தி துறையில், எல்பிஜி (LPG), சிஎன்ஜி (CNG) மற்றும் பிஎன்ஜி (PNG) விலைகள் வழக்கம்போல் ஜூன் 1 முதல் மறுஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்த நிலையில், இந்த மாத விலை அறிவிப்பை பொதுமக்கள் கவனமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சிறுசேமிப்பு திட்டங்களான பிபிஎப்க்கு 7.1 சதவீதமும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 8.2 சதவீதமும் வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.பான் (PAN) கார்டு தொடர்பான விதிகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சொத்து விற்பனைக்கு பான் கட்டாயம் தேவைப்படும் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ரூ.45 லட்சத்திற்கும் அதிகமான சொத்து பரிவர்த்தனைகள், பரிசளிப்பு பத்திரங்கள் மற்றும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்களுக்கு பான் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் எடுப்பவர்கள் கண்காணிப்பின் கீழ் வருவார்கள்.
சோலார் துறையிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. ஜூன் 1 முதல் அரசு மானியம் பெறும் அல்லது நெட் மீட்டரிங் வசதி கொண்ட அனைத்து புதிய சோலார் திட்டங்களிலும் ஏஎல்எல்எம் (ALMM) பட்டியலில் இடம்பெற்றுள்ள சோலார் பேனல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் ஆரம்பத்தில் சோலார் அமைப்பு செலவு சற்று அதிகரிக்கலாம் என்றாலும், தரமான உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications